டெல்லியில் தீவிரமடையும் இளைஞர்கள் போராட்டம்: நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி, பாதுகாப்பு பலப்படுத்தல்
National

டெல்லியில் தீவிரமடையும் இளைஞர்கள் போராட்டம்: நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி, பாதுகாப்பு பலப்படுத்தல்

Jul 20, 2026

நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியில் நடைபெற்று வரும் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஒரு மாதமாக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இயக்கத்தின் முக்கிய முகமாக உள்ள சோனம் வாங்சுக், கடந்த 20 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி போலீசார் அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து, கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட முயன்றதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தின் முக்கிய நுழைவாயில்கள் மூடப்பட்டன.

மேலும், டெல்லியில் பெருமளவில் மக்கள் கூடுவதைத் தடுக்க பாதுகாப்பு காரணங்களுக்காக 5 மெட்ரோ நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதாகவும், சில பகுதிகளில் இணையதள சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பதற்றமான சூழலில், போராட்டத்திற்கு தீர்வு காணும் முயற்சியாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பிரதிநிதிகள் இன்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பின் முடிவு, டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வரும் இளைஞர்களின் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *