
இந்திய சாதிய முதலாளித்துவத்தின் வர்க்கப்பகுப்பாய்வு (1)
சாதிய முதலாளி வர்க்கம்:
இந்தியாவின் சாதிய முதலாளித்துவத்தோட சாதிய முதலாளி வர்க்கத்தைப் பத்தி “பணம் பேசுறேன்” தொடர்கட்டுரையில பாத்தோம். அதுக்கப்புறம் ஜனநாயகம்குற பேருல நடக்குற சர்வாதிகாரத்தைப் பத்தி, உயர்சாதி முதலாளி கும்பலோட சர்வாதிகாரத்தைப் பத்தி பேசவேண்டியிருந்துச்சு. ஒன்னுக்கும் ஆகாத இந்த முதலாளிநாயகத்துல ஜனநாயகமும் வாழல, அறிவியலும் வாழலன்னு பாத்துட்டோம். இதுனால வர்க்கப் பகுப்பாய்வு இடையிலேயே தடைபட்டுருச்சு. அதோட தொடர்ச்சியை இப்ப பாப்போம். கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் (MCA) சமீபத்திய தரவுகளின்படி (2025, ஃபிப்ரவரி), இந்தியாவுல இப்போ 28 லட்சத்து 31ஆயிரத்து இருநூத்தி தொன்னுத்தி ரெண்டு (28,31,292) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இருக்கு, இவற்றுல சுமார் 18 லட்சத்து 33 ஆயிரத்து நூத்தி எழுபது (18,33,170) நிறுவனங்கள் தான் செயல்பாட்டுல இருக்கு. அதாவது மொத்தமுள்ள எல்லா நிறுவனங்கள்லயும் 65% நிறுவனங்கள் தான் செயல்பாட்டுல இருக்கு. 2025 ஜனவரி நிலவரத்தோட ஒப்பிடும்போது செயல்பாட்டுல இருக்குற பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களோட எண்ணிக்கை ஃபிப்ரவரில 0.03% கொறைஞ்சுருக்கு. செயல்பாட்டுல இருக்குற இந்த 18,33,170 தனியார் நிறுவனங்களோட முதலாளிகளும் சாதிய முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவங்க தான். இந்த 18,33,170 நிறுவனங்கள்ல 1,759,741 நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனங்களாகவும் (private limited companies), 73,429 நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களாகவும் (public limited companies) இருக்கு. விகிதாச்சார அடிப்படையில சொல்லனும்னா 18,33,170 நிறுவனங்கள்ல 96% நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனங்களாகவும், 4% நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களாகவும் இருக்கு. பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட மொத்த மூலதனத்துல (total paid-up capital) வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனங்களுடையது 39%ஆகவும், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களுடையது 61%ஆகவும் இருக்கு. அதுசரி வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம்னா (private limited companies) என்ன? ஒரு நிறுவனத்தோட பங்குகள் முழுசுமே ஒரு சில முதலாளிகளிடம் மட்டுமே இருந்துச்சுன்னா அந்த நிறுவனத்தை வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள்னு சொல்லலாம். இந்த நிறுவனங்களோட பங்குகளை பொதுமக்கள் வாங்குற மாதிரி பங்குச்சந்தையில விக்க மாட்டாங்க. அப்டின்னா வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள்னா (public limited companies) என்ன? ஒரு நிறுவனம் தன்னோட மூலதனத்தை பொதுமக்களிடமிருந்து திரட்டனுச்சுன்னா அதை வரையறுக்கப்பட்ட பொது நிறுவனம்னு சொல்லலாம். இந்த நிறுவனம் தன்னோட பங்குகளை பொதுமக்களிடம் விக்கிறதன் மூலமா அதுக்குத் தேவையான மூலதனத்தைத் திரட்டுது. ஒரு நிறுவனத்தை நடத்த 10 லட்சம் ரூபாய் மூலதனம் தேவைப்படுதுனு வெச்சுக்குவோம். இந்த பத்து லட்ச ரூபாயையும் ரெண்டே ரெண்டு முதலாளிகள் மட்டும் போட்டாங்கன்னா அது ‘பிரைவேட் லிமிடேட் கம்பெனி’. இதுல அதிகபட்சமா 200 பேர் முதலீடு பண்ணலாம். அப்படி இல்லாம அந்த நிறுவனத்தை பதிவு செய்யுறதுக்கான தொகையை ஒரு 16,000 ரூபாயை மட்டும் தான் முதலாளி போடுறாரு, மிச்சமுள்ள 9 லட்சத்து 84 ஆயிரம் ரூபாயை பொதுமக்களிடமிருந்து தான் கறக்குறாருன்னு வெச்சுக்கங்க அந்த நிறுவனம் தான் ‘பப்ளிக் லிமிடெட் கம்பெனி’. இந்த நிறுவனத்துக்கு குறைந்த பட்சம் ஏழு பங்குதாரர்களாவது இருக்கனும். அதிகபட்சமா எத்தனை பேர் வேணாலும் இருக்கலாம்.
(தொடரும்)
தோழர் சமந்தா
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்