சண்டிகர்: ஆபரேஷன் சிந்தூர் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளைப் பதிவிட்டதாகச் சொல்லி அசோகா பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக யுவ மோர்ச்சா தலைவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த மாத கடைசியில் நடந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. அதற்குப் பதிலடியாகப் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இலக்குகளை இந்திய பாதுகாப்புப் படைகள் திட்டமிட்டு துல்லியமாகத் தகர்த்தது. ஆபரேஷன் சிந்தூர் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பேராசிரியர் கைது இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூர் குறித்து தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலிகான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டுள்ளார். இதை உதவி காவல் ஆணையர் அஜீத் சிங் உறுதி செய்துள்ளார். அலி கான் மஹ்முதாபாத் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டதாக அஜீத் சிங் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவர் கூறிய சில கருத்துகள் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அஜீத் சிங் குறிப்பிட்டார்.
இதற்கிடையே தனது பேராசிரியர் கைது செய்யப்பட்டது குறித்து அசோகா பல்கலைக்கழகமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர், “பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டுள்ளது எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் விவரங்களை உறுதி செய்து வருகிறோம். விசாரணையில் போலீசார் மற்றும் உள்ளூர் நிர்வாகத்திற்குப் பல்கலைக்கழகம் தொடர்ந்து முழுமையாக ஒத்துழைப்பை அளிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் ஆணையம்
ஆபரேஷன் சிந்தூர் குறித்த அவரது கருத்துகள் தொடர்பாக ஹரியானா மாநில மகளிர் ஆணையம் இணைப் பேராசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பிய சில நாட்களுக்குப் பிறகு இந்த கைது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மே 12ஆம் தேதி அனுப்பப்பட்டிருந்த நோட்டீஸில், சோனிபட்டில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறைத் தலைவர் மஹ்முதாபாத் வெளியிட்ட சில கருத்துகள் குறித்து மகளிர் குழு தானாக முன்வந்து கவனத்தில் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக ஹரியானா மகளிர் ஆணைய தலைவர் ரேணு பாட்டியா கூறுகையில், “நாட்டின் மகள்களான கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் நாட்டிற்கே பெருமை. ஆனால் அரசியல் அறிவியல் கற்பிக்கும் பேராசிரியர் பயன்படுத்திய வார்த்தைகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது… அவர் மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி வருத்தம் தெரிவிப்பார் என்று நான் எதிர்பார்த்தேன்” என்றார்.
ட்வீட்கள்
மேலும், மஹ்முதாபாத்தின் ட்விட்டர் கருத்துகளும் அதில் இணைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றில் கர்னல் குரேஷியைப் பாராட்டும் வலதுசாரிகள் கும்பல் படுகொலை மற்றும் புல்டோசர் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என மஹ்முதாபாத் ட்வீட் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல மற்றொரு ட்வீட்டில் கர்னல் குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங்கின் செய்தியாளர் சந்திப்பு வெறும் ஆப்டிக் என கூறியிருந்தார். களத்தில் அவை எதிரொலிக்காத வரை அது வெறும் பாசாங்குத்தனம் மட்டுமே என அவர் கூறியிருக்கிறார். இதுபோல அவர் கூறிய கருத்துகளே சர்ச்சையைக் கிளப்புவதாக இருக்கிறது. பாதுகாப்புப் படையில் உள்ள பெண்களை இழிவுபடுத்தும் நோக்கிலும் அவர்களின் பங்கைக் குறைத்து மதிப்பிடும் நோக்கிலும் மஹ்முதாபாத்தின் கருத்துகள் இருப்பதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
விளக்கம்
இருப்பினும், மகளிர் ஆணையம் தனது கருத்தைத் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதாக இணைப் பேராசிரியர் மஹ்முதாபாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “மகளிர் ஆணையம், அதன் அதிகார வரம்பை மீறியுள்ளது. அதேபோல அவர்கள் எனது பதிவுகளைத் தவறாகப் புரிந்து கொண்டதால், நான் சொல்ல வந்த அர்த்தமே தலைகீழாக மாறியுள்ளது.
அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும், இந்திய ஆயுதப் படைகளின் உறுதியான நடவடிக்கையைப் பாராட்டுவதற்கும், வெறுப்பை விதைப்பவர்களை விமர்சிக்கும் வகையில் பேச்சு சுதந்திரத்தின் கீழ் தான் நான் எனக் கருத்துகளைக் கூறியிருக்கிறேன்” என்று கூறியிருந்தார். இருப்பினும், அவர் மீது புகார் அளிக்கப்பட்டதால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.