வங்கதேசத்தில் கொடூரம்: இந்து இளைஞர் கார் ஏற்றிப் படுகொலை – இனரீதியான தாக்குதலா என விசாரணை!
டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், எரிபொருள் நிரப்பும் மையத்தில் பணியாற்றிய இந்து இளைஞர் ஒருவர் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி:
வங்கதேசத்தின் ராஜ்வாரி மாவட்டத்தில் உள்ள கோலண்டா மோர் பகுதியில் ‘கரிம்’ என்ற எரிபொருள் நிரப்பும் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சனிக்கிழமை (ஜனவரி 17, 2026) அதிகாலை 4:30 மணியளவில் கருப்பு நிற எஸ்யுவி (SUV) வாகனம் ஒன்று வந்துள்ளது.
அங்கு பணியில் இருந்த ரிபன் சாகா (30) என்ற இளைஞர் எரிபொருள் நிரப்பியுள்ளார். ஆனால், அதற்கான பணத்தைச் செலுத்தாமல் காரை ஓட்டிச் செல்ல முயன்ற ஓட்டுநரைத் தடுக்க, ரிபன் சாகா கார் முன்பாக நின்றார். அப்போது, அவர் மீது காரை ஏற்றி சுமார் சில மீட்டர் தூரம் நெடுஞ்சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர். இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்த ரிபன் சாகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அரசியல் தொடர்பு மற்றும் கைது:
இந்தச் சம்பவம் தொடர்பாக ராஜ்வாரி சதார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, காரின் உரிமையாளர் அப்துல் காசிம் மற்றும் ஓட்டுநர் கமல் உசைன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். இதில் அப்துல் காசிம், வங்கதேச தேசியக் கட்சியின் (BNP) முன்னாள் மாவட்ட பொருளாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனரீதியான தாக்குதலா?
வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாகவே இந்துக்களுக்கு எதிராகத் திட்டமிட்ட வன்முறைகள் நடைபெற்று வருவதால், இது வெறும் விபத்தா அல்லது இனரீதியான வெறுப்புணர்வால் செய்யப்பட்ட கொலையா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
