திருப்பூர் மங்கலம் சாலை, எஸ்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக பிரச்சார அணி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, செல்வம் மதுபோதையில் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த செல்வம், பிடிபட்ட வாகன ஓட்டிகளில் தனக்குத் தெரிந்தவர்கள் இருப்பதாகக் கூறி, அவர்களை விடுவிக்குமாறு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
காவலர் மீது தாக்குதல் முயற்சி
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த செல்வம் அங்கிருந்த ஒரு இருசக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மெட்டை (Helmet) எடுத்து, பணியில் இருந்த காவலர் கருப்பையா என்பவரைத் தாக்க முயன்றுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற போலீசார், உடனடியாக செல்வத்தைத் தடுத்து நிறுத்தி அவரிடமிருந்த ஹெல்மெட்டைப் பறித்தனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
போலீசார் அதிரடி நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட காவலர் கருப்பையா அளித்த புகாரின் அடிப்படையில், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த செல்வத்தை நேற்று போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பாஜக நிர்வாகி ஒருவர் மதுபோதையில் காவலரைத் தாக்க முயன்ற சம்பவம் திருப்பூரில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
