
மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!
குடியரசு 02.06.1945 இதழில் தந்தை பெரியார் எழுதிய கட்டுரையை நம் முன் முழுமையாக விரித்து வைத்துப் படித்துக் கொள்வோம்:
உறவு முறை
மக்கள் சமூகத்தில் சொந்தம் பாராட்டவும், சொத்துக்கள் அனுபவிக்கவும், கலவிகள் செய்யவும் உறவுமுறை என்பதாக ஒரு நியதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அந்நியதிக்கு எவ்விதக் கொள்கையும் ஆதாரமும் இல்லாமலும்-உலகமெங்குமுள்ள மனித சமூகத்தில் ஒரேவிதமான உறவு முறை அனுஷ்டிக்கப்படாமலும் – தேச ஆச்சாரம், சாதி ஆச்சாரம், மத ஆச்சாரம், பழக்க வழக்கம் என்கின்ற பல வகையான மார்க்கங்களைப் பின்பற்றியே உறவு முறைகள் கையாளப்படுகின்றன; யாதொரு நியாயமும் காரணமும் சொல்லப்படாமலே பின்பற்றப்படுகின்றன. அவ்வளவோடு மாத்திரமல்லாமல், இம்முறைகள் – சிறிதும் தவறாமல் மிகவும் ஜாக்கிரதையாய்க் கையாளப்படவேண்டும் என்கின்ற நிர்ப்பந்தங்களுக்கும் ஆளாகியிருக்கின்றன.
ஆகவே, இவைகளை எல்லாம் பார்த்தால், உறவு முறைகள் என்பவை அர்த்தமற்ற பழக்க வழக்கத்தில் கட்டுப்பட்டதாகவும், குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகவும்தான் காணப்படுகின்றனவே தவிர, அவசியங்களை அறிந்து கொண்டதாகக் கருதமுடியவில்லை.
உதாரணமாக, சகோதரர்கள் விஷயத்தில் ஆண் சகோதர உறவுக்கு ஒரு முறையும், பெண் சகோதர உறவுக்கு ஒரு முறையும் கையாளப்பட்டு வருகிறது. ஆண் சகோதரன் வயிற்றில் பிறந்த குழந்தைகளைத் தங்கள் தங்கள் குழந்தைகளாகவும் பெண் சகோதரி வயிற்றில் பிறந்த குழந்தைகளைத் தாங்கள் கலியாணம் செய்யத்தக்க பந்தத்துவம் உடையவர்களாகவும் இந்துக்களில் பெரும்பாலோர் கருதுகிறார்கள்.
முஸ்லிம் சமூகத்திலோ, பெண் சகோதரி மகளைக் கலியாணம் செய்து கொள்ளுவது தகாது என்றும், சிறிய தகப்பனார், சிறிய தாயார் பெண்ணைக் கலியாணம் செய்வது தகும் என்றும் கருதப்படுகிறது.
சில சமூகங்களில் ஒருவித இரத்தக் கலப்பும், முன் சம்பந்தமும் இல்லாதிருந்தாலும் குலங்கள் பெயரையும் கோத்திரங்கள் பெயரையும் பார்த்துக் கொண்டு அதன் பேரிலேயே கலவிக்கு – கலியாணத்துக்கு முறைகள் வைத்துக்கொள்ளப்படுகின்றன.
கிறிஸ்தவர்கள் சமூக உறவு முறை என்பது எவ்விதக் கட்டுப்பாட்டுக்கும் உடன் படாமல் கண்மூடித்தனமாய் ஏதோ ஒரு முறையைப் பின்பற்றப்படுவதாய் இருக்கின்றது.
வேறு நாடுகளில், தன்கூடப் பிறந்த சகோதரிகளையே – அதாவது ‘சயாம்’ தேசத்தில் ஆரிய மதத்தைப் பின்பற்றுகின்ற அரசர்கள் தம்கூடப் பிறந்த தங்கையையே மணந்துகொண்டு கலவி செய்கிறார்கள். பவுத்த இராமாயணத்தில், இராமனுக்குச் சீதை உடன் பிறந்த தங்கை என்றும், அக்காலத்தில் ஆரியர்களில் ஒரே தாய் தகப்பன் வயிற்றில்
பெண்சாதி இறந்து விட்டால், உடனே அந்த அரசனின் மகள் இராணியாக (அரசன் மனைவியாக) ஆகி விடுகிறாள் என்றும் அரசன் இறந்து விட்டால் உடனே மகன் அரச (கணவ)னாக ஆகி விடுகிறான் என்றும் – அதாவது உண்மையான புருஷன் – மனைவியா ஆகி விடுகிறார்கள் என்றும் பார்த்த ஞாபகம் இருக்கிறது.
இவைகளை எல்லாம் யோசிக்கும் போது, கலவி முறை என்பதும் சொத்து முறை என்பதும் பெரும்பாலும் தேசாச்சாரம், மதாச்சாரம், அல்லது சாதியாச்சாரம் பழக்க வழக்கம் முதலியவற்றைப் பொறுத்து இருக்கின்றனவே தவிர, வேறு நியாயமான- நிர்ப்பந்தமான-உலகமெங்கும் ஒரே வழிதுறையான, காரண காரியமான முறை கிடையவே கிடையாது என்றுதான் யூகிக்க வேண்டியதாக இருக்கிறது. இது விஷயத்தில் மற்ற உயிர்களின் இயற்கைச் சுபாவங்களும் எவ்வித வரையறைக்குக் கட்டுப்பட்டதாகவும் காண முடிய வில்லை. நமது பழங்காலப் புராணங்களைப் பார்த்தால், தான் பெற்ற மகளையும் தன்னை ஈன்ற தாயையும் புணர்ந்த கதைகள் பல இருக்கின்றன. முறையற்ற விபச்சாரத்தன சம்பந்தமான கதைகள் எண்ணிறந்தவைகள் இருக்கின்றன. குருவின் மனைவி, சகோதரன் மனைவி ஆகியவர்களைக் கலவி செய்வது குற்றமாகக் கருதப்படவில்லை. பிள்ளைப் பேற்றுக்காக வேறு புருஷனுடன் செய்யும் கலவி குற்றமாகக் கருதப்படவில்லை. சில
இடங்களில் பிராமணர்களுடன் கலவி செய்வதைப் பிசகென்று கருதுவதில்லை. கடவுள்கள் ‘பக்தப்’ பெண்களிடம் கலவி செய்த கதைகள் அனந்தம்.
ஆகவே, இவ்விஷயங்களில் இன்னதுதான் சரி; இன்னதுதான் தப்பு என்று குறிப்பிடுவதற்கு இல்லாமல் இருந்து வருகிறது. ஆனாலும், கலவிக்கான வைத்திய முறைப்படியும், தேக தத்துவ முறைப்படியும் சில முறைகள் கற்பிக்கப்பட்டிருப்பதைக் குற்றமென்று சொல்ல இதுவரை எவரும் முற்படவில்லை. ஆதலால், இதைப் பகுத்தறிவுள்ள மனிதன் ஒப்புக் கொண்டாகவே வேண்டும் என்றும் சொல்லலாம்.
என்றாலும், கலவியைப் பற்றிய காரியங்களுக்குப் பாவம், புண்ணியம், கடவுள் தண்டனை, மானம் என்பவைகள் பொருத்தம் ஆகும்படியாக எவ்வித-குறிப்பிட்ட ஒரே மாதிரியான முறையும் கண்டுபிடிக்க முடியாமலிருந்து வருகின்றதென்பது மேற்கண்ட விஷயங்களால் கருதவேண்டி இருக்கிறது.
இந்த உறவு முறை சம்பந்தம், கலவி சம்பந்தம் மாத்திரமல்லாமல், மற்றும் மனித ஒழுக்க சம்பந்தமான பல காரியங்களிலும், பாவ புண்ணியம் நிர்ணயிக்கவோ, நன்மை தீமை நிர்ணயிக்கவோ முடியாமல்-இதுபோலவே தேசத்துக்கு ஒரு முறை, மதத்துக்கு ஒரு தினுசு, வகுப்புக்கு ஒரு மார்க்கம், சாதிக்கு ஒரு மார்க்கம்- என்பதாகத்தான் இருந்து வருகிறது.
ஆகவே, இவ் விஷயங்களை எடுத்துக்காட்டி, ‘ மனிதன் எப்படி நடந்துகொள்வது?’ என்னும் கேள்விக்கு, பொது அறிவும் ஆராய்ச்சியுமுள்ள மனிதன் என்ன சொல்ல முடியும் என்று யோசிக்கும்போது-சமயோசிதம் என்பதைத் தவிர வேறு வழிகாட்டி இருப்பதாக அறிய முடியவில்லை என்பதற்காகவே இவ்வுறவு முறை விஷயத்தை உதாரணமாக எடுத்துக்காட்ட வேண்டியதாயிற்று.
(‘குடிஅரசு’-கட்டுரை-2-6-1945)
என்ன சொல்ல வருகிறார் பெரியார்?
1) சொத்துறவு, குடும்ப உறவு, பாலுறவு இவற்றையெல்லாம் சேர்த்து உறவுமுறை என்கிறார் பெரியார். இந்த உறவுமுறை மாந்தர்கள் அனைவருக்கும் ஒரேவிதமாக இல்லை. நாடு, சாதி, மதம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது. அந்தந்தக் காலத்துக்கும் அந்தந்தப் பிரிவிலும் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கின்றனர்.
2) இந்தக் கட்டுப்பாடுகளுக்கு ஒரே விதமான நியாயம் இல்லை. எது செய்யத்தக்கது? எது செய்யக் கூடாதது? என்று ஒரே விதமான வரைமுறைகள் இல்லை (அதாவது விழுமியங்கள் மாறுபடுகின்றன.) புராணக் கதைகளும் மதத்துக்கு மதம் மாறுபடும் மண உறவுகளும் இதைச் சுட்டி நிற்கின்றன.
3) ஆனால் அறிவியல் நோக்கில் (வைத்திய முறை, உடற்கூறு நூல்) இடம்பெற்றுள்ள சில கட்டுப்பாடுகளைப் பகுத்தறிவுள்ள மாந்தர்கள் ஏற்க வேண்டும்.
4) இதில் பாவம், புண்ணியம், ஆண்டவன் கட்டளை, மானம் என்றெல்லாம் அனைவருக்கும் பொருந்தக் கூடிய வழிமுறைகள் காணப்பட வில்லை.
5) ஆகவே, மனிதர்களாகிய நாம் எப்படி நடந்து கொள்வது? பொது அறிவும் ஆராய்ச்சியும் உள்ள மனிதன் என்ன செய்யலாம்? சமயோசித வழியில் சிந்தித்து நடந்து கொள்ள வேண்டும்.
பகுத்தறிவுள்ள மனிதர்கள் அறிவியல் நோக்கிலான கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டும் (கூறு எண் 3), சமயோசித வழியில் சிந்தித்து நடந்து கொள்ள வேண்டும் (கூறு எண் 5) – இந்த அறிவுரைகள் பொதுவாக அறிவியல் நோக்குடைய அனைத்து மனிதர்களுக்குமானவை. தனியொருவர் தன் விருப்பம் போல் நடந்து கொள்வதற்கு உரிமம் வழங்குகிறவை அல்லவே அல்ல.
கலவியில் வரைமுரையற்ற புராணக் கதைகள் அறிவுள்ள மனிதர்களுக்கானவை அல்ல. சமயோசிதமாக அவற்றைப் புறந்தள்ளி விட்டு அறிவுநோக்கில் ஒழுக்கமாக வாழ வேண்டும். பெரியார் சொல்லும் ”உறவு முறை”யிலிருந்து நாம் கற்க வேண்டியது இதுவே.
”பக்தி என்பது தனிச் சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து” என்று காலமெல்லாம் கற்றுத்தந்த எம் அறிவாசானிடமிருந்து வேறு எதையோ எதிர்பார்க்க வக்கிர மனங்களால்தான் முடியும்.
தாய், அக்காள் தங்கை, மகள் என்று பாராமல் உடலிச்சையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று நேரடியாகவோ சுற்றடியாகவோ பெரியார் சொல்லவில்லை, சொல்லவே இல்லை. அப்படிச் சொன்னதாக அவதூறு செய்தவர்கள் வருந்துவதே சமயோசிதமாக இருக்கும்.
பெரியார் சொல்லும் புராணக் கதைகள் வெறும் கட்டுக்கதைகள் அல்ல. இன்று அவை ஆபாசக் குப்பைகளாகத் தெரியலாம். ஒரு காலத்தில் மாந்த குல வாழ்க்கையின் படிநிலைகள்தான், மாந்தக் குல வரலாற்றுத் தடத்தில் உண்மையில் நிகழ்ந்தவற்றின் தொன்மங்கள்தான், சமூக வளர்ச்சிப் போக்கின் ஒரு பகுதிதான் குடும்பம் எனும் நிறுவனத்தின் படிமலர்ச்சியும் கூட.
கலவி ஒழுக்கமும் குடும்ப ஒழுக்கமும் எவ்வாறு மாறி மாறி வந்தன? என்பதை நாம் அறியப் பயன்படும் இரு நூல்கள்:
- லூயி ஹென்றி மோர்கன்: தொன்மைக் குமுகம் (ANCIENT SOCIETY)
- பிரெடெரிக் எங்கெல்ஸ்: குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்
பின்குறிப்பு: சமயோசிதம் என்ற சமற்கிருதச் சொல்லுக்கு ஐயா அருளியார் அயற்சொல்லகராதியில் தரும் பொருள்:
சமயப் பொருத்தம், சமயப் பொருத்த நுட்பறிவு.
தொடர்கிறேன்…
தோழர் தியாகு,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.