தாய் கேர்’ மையங்கள்; குழந்தைக்கு 1 கிராம் தங்க மோதிரம்! தமிழக பட்ஜெட் 2026 மருத்துவத் துறை அதிரடிகள்!
தமிழக பட்ஜெட் 2026-ல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.23,357 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
“தாய்க்கு பாதுகாப்பு; குழந்தைக்கு தங்கம்!” – புதிய நலத்திட்டங்கள் அறிவிப்பு!
மருத்துவத் துறையில் அறிவிக்கப்பட்ட முக்கியத் திட்டங்கள் இதோ:
“அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் ‘தாய் கேர்’ என்ற பெயரில் கர்ப்பிணிகளுக்கான சேவை மையங்கள் அமைக்கப்படும்.
மகப்பேறு நாள் நெருங்கும் பெண்கள் இலவசமாகத் தங்கி உணவு மற்றும் சிகிச்சை பெறலாம்.
‘தாய் கேர்’ மையங்களை அமைக்க ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.”
1,000 நடமாடும் சிகிச்சை மையங்கள்; புற்றுநோய் பராமரிப்பு சேவை!
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பிற முக்கியச் சுகாதாரத் திட்டங்கள் வருமாறு:
- நடமாடும் சிகிச்சை மையங்கள்: மூத்த குடிமக்களுக்காகத் தமிழகம் முழுவதும் 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் ரூ.33 கோடியில் தொடங்கப்படும்.
- கிராமப்புற சேவை: மருத்துவக் குழுவினர் கிராம ஊராட்சிகளுக்கு நேரில் சென்று இலவச பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்குவர்.
- தொலைமருத்துவக் கட்டமைப்பு: கிராம மக்களுக்குச் சிறப்பு மருத்துவம் கிடைக்க ‘மையம் கிளை’ தொலைமருத்துவ வலையமைப்பு ரூ.18.5 கோடியில் உருவாக்கப்படும்.
- புற்றுநோய் சிகிச்சை: மண்டல புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனைகள் நிறுவப்பட்டு விரிவான அறிக்கை தயாரிக்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- கூடுதல் மருந்து நிதி: நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் மருந்துகளுக்குக் கூடுதல் நிதியாக ரூ.100 கோடி உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு மொத்தம் ரூ.23,357 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
