சிறையில் உள்ள திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை இன்று சந்திக்கிறார் உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சர் விஜய் குறித்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ள விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சந்திக்க உள்ளார்.
மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதிலிருந்து, இந்த நடவடிக்கையை திமுக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் சிறைச் சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது, மார்க்கண்டேயனின் உடல்நிலை, சிறை வசதிகள் மற்றும் வழக்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் கேட்டறிவார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கட்சியின் முழுமையான ஆதரவு அவருக்கு தொடர்ந்து இருக்கும் என்பதையும் உறுதியளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, மார்க்கண்டேயனை சிறையில் நேரில் சந்தித்து அவரது உடல்நிலை மற்றும் சிறை வசதிகள் குறித்து கேட்டறிந்திருந்தார்.
மார்க்கண்டேயன் கைது விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் தமிழக அரசு இடையே அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் இந்த சிறைச் சந்திப்பு மாநில அரசியலில் மேலும் கவனம் ஈர்த்துள்ளது.
