தேசிய விருதுகள் வென்ற தமிழ் கலைஞர்களுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து
சென்னை: 2024-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் திரையுலகம் 10 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள நிலையில், விருது பெற்ற கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கு முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படமாகத் தேர்வானது, ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு சமூக அக்கறையை ஊக்குவிக்கும் விருது கிடைத்தது, நடிகர் தனுஷ் சிறப்பு பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றது, ‘அமரன்’ படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சிறந்த இயக்குநராக தேர்வு செய்யப்பட்டதும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதைப் பெற்றதும் பெருமைக்குரிய சாதனை என குறிப்பிட்டார்.
மேலும் ‘மகாராஜா’, ‘மெய்யழகன்’ உள்ளிட்ட திரைப்படங்களும் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றிருப்பது தமிழ்த் திரையுலகின் வளர்ச்சியை வெளிப்படுத்துவதாகக் கூறிய அவர், மொத்தம் 10 தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ள தமிழ் கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார். எதிர்காலத்திலும் தமிழ்த் திரைப்படங்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் மேலும் பல விருதுகளைப் பெற வாழ்த்துகள் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தேசிய விருது பெற்ற ராயன், கேப்டன் மில்லர், அமரன் உள்ளிட்ட திரைப்படங்களின் படக்குழுவினருக்கும் கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர்களின் கலைப்பணி தொடர்ந்து பல்வேறு அங்கீகாரங்களைப் பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய விருதுகள் தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளதாகக் கூறி, விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். அவர்களின் அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்கும் கிடைத்த தகுதியான அங்கீகாரமே இந்த விருதுகள் என பாராட்டினார்.
வி த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை, நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து, தமிழ் திரையுலகின் பெருமையை அவர்கள் உயர்த்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அமரன், கல்கி திரைப்படக் குழுவினருக்கும், மலையாள நடிகர் மம்மூட்டி உள்ளிட்ட தேசிய விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து, இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு அவர்கள் அளித்த பங்களிப்பை பாராட்டினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், தேசிய திரைப்பட விருதுகள் கலைஞர்களின் திறமையை அங்கீகரிக்கும் உயரிய விருதுகள் என்றும், தமிழ் திரையுலகுக்கு ஒரே ஆண்டில் 10 தேசிய விருதுகள் கிடைத்திருப்பது மிகப்பெரிய பெருமை என்றும் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விடாமுயற்சி மற்றும் அயராத உழைப்பின் மூலம் தேசிய விருது வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த அனைத்து கலைஞர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
