சென்னையில் 162 மகளிர் பேருந்து சேவைகள் குறைப்பு? பயணிகள் அதிருப்தி
Tamilnadu

சென்னையில் 162 மகளிர் பேருந்து சேவைகள் குறைப்பு? பயணிகள் அதிருப்தி

Jul 10, 2026

சென்னையில் மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த மாதம் இயக்கப்பட்ட மகளிர் விடியல் பயணப் பேருந்துகள் உட்பட மொத்தம் 162 பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில், 100-க்கும் மேற்பட்ட மகளிர் விடியல் பயணப் பேருந்துகள் இயக்கத்தில் இருந்து குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள் மற்றும் தினசரி அரசு பேருந்துகளை நம்பி பயணிப்போர் சிரமத்தை சந்திப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சென்னையின் பல்வேறு பகுதிகளில், குறிப்பிட்ட நேரங்களில் மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் போதுமான அளவில் இயக்கப்படுவதில்லை என்றும், இதனால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.

காலை மற்றும் மாலை உச்சநேரங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அதிக கூட்ட நெரிசலில் பயணம் செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் விவாதமாக மாறியுள்ள நிலையில், மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவைகளை மீண்டும் பழைய அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக போக்குவரத்துத் துறை சார்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *