மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கும் ஒன்றிய அரசு: கேரளா உயர்நீதிமன்றம் சரமாரி விமர்சனம்!
Politics

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கும் ஒன்றிய அரசு: கேரளா உயர்நீதிமன்றம் சரமாரி விமர்சனம்!

Oct 8, 2025

வயநாடு நிலச்சரிவு நிவாரணம்: பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குவதில் ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக கேரள உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு பெரும் இழப்பைச் சந்தித்த கேரள மாநிலத்திற்கு வழங்கப்படும் நிதி, குஜராத் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் மிகக் குறைவாக இருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்:

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பல நூறு பேர் உயிரிழந்தனர். சுமார் ரூ. 2,221 கோடி மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக நிதி வழங்குமாறு கேரள அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், ஒன்றிய அரசு ஆரம்பத்தில் ரூ. 260.65 கோடி மட்டுமே ஒதுக்கியதாகவும், இந்தத் தொகைகூட உடனடியாக வழங்கப்படவில்லை என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியிருந்தார்.

அதேசமயம், குஜராத் மற்றும் அசாம் போன்ற மாநிலங்கள் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டபோது, மத்திய அரசு அவற்றிற்குத் தேவையான நிதியைத் தாராளமாக ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வேறுபாட்டைச் சுட்டிக்காட்டியே உயர்நீதிமன்றம் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

கடன் தள்ளுபடி மறுப்புக்குக் கடும் கண்டனம்:

இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் டாக்டர் ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் நீதிபதி ஜோபின் செபாஸ்டியன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “பேரிடர் காலங்களில் ஒன்றிய அரசு மக்களுக்குத் துணை நிற்கத் தவறிவிட்டது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளும் இந்த அணுகுமுறை தொடரக்கூடாது,” என்று எச்சரித்தது.

மேலும், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் வங்கிகளில் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என மத்திய அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிபதிகள் நிராகரித்தனர். கடனைத் தள்ளுபடி செய்ய ரிசர்வ் வங்கியின் (RBI) விதிமுறைகள் தடையாக இருப்பதாக ஒன்றிய அரசு கூறியதற்கு, “இந்திய ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையால் வரம்பு உண்டா? நீங்கள் powerless (அதிகாரமற்றவர்கள்) இல்லை; செயல்படத் தயங்குகிறீர்கள். இக்கட்டான இந்த நேரத்தில், ஒன்றிய அரசு மக்களைக் கைவிட்டுவிட்டது. உங்கள் தர்மம் (Charity) எங்களுக்குத் தேவையில்லை,” என்று நீதிபதிகள் காரசாரமாகக் கருத்துத் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களின் கடன் வசூல் நடவடிக்கைகளுக்குத் தற்காலிகத் தடை விதித்த உயர்நீதிமன்றம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடன் தள்ளுபடி செய்யாதது குறித்து விளக்கம் அளிக்க அவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *