செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளில் உறுதிமொழி கூட்டங்கள் – செப்டம்பர் 20 மாவட்ட வாரியாக பொதுக்கூட்டங்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை!!
Tamilnadu

செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளில் உறுதிமொழி கூட்டங்கள் – செப்டம்பர் 20 மாவட்ட வாரியாக பொதுக்கூட்டங்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை!!

Sep 9, 2025

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் காணொலிக் காட்சி வழியாக இன்றைய தினம் (செப்டம்பர் 9, 2025) நடைபெற்ற கூட்டத்தில், கழகத் தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். இக்கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தல், கட்சியின் நகர்வுகள், மக்களுக்கான திட்டங்கள், மற்றும் கழகத்தின் அடுத்தடுத்த செயல்திட்டங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசினார்.

கடந்த ஒரு தசாப்த வளர்ச்சியை மீட்டெடுத்த ஆட்சி

“கடந்த பத்தாண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியால் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதாளத்தில் தள்ளப்பட்டது. ஆனால், கழகத் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு 11.19 விழுக்காடு வளர்ச்சி பெற்று, இந்தியாவில் முதலிட மாநிலமாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது,” என்று அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு முதலீடு – ரூ.15,516 கோடி

ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்ற பயணத்தில் ஈர்க்கப்பட்ட முதலீட்டை பற்றியும் முதல்வர் கூறினார். “இந்தப் பயணம் ஹிட் ஆகும் என்று சொன்னேன். சொன்ன மாதிரியே, அது சும்மா ஹிட் இல்லை… ‘சூப்பர் ஹிட்’ ஆகியுள்ளது. ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இந்த வெற்றிக்கு காரணம் நான் மட்டும் அல்ல. என்னுடன் பக்கபலமாக நிற்கிற கழகத் தோழர்களும், தமிழ்நாட்டின் மக்களும் தான் காரணம்,” என்றார்.

2026 தேர்தல் இலக்கு – திராவிட மாடல் 2.0

“தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் நோக்கம் நம்மிடம் உள்ளது. அதற்காக இந்த முதலீடுகளை ஈர்ப்பது மட்டும் போதாது. 2026 தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவது அவசியம். அதற்காக ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை ஜூலை 3-ஆம் தேதி தொடங்கினோம். இன்று ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களை அந்த இயக்கத்தில் இணைத்துவிட்டோம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

“2026-ஆம் ஆண்டு வெற்றி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டும் கிடைக்கக்கூடிய வெற்றி அல்ல; அது தமிழ்நாட்டின் மொத்த வெற்றி. எனவே, தேர்தல் நாள் வரைக்கும் ஓய்வு என்ற சொல்லையே மறந்துவிட வேண்டும்,” என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஒற்றுமை – மண், மொழி, மானம் காக்கும் உறுதி

எதிர்க்கட்சிகள் போலி செய்திகள், கவனச் சிதறல்கள் மூலம் மக்களை குழப்ப முனைவதாக அவர் குறிப்பிட்டார். “ஆனால் மக்களை ஒன்றிணைத்து, தமிழ்நாட்டின் மண், மொழி, மானத்தை காக்கும் வலிமை நமக்கே உள்ளது. அந்த வலிமையை வெளிப்படுத்தும் நாள் செப்டம்பர் 17-ஆம் தேதி முப்பெரும் விழா,” என்று குறிப்பிட்டார்.

அண்ணா பிறந்தநாளில் உறுதிமொழி கூட்டங்கள்

அதற்கு முன், செப்டம்பர் 15-ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் உறுதிமொழி கூட்டங்கள் நடத்தப்படும். அந்தந்த வாக்குச்சாவடிகளில் இணைந்த குடும்பங்களுடன், BLA, BDA, BLC உறுப்பினர்கள் பங்கேற்பர். “இது நிறைவு விழா அல்ல. தேர்தல் வரை நம் பயணத்தின் தொடக்க விழா இது,” என்று தெரிவித்தார்.

கரூரில் முப்பெரும் விழா – மாவட்ட வாரியாக பொதுக்கூட்டங்கள்

“செப்டம்பர் 17-ஆம் தேதி கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில், மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான உடன்பிறப்புகள் பங்கேற்பார்கள். அனைவரும் பாதுகாப்பாக வரவும் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்க வேண்டும். மேற்கு மண்டல பொறுப்பாளராக இருக்கும் செந்தில்பாலாஜி, இந்நிகழ்வுக்காக தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருகிறார். அனைத்து மாவட்டச் செயலாளர்களும் அவருக்கு துணை நிற்க வேண்டும்,” என்று ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

முப்பெரும் விழாவுக்குப் பின், செப்டம்பர் 20-ஆம் தேதி கழக மாவட்டங்கள் வாரியாக ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.

ஓய்வறியாத உழைப்பே வெற்றியின் கருவி

முதல்வர் உரையை நிறைவு செய்தபோது, “2026 தேர்தல் வரை, பசி – தூக்கம் – ஓய்வு என்பவற்றை மறந்து கடுமையாக உழைக்க வேண்டும். நாம் எல்லோரும் ஓய்வறியாமல் பணியாற்றினால், 2026-லும் நாமே உதிப்போம். அது வெறும் கழக வெற்றி அல்ல; தமிழ்நாட்டின் முழுமையான வெற்றி ஆகும்,” என்று உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *