அமெரிக்க குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் அதானி குழுமம் பெரும் பரப்புரை இயக்கத்தைத் தொடங்கியது
அமெரிக்க நீதித்துறை (DOJ) நவம்பர் 20, 2024 அன்று அதானி குழுமத்தின் மீது ஒரு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. இந்தியாவிலுள்ள எரிசக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, அந்தக் குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, அவரின் மருமகன் சாகர் அதானி மற்றும் பிற மூத்த நிர்வாகிகள் “ஒரு மிகப்பெரிய கையூட்டுத் திட்டத்தை” அரங்கேற்றியதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் அதானி குழுமம் மேற்கொண்டுவந்த பரப்புரை நடவடிக்கைகளின் உத்தி முற்றிலுமாக மாறியது. ஆரம்பத்தில் ஒரு சாதாரண வணிக பரப்புரை நடவடிக்கையாக இருந்த இது, மிக உயரிய சட்ட மற்றும் பரப்புரை நிறுவனங்கள் இரண்டையும் பணியமர்த்தும் ஒரு இலக்கு சார்ந்த முயற்சியாக மாறியுள்ளது. இது ஒரு நெருக்கடி மேலாண்மை பிரச்சாரமாகத் தெரிகிறது.
2023 முதல் 2025 வரையிலான கூட்டாட்சி பரப்புரை குறித்த தகவல்களின் பகுப்பாய்வு, அமெரிக்க சட்ட மற்றும் ஒழுங்குமுறை அழுத்தங்கள் அதிகரித்தபோது, அதற்கு அதானியின் எதிர்வினை மூன்று கட்டங்களைக் கொண்ட ஒரு தனித்துவமான உத்தியைக் காட்டுவதாக உள்ளது. இந்தத் தரவுகள், அமெரிக்க அரசியலில் பணத்தின் தாக்கத்தைக் கண்காணிக்கும் ஒரு ஆய்வு குழுவான ஓபன்சீக்ரெட்ஸ் மூலம் கிடைக்கப்பெற்றது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் “ஆதாரமற்றவை” என்று மறுத்துள்ளது. நவம்பர் 21-ம் தேதி ஒரு பத்திரிகை அறிக்கையில், அனைத்து செயல்பாடுகளிலும் “உயரிய நிர்வாகத் தரங்கள், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை இணக்கம்” ஆகியவற்றை எப்போதும் நிலைநிறுத்தி வருவதாகக் கூறியுள்ளது.
முதல் கட்டம், 2023: தொடக்கம், சாதாரண வணிக பரப்புரை
2023 முழுவதும், வாஷிங்டன் டி.சி.யில் அதானி குழுமத்தின் பரப்புரை நடவடிக்கை மிகவும் சிறியதாகவும், வணிக இலக்குகளை மையமாகக் கொண்டும் இருந்தது.
அந்த ஆண்டில் பரப்புரைக்காக மொத்தம் $40,000 மட்டுமே செலவிடப்பட்டது. இந்த முயற்சி, அதானியின் துணை நிறுவனமான அதானி சோலார் USA-ஆல் மட்டுமே உள்முகமாக இயக்கப்பட்டது. இதில் ஒரே ஒரு பரப்புரையாளர், அனுராக் வர்மா, பதிவு செய்யப்பட்டிருந்தார்.
வணிகத் துறையில், நிறுவனத்தின் சூரிய ஆற்றல் வணிகம் மற்றும் பொது வர்த்தக தொடர்பான விஷயங்களில் அதன் ஆர்வத்தைக் காட்ட, வர்த்தகத் துறை, வெளியுறவுத் துறை, அமெரிக்காவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் வெளிநாட்டு தனியார் முதலீட்டுக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகளுடன் ஈடுபடுவது இதன் நோக்கமாக இருந்தது.
இந்த முயற்சியை நிர்வகித்தவர் வர்மா. இவருக்கு அமெரிக்காவில் பரப்புரை செய்வதில் விரிவான அனுபவம் உண்டு. 1990கள் முதல் வாஷிங்டனில் தங்களின் காரணங்களை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் இந்திய மற்றும் இந்திய-அமெரிக்கர்களால் இவர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இரண்டாம் கட்டம், 2024 பிற்பகுதி: குற்றச்சாட்டு மற்றும் உடனடி எதிர்வினை
நவம்பர் 2024-ல் அமெரிக்க நீதித்துறை குற்றப்பத்திரிகை வெளியிடப்பட்டதும், வாஷிங்டனில் அதானியின் உத்தியில் உடனடி மாற்றத்தைத் தூண்டியது.
குற்றச்சாட்டுக்கு விரைவான பதிலளிப்பாக, அடுத்த நாளே, நவம்பர் 21, 2024 அன்று, அதானி குழுமம் அக்கியன் கம்ப் ஸ்ட்ராஸ் ஹௌயர் & ஃபெல்ட் என்ற ஒரு பெரிய சட்ட மற்றும் பரப்புரை நிறுவனத்தை பணியமர்த்தியது. “விநியோகச் சங்கிலி தொடர்பான பிரச்சினைகள்” குறித்து பரப்புரை செய்வதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்திருந்தாலும், குற்றப்பத்திரிகைக்குப் பிறகு உடனடியாக அது பணியமர்த்தப்பட்டதால், அது நிறுவனம் எதிர்கொண்ட சட்ட நெருக்கடிக்கு ஒரு பதிலளிப்பாக இருந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது.
அக்கியன் கம்ப் ஸ்ட்ராஸ் ஹௌயர் & ஃபெல்டை பணியமர்த்தியதால், அதானியின் பரப்புரை குழுவில் ஐந்து பேர் சேர்ந்தனர். இவர்களில் நான்கு பேர், “சுழலும் கதவு” பின்னணியைக் கொண்டிருந்தவர்கள். அதாவது, அவர்கள் அரசாங்கத்தில் முன்பு விரிவான அனுபவம் பெற்றிருந்தவர்கள். குறிப்பிடத்தக்க வகையில், அந்த குழுவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இலீனா ரோஸ்-லெக்டினென்ட் என்பவரும் இருந்தார். 2024-ல் குழுவின் மொத்த பரப்புரை செலவு ஏறத்தாழ இரட்டிப்பாகி, $70,000 ஆக உயர்ந்தது. இதில் அக்கியன் கம்புக்கு $20,000 கூடுதல் பணம் செலுத்தப்பட்டது. மேலும், அதன் பரப்புரை இலக்குகள் பட்டியலில் வெள்ளை மாளிகையும் சேர்க்கப்பட்டது.
இது ஒரு சாதாரண வணிக விவகாரத்திலிருந்து உயர்மட்ட அரசியல் செல்வாக்கைத் தேடும் ஒரு முயற்சியாக மாறியதைக் குறித்தது.
மூன்றாம் கட்டம், 2025: உயர்மட்ட சட்ட நிறுவனங்களை உள்ளடக்கிய நெருக்கடி பிரச்சாரம்
குழுமத்தின் ஆவணங்களின்படி, 2025-ன் முதல் பாதியில், அதானியின் நெருக்கடி-பதில் அமைப்பு வளர்ச்சி அடைந்தது. செலவில் ஒரு பெரிய உயர்வு மற்றும் உயர்தர சட்டப் பாதுகாப்பு நிறுவனங்களான கிர்க்லாண்ட் & எல்லிஸ் LLP மற்றும் க்வின் இமானுவல் உர்குவார்ட் & சுல்லிவன், LLP ஆகியவற்றைப் பணியமர்த்தியதும் இந்த நேரத்தில் நடந்தது.
2025-ன் முதல் ஆறு மாதங்களில் மட்டுமே பரப்புரை செலவுகள் $150,000 ஆக அதிகரித்தன. இது முந்தைய முழு ஆண்டின் செலவை விட இரண்டு மடங்கு அதிகமாகும். பணியமர்த்தப்பட்ட பரப்புரையாளர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்தது.
இது சட்டப் பாதுகாப்பை நோக்கிய ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது. பரப்புரை முயற்சியின் கவனம், கையூட்டு குற்றச்சாட்டுகளுக்கு மையமாக உள்ள துணை நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜிக்கு நேரடியாக மாறியது. ஜனவரி 20, 2025 அன்று, அதானி கிரீன் எனர்ஜி அமெரிக்காவின் மிகவும் சக்திவாய்ந்த இரண்டு வெள்ளை காலர் பாதுகாப்பு சட்ட நிறுவனங்களை பணியமர்த்தியது: கிர்க்லாண்ட் & எல்லிஸ் மற்றும் க்வின் இமானுவல் உர்குவார்ட் & சுல்லிவன். இரு நிறுவனங்களுக்கான பதிவு படிவங்களும் நேரடியாக இருந்தன. “பசுமை ஆற்றல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகளில்” பரப்புரை செய்ய அவை பணியமர்த்தப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது அவர்களின் வேலையை நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்தில் உள்ள DOJ வழக்குடன் நேரடியாக இணைக்கிறது. மேலும் இது வணிக விளம்பரத்திலிருந்து சட்டப் பாதுகாப்பு மற்றும் உயர்மட்ட பரப்புரைக்கு இறுதி மாற்றத்தைக் குறிக்கிறது. புதிய பரப்புரை குழுவில், அமெரிக்க ஜனாதிபதியின் முன்னாள் துணை ஆலோசகராகவும், தற்போது க்வின் இமானுவல் உர்குவார்ட் & சுல்லிவனில் ஒரு பரப்புரையாளராகவும் இருக்கும் வில்லியம் பர்க் போன்ற உயர்மட்ட சட்ட நிபுணர்கள் இருந்தனர்.
புதிய சட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டதால், பிரதான இலக்கு வெளியுறவுத் துறை மட்டுமே. முந்தைய ஆண்டுகளில் அது ஈடுபட்டிருந்த மற்ற அனைத்து அரசு அமைப்புகளும் இனி அந்த பட்டியலில் இல்லை. கையூட்டு குற்றச்சாட்டுகள் சர்வதேச தன்மையைக் கொண்டிருப்பதாலும், வெளிநாட்டு அதிகாரிகள் இதில் ஈடுபட்டிருப்பதாலும், அமெரிக்காவில் அதன் பாதுகாப்பை நிர்வகிக்க வெளியுறவுத் துறை ஒரு முக்கியமான நிறுவனம் ஆகும்.
க்வின் இமானுவல் உர்குவார்ட் & சுல்லிவன் மற்றும் கிர்க்லாண்டின் பரப்புரை, அவர்களின் ஆவணங்களின்படி, எரிசக்தி/அணுசக்தி, சட்டம் அமலாக்கம்/நீதிமன்றங்கள்/நீதிபதிகள்/குற்றங்கள்/சிறைகள் மற்றும் சிவில் உரிமைகள் மற்றும் சிவில் சுதந்திரங்கள் தொடர்பான பரப்புரைகளை அதானி குழுமத்திற்காக வெளியுறவுத் துறையுடன் இணைந்து உள்ளடக்கியது. பல முகமைகளுக்கான முயற்சிகளிலிருந்து வெளியுறவுத் துறைக்கு மட்டும் கவனம் மாறியது, பரப்புரை முயற்சிகளின் பிரதான இலக்கு குற்றச்சாட்டுதான் என்று உணர்த்துகிறது.
கூட்டாட்சி பரப்புரை பதிவுகள் ஒரு தெளிவான மற்றும் செயல்திறன்மிக்க உத்தியை எடுத்துக்காட்டுகின்றன. வாஷிங்டனில் அதானி குழுமத்தின் ஈடுபாடு, அமெரிக்க குற்றவியல் விசாரணைக்கு நேரடி பதிலளிப்பாக, ஒரு சாதாரண வணிக முயற்சியிலிருந்து உயர்மட்ட சட்ட மற்றும் பரப்புரை நடவடிக்கையாக மாறியுள்ளது.
காலக்கோடு, செலவின அதிகரிப்பு, “ஜனாதிபதியின் துணை ஆலோசகர், ஜனாதிபதியின் சிறப்பு ஆலோசகர், துணை பணியாளர் செயலாளர்” என இருந்த ஒருவரை பிரதான பரப்புரையாளராகக் கொண்ட அரசாங்க தொடர்புகளில் நிபுணத்துவம் பெற்ற உயர்தர சட்ட நிறுவனங்களை பணியமர்த்தியது, மற்றும் “குற்றவியல் விவகாரங்களில்” பரப்புரை செய்வதற்கான நோக்கம் ஆகிய அனைத்தும், DOJ குற்றச்சாட்டினால் ஏற்படும் சட்ட மற்றும் நற்பெயர் பாதிப்பை நிர்வகிப்பதற்கான ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை சுட்டிக்காட்டுகின்றன.
