
முதலாளிகளின் ஆணைக்கிணங்க முதல் முறையாக பனையூர் பங்களாவை விட்டு வெளியே வந்து மக்களை சந்திக்கும் “பனையூர் பண்ணையார்” விஜய்.
கட்சி தொடங்கி ஒரு வருட காலமாக மக்களை களத்தில் சென்று சந்திக்காமல் ஒரு “வொர்க் ஃப்ரம் ஹோம்” அரசியல்வாதியாகவும், பாஜகவின் கைப்பாவையாகவும் திகழ்ந்து வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முதல் முறையாக மக்களை நேரில் சந்திப்பதற்காக பரந்தூர் செல்கிறார். தவெகவின் சார்பில் பரந்தூர் போராட்டக் குழுவை தவெக தலைவர் விஜய் சந்திப்பதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்க்கப்பட்டிருந்த நிலையில், வரும் 20ஆம் தேதி பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவை சந்திக்க விஜய்க்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குபட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமாா் 5,700 ஏக்கா் பரப்பளவில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க, மாநில அரசு அறிவிப்பு செய்து அதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பரந்தூரை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் 900 நாட்களுக்கு மேலாக போராட்டக் குழுவினராக, பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் வசித்து வந்தவா்களை மாற்றிடத்தில் குடியேற்ற தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம், இடங்களை தோ்ந்தெடுத்து அறிவித்து இருந்தது. ஆனாலும் பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள், அரசு வழங்கும் மாற்று இடங்களை நிராகரிப்பதாகவும், அவர்கள் தற்போது வசித்து வரும் இடங்களில் இருந்து வெளியேறுவதற்கும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் திட்டமான இந்த பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் போராட்டக் குழுக்களை நேரில் சென்று சந்திப்பதின் மூலம் தன்னை ஒரு சமூக பொறுப்புள்ள அரசியல்வாதியாக காட்டிக் கொள்ள நினைக்கும் விஜய், ஒன்றிய அரசின் மக்கள் விரோத திட்டங்கள் பற்றியெல்லாம் வாய் திறப்பதே கிடையாது என்ற விமர்சனம் தொடர்ந்து எழுந்த வருகிறது. அதை மெய்யாக்கும் வகையில் விஜய், ஒன்றிய அரசின் திட்டங்களான குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் திட்டம், மதுரையின் நாயக்கர்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத்தை அமைப்பதற்கான திட்டம் பற்றியெல்லாம் பேசாமல் மெளனமாக இருக்கிறார். அவர் பாணியில் குறைந்தபட்சம் ஒரு அறிக்கை கூட விடாமல் இருந்து வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மணப்பாடு அருகிலுள்ள மீனவ கிராமங்களில் வசிக்கும் மக்கள், குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் ஒப்புதலுக்கு பிறகு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) செயற்கைக் கோள்களை ஏவுகின்றது போல குலசேகரன்பட்டினத்திலும் அதே மாதிரியான ஒரு ஏவுதளம் அமைக்கப்படுவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமே இத்திட்டம்.
இந்த திட்டத்திற்காக திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் தாலுகாவில் 2,233 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஆனால், இதற்கு எதிராக, மணப்பாடு மீனவ கிராம மக்கள் வீதிகள், வீடுகள் மற்றும் படகுகளில் கருப்பு கொடிகளை ஏற்றி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
மணப்பாடு நலச்சங்கத் தலைவர் ஆண்ட்ரூஸ் கூறுகையில், “1971 ஆம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்ட பின்னர், 2005 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் அதை விரிவுபடுத்தினர். இதற்காக 30 கிராமங்களில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றினர். இதே நிலை எங்களுக்கும் ஏற்படக்கூடும் என்று அஞ்சுகின்றோம்,” என்றார்.
அதே போல, ஒரு திட்டத்திற்காக குடியிருப்பு பகுதிகளை தேர்ந்தெடுப்பது தவறு என்றும், திட்டத்தின் விரிவாக்கம் செய்யப்படும் போது சுற்றுவட்டார கிராமங்கள் அழிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இப்படி மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பிய இத்திட்டத்திற்கு எதிராக இதுவரை ஒரு வார்த்தை கூட பேசாமல் மெளனம் காத்து வருகிறார் விஜய், காரணம் இது ஒன்றிய அரசின் திட்டம்.
இதே போல மத்திய அரசு மதுரையின் நாயக்கர்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத்தைக் தொடங்குவதற்கான மற்றொரு மக்கள் விரோத திட்டத்தையும் தற்போது கையில் எடுத்துள்ளது.
மதுரையின் மேலூர் தாலுகாவிலுள்ள நாயக்கர்பட்டி பகுதி, 2,015.51 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது டங்ஸ்டனின் முதன்மைத் தாது பொருளான ஷீலைட் (Scheelite) நிறைந்த இடமாகும். இந்த ஷீலைட் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்களில் அத்தியாவசியமான ஒன்று. மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் கன்சல்டன்சி லிமிடெட் (MECL) இந்தப் பகுதியை டங்ஸ்டன் சுரங்கத்துக்கு உகந்ததாகக் கண்டறிந்தது. வேதாந்தா லிமிடெட்டின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜின்க் லிமிடெட், இப்பகுதியின் சிறந்த பிட் எடுபவராக தேர்வு செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்தின் பகுதிகள் அரிட்டாப்பட்டியை உள்ளடக்குகின்றன. அரிட்டாப்பட்டி, வளமான உயிரியல் தன்மைகள் மற்றும் வரலாறு, பண்பாட்டு முக்கியத்துவத்துடன் காணப்படும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரித்தப்பட்டி பகுதி பழமையான குகைக் கோயில்கள், சமண மத சின்னங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள், மற்றும் அரிதான விலங்கினங்களைப் பாதுகாக்கும் முக்கிய இடமாக உள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொல்பொருள் நிபுணர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் தமிழ் நாடு அரசு, சுரங்கச் செயல்பாடுகள் இப்பகுதியின் சூழலியல் மற்றும் பண்பாட்டுப் பன்மையைக் கொடூரமாகக் குறைக்கும் அபாயத்தை வெளிப்படுத்தினர்.
சுரங்கக் கழிவுகளான ஆஸ்னிக், கேட்மியம், மற்றும் சீசம் போன்ற கடுமையான உலோகங்களை வெளியேறக்கூடும், இதனால் நிலம் மற்றும் நீர் மாசுபடும். இதற்கிடையே, வேதாந்தாவின் சுற்றுச்சூழல் சர்ச்சைகளும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் பிரச்சினைகளும் கவலைக்குரிய முன்னணி உதாரணங்களாகும். அரிட்டாப்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இந்தத் திட்டம் மாற்றமுடியாத சூழலியல் சேதத்திற்கும், தங்கள் வாழ்வாதாரத்தின் இழப்புக்கும் வழிவைக்கும் என்று கவலைப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “எந்த சூழ்நிலையிலும் டங்ஸ்டன் சுரங்கம் அனுமதிக்கப்படாது. அது நடைபெறும் பட்சத்தில் நான் இந்த பதவியில் இருக்கமாட்டேன்.” என்று சபதம் எடுக்கும் பாணியில் கூறினார்.
சுரங்கத் திட்டங்களுக்கு மாநில அரசுகளின் ஒப்புதலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், மாநில அனுமதியின்றி எந்த சுரங்க உரிமமும் வழங்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாத ஒன்றிய அரசு, டங்ஸ்டன் சுரங்கத்தைக் தொடங்குவதற்கு அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது.
பனையூரில் இருந்து அறிக்கை வழியாகவே அரசியல் செய்து வரும் தவெக தலைவர் விஜய், இந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டம் பற்றியும் ஒரு வார்த்தை கூட பேசாமல் மெளனம் காத்து வருவதன் மூலம் இவர் சீமான் போலவே ஒன்றிய அரசால் தமிழ்நாட்டு அரசியலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மற்றொரு புரோக்கர் என்பது புலப்படுகிறது. தன் டெல்லி முதலாளிகள் தனக்கு கொடுத்த “திமுக எதிர்ப்பு” என்ற அசைன்மென்டையும் சிறப்பாகவே செய்து வருகிறார்.
இப்படி ஒன்றிய அரசின் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்க்காமல், மெளனம் காத்து, ஒன்றிய அரசின் இத்திட்டங்கள் அனைத்தையும் மறைமுகமாக வரவேற்று வரும் விஜய், தற்போது மக்களை நேரடியாக சென்று சந்திப்பதற்காக களத்தில் குதித்ததற்கு இரண்டு சுயநல காரணங்கள் இருக்கின்றன.
ஒன்று, கடந்த வருடம் பிப்ரவரி 2ஆம் தேதி கட்சியை தொடங்கிய விஜய், இந்நாள் வரை “வொர்க் ஃப்ரம் ஹோம்” அரசியல்வாதியாகவே செயல்பட்டு வருகிறார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று சந்திக்காமல் அம்மக்களை தன்னுடைய பனையூர் அலுவலகத்திற்கு வர வைத்து, அங்கு அவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டது. ஆளுநர் என்ற பதவியே தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்று தன் மாநாட்டில் அறைக்கூவல் விடுத்துவிட்டு, பின்னர் நீட் விவகாரத்திற்காக ஆளுநரை சந்தித்துவிட்டு வெளியே வந்த விஜய், செய்தியாளர்களை சந்திக்காமல், ஆளுநருடனான சந்திப்பைப் பற்றி பனையூரிலிருந்து அறிக்கை மட்டுமே வெளியிட்டார். இவருடைய கொள்கை தலைவர்கள் என அறிவிக்கப்பட்ட தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாட்களில் கூட வெளியே வராமல், அத்தலைவர்களின் உருவப்பட்ங்களுக்கு பனையூரில் வைத்தே மலர் தூவி மரியாதை செலுத்தி வருவதன் மூலம், “பனையூர் பண்ணையாராகவே” திகழ்ந்து வருகிறார் விஜய். ஆனால் தற்போது கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகும் நிலையில் யாரும் தன்னை ஒரு “பார்ட் டைம் பொலிடீசியன்” என்று கூறிவிடக்கூடாது என்பதற்காகவும், இந்திய அரசியல் வரலாற்றில் கட்சி தொடங்கி ஒரு வருடம் வரை மக்களை நேரடியாக சந்திக்காத ஒரு சோம்பேறித் தலைவர் என்ற அவப்பெயரும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே இந்த பரந்தூர் மக்கள் சந்திப்பு நாடகம்.
இரண்டாவது காரணம் சமீப காலங்களில் தவெகவில் கோஷ்டி மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. விஜய் மக்கள் இயக்கத்தில் வேலை செய்த யாருக்கும் கட்சியில் பதவி வழங்கப்படாமல், புஸ்ஸி ஆனந்தின் ஆதரவாளர்கள் பெரும்பாலனோருக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்ட போவதாகவும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. விஜய்யின் தீவிர ஆதரவாளர்கள் கட்சியில் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தன்னுடைய தந்திர செயல்பாடுகள் மூலமாக கட்சியில் தனக்கு விஜயை விட அதிக செல்வாக்கு இருப்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார் புஸ்ஸி ஆனந்த். இதை புரிந்து கொண்ட தவெகவின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோகியசாமி, புஸ்ஸி ஆனந்தின் தந்திர செயல்களை பற்றிய தகவல்களை விஜய்யிடம் தெரிவிக்க முயற்ச்சித்தாகவும், ஆனால் அதை விஜய் புரிந்து கொள்ளும் மன நிலையில் இல்லை என்றும் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் ஜான் ஆரோக்கியசாமி தொலைபேசியில் பேசும் ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகியும் கட்சியின் நிர்வாகிகளையும், மக்களையும் நேரடியாக சந்திக்காத விஜய் மீது கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி இருப்பதாகவும் ஆரோக்கியசாமி பேசியிருக்கிறார். இதனால் சுதாரித்துக் கொண்ட விஜய், கட்சிக்குள் தன் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளவும், புஸ்ஸி ஆனந்தின் ஆதிக்கத்திற்கு ஒரு முடிவு கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும், தன்னுடைய டெல்லி, நாக்பூர் முதலாளிகளின் அறிவுறுத்தலின் பேரில் மக்களை நேரில் சென்று சந்திக்கும் இந்த பரந்தூர் நாடகம் அரங்கேறப் போகிறது.