ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றத் துறை கெடுபிடி: 55 மில்லியன் அமெரிக்க விசாக்களுக்கு மறுஆய்வு!
அமெரிக்காவில் குடியேற்றவாசிகள் மீதான கெடுபிடிகளை ட்ரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், 55 மில்லியனுக்கும் அதிகமான விசா வைத்திருப்பவர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் தற்போது மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இது குறித்த ஏபி செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, விசா விதிகளை மீறும் செயல்கள் கண்டறியப்பட்டால் அவர்களை நாடு கடத்த இந்த மறுஆய்வு செய்யப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ, வெளிநாட்டு சரக்கு வண்டி ஓட்டுநர்களுக்கான அனைத்து விசாக்களையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவுத் துறை, சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைத்து அமெரிக்க விசா வைத்திருப்பவர்களும் “தொடர்ச்சியான ஆய்வு”க்கு உட்படுத்தப்படுவதாக ஏபி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. இதில் ஏதேனும் விதிமீறல் கண்டறியப்பட்டால், அந்த விசா ரத்து செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் அமெரிக்காவிற்குள் நுழையத் தகுதியற்றவராகக் கருதப்படுவார்.
அமெரிக்காவில் உள்ள ஒருவர் இவ்வாறு கண்டறியப்பட்டால், அவர் தனது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படுவார். விசா காலத்தில் கூடுதலாகத் தங்குவது, குற்றச் செயல்கள், பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு அளிப்பது போன்ற தகுதியற்ற தன்மைகளைக் கண்டறிய இந்த மறுஆய்வு மேற்கொள்ளப்படுவதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
“விசா வழங்கப்பட்ட பிறகு வெளிச்சத்திற்கு வரும் எந்த ஒரு தகவல், சட்ட அமலாக்கம் அல்லது குடியேற்றப் பதிவுகள் உட்பட அனைத்து தகவல்களையும் நாங்கள் மறுஆய்வு செய்கிறோம்” என்று வெளியுறவுத் துறை கூறியது.
இந்த செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே, அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ, வெளிநாட்டு சரக்கு வண்டி ஓட்டுநர்களுக்கான அனைத்து விசாக்களையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டிரக் ஓட்டுநர் ஹர்ஜிந்தர் சிங், புளோரிடாவில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததற்கு முக்கிய சந்தேக நபராகக் கூறப்பட்டதை அடுத்து ரூபியோ இந்த முடிவை எடுத்துள்ளார்.
“அமெரிக்க சாலைகளில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு ஓட்டுநர்கள் பெரிய டிராக்டர்-டிரெய்லர் வண்டிகளை இயக்குவது, அமெரிக்கர்களின் வாழ்க்கைக்கு ஆபத்தை விளைவிப்பதோடு, அமெரிக்க டிரக் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது” என்று ரூபியோ தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், வெளியுறவுத் துறை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், “சோதனை மற்றும் ஆய்வு நடைமுறைகளை” மறுஆய்வு செய்வதற்காக இந்த பணி விசாக்களை நிறுத்தி வைப்பதாகக் கூறியுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், விசா வைத்திருப்பவர்கள் மற்றும் விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக கணக்குகளையும் ஆய்வு செய்ய வெளியுறவுத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. “அமெரிக்க எதிர்ப்பு” நடவடிக்கைகளையும், “யூத எதிர்ப்புக் கொள்கைகளை” ஊக்குவிப்பவர்களையும் கண்டறிய சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்படும்.
“நாட்டை வெறுக்கும் மற்றும் அமெரிக்க எதிர்ப்பு சித்தாந்தங்களை ஊக்குவிக்கும் நபர்களுக்கு அமெரிக்காவின் நன்மைகள் வழங்கப்படக்கூடாது,” என்று ICE செய்தித் தொடர்பாளர் மேத்யூ டிராகேசர் இந்த மாத தொடக்கத்தில் கூறியிருந்தார்.
அரசியல் செய்திகள்
