அசாம் சட்டமன்றத் தேர்தல் 2026: வேட்பாளர் தேர்வுக்குழு தலைவராக பிரியங்கா காந்தி நியமனம் – காங்கிரஸ் அதிரடி
Politics

அசாம் சட்டமன்றத் தேர்தல் 2026: வேட்பாளர் தேர்வுக்குழு தலைவராக பிரியங்கா காந்தி நியமனம் – காங்கிரஸ் அதிரடி

Jan 6, 2026

புதுடெல்லி: அசாம் மாநிலத்தில் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியை இழந்துள்ள காங்கிரஸ் பேரியக்கம், இந்த முறை எப்படியாவது அசாமை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக தேர்தல் பணிகளை இப்போதே முடுக்கிவிட்டுள்ள காங்கிரஸ் தலைமை, ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிரியங்கா காந்திக்கு புதிய பொறுப்பு: அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வுக்குழு (Screening Committee) தலைவராக மக்களவை எம்பி பிரியங்கா காந்தி வதேராவை காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது. 2019-ல் தீவிர அரசியலில் இணைந்த பிரியங்காவுக்கு வழங்கப்பட்டுள்ள மிக முக்கியமான ஆர்கனைசேஷன் பொறுப்பாக இது பார்க்கப்படுகிறது.

வயநாடு வெற்றியும் அரசியல் அனுபவமும்: கடந்த 2024 நவம்பரில் நடைபெற்ற வயநாடு இடைத்தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற்று முதல்முறை மக்களவைக்குள் நுழைந்த பிரியங்கா, தற்போது கட்சிக்குள் செல்வாக்கு மிக்க தலைவராக உருவெடுத்துள்ளார். ராகுல் காந்திக்கு முன்பே சோனியா காந்தியின் தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்த அனுபவம் கொண்டவர் பிரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் பிரியங்கா? அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. அங்கு கூட்டணி கட்சிகளிடையே பிஹாரில் ஏற்பட்டது போன்ற குழப்பங்கள் வராமல் தடுக்கவும், தகுதியான வேட்பாளர்களை அடையாளம் காணவும் ராகுலை விட பிரியங்காவே சரியானவர் என கட்சித் தலைமை கருதுகிறது. மேலும், இவருடைய வருகை தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும் என காங்கிரஸ் நம்புகிறது.

இந்தக் குழுவில் இம்ரான் மசூத், சப்தகிரி சங்கர் உலகா மற்றும் ஸ்ரீவில்லா பிரசாத் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *