“தீப்பந்தம் எடுத்து தீண்டாமைபடுத்து” மோடில் விஜய். தவெகவில் தொடரும் ஒடுக்குமுறை! விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறார்களா திருநர்கள்?
Opinion

“தீப்பந்தம் எடுத்து தீண்டாமைபடுத்து” மோடில் விஜய். தவெகவில் தொடரும் ஒடுக்குமுறை! விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறார்களா திருநர்கள்?

Feb 12, 2025

நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகத்தில் புதிதாக மொத்தம் 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் திருநர் அணி, சிறார் அணி, ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அணி என மற்ற கட்சிகளில் இல்லாத பல அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள அணிகள் குறித்தும், சில மிக முக்கியமான அணிகள் உருவாக்கப்படாமல் விட்டதற்கான காரணங்கள் குறித்தும் விஜய்யிடம் கேட்பதற்கு நமக்கு சில கேள்விகள் இருக்கின்றன. அதை ஒவ்வொன்றாக கேட்போம்.

முதலாவதாக, சிறார் அணி (Children Wing) குறித்தான சில விளக்கங்களை விஜய் அவர்கள் கொடுக்க வேண்டும். சிறார் என்பவர்கள் 18 வயதுக்குட்பட்டோர். இந்திய தேர்தல் ஆணையம் 05.02.2024 அன்று‌ வெளியிட்ட அறிவிப்பின் படி சிறார்களை எந்த கட்சியும் தங்கள் கட்சி வேலைகளுக்காக பயன் படுத்தக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு ஈடுபடுத்துவது குழந்தை தொழிலாளர்களை உருவாக்குதல் போன்றது. இது சட்டப்படி குற்றம். இந்த அறிவிப்பைப் பற்றி விஜய்க்கு தெரியுமா? தங்கள் கட்சியின் பெரும்பாலான ஆதரவாளர்கள் 18 வயதுக்குட்பட்டோர் என்பதால் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்டதா இந்த சிறார் அணி? இதை போன்ற காரணங்களை தவெகவினர் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் தேர்தல் ஆணையம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது.

தற்போதைக்கு தன்னுடைய கடைசி படம் என சொல்லப்படும் ஜனநாயகன் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருவதால், தேர்தல் ஆணையம் வெளியிட்ட இந்த அறிவிப்பை பற்றி விஜய்க்கு தொரிந்திருக்க வாய்ப்பில்லை என்று வைத்துக் கொள்வோம். ஆனால், ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜூனா, இப்போது புதிதாக பிரசாந்த் கிஷோர் என இத்தனை தேர்தல் வியூக வகுப்பாளர்களை தன் வசம் கொண்டுள்ள தவெக தலைவருக்கு இவர்கள் யாரும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை பற்றி சொல்லாதது வேடிக்கையாக இருக்கிறது. இதை பற்றி சமூக வலைத்தளத்தில் கேட்ட போது, தவெக ஆதரவாளர்கள் சிலர், அது சிறார் அணி இல்லை என்றும், அது சிறார் நலன் காக்கும் அணி என்றும் கூறுகின்றனர். ஆனால் விஜய் சார்பிலோ, தவெக சார்பிலோ சிறார் அணி சர்ச்சை பற்றி இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

தமிழ்நாட்டின் வருங்கால ஆளும்கட்சி, வருங்கால முதல்வர் என தன் கட்சியையும் தன்னையும் பற்றியும் தற்பெருமை பேசி, பகல் கனவும் காணும் விஜய் இவ்வளவு கவனக் குறைவோடு இருப்பது கட்சிக்கும் நல்லதல்ல விஜய்க்கும் நல்லதல்ல. சிறார் அணி அமைத்தது பற்றி விரைவில் விஜய் விளக்கம் கொடுக்க வேண்டும்.

அடுத்ததாக திருநர் அணி (Transgenders Wing) பற்றிய சில கேள்விகள். திருநர் அணியை உங்கள் கட்சியில் உருவாக்கியது பாராட்டுக்குரியது. ஆனால் அந்த அணி இடம்பெற்றிருக்கும் எண் தான் இங்கு சர்ச்சையாகி இருக்கிறது.

விஜய்க்கு திருநங்கைகள் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சி பற்றி நமக்கு தெளிவாகவே தெரியும். தன்னுடைய பல படங்களில் திருநங்கைகளை இழிவுபடுத்துவது போன்ற காட்சிகளில் நடித்துள்ளார். எடுத்துக்காட்டாக திருப்பாச்சி படத்தில் இடம்பெற்றிருக்கும் “அப்பன் பண்ண தப்புல” என்ற பாடலில் 2.58 நிமிடம் முதல் 3.18 நிமிடம் வரையிலுள்ள காட்சிகளில் திருநங்கைகளை நேரடியாக “9” என்ற எண்ணை வைத்து அழைப்பது போன்ற காட்சியும், பாடல் வரிகளும் இடம் பெற்றிருக்கும்‌. இதே போல வேறு ஒரு சில படங்களிலும் நகைச்சுவைக்காக திருநங்கைகளை போல பேசுவதும், நடிப்பதும் போன்ற காட்சிகளை வைத்துள்ளார் விஜய்.

யாரோ ஒருவர் எழுதி, வேறு யாரோ ஒருவர் பாடிய‌ பாடலுக்கு வாயசைத்ததன் மூலம் இந்தி திணிப்பை எதிர்த்தார், தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தார் என விஜய்க்கு முட்டு கொடுத்து வரும் விஜய்யின் முன்னாள் ரசிகர்களே, இன்னாள் தொண்டர்களே, அதே படங்களில் உங்கள் தலைவர் திருநங்கைகளை இழிவுபடுத்தி நடித்ததையும் நீங்கள் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். இப்படி திரைப்படங்களின் வாயிலாக திருநங்கைகளின்‌ மீது தன் வன்மத்தை கக்கி வந்த விஜய் இன்று ஒரு படி மேலே சென்று அரசியலிலும் தனது திருநங்கைகள் வெறுப்பை விதைத்துள்ளார்‌.

அப்படி என்ன செய்தார்?

கூறுகிறேன்.

நேற்று தவெகவின்‌ 28 அணிகள் குறித்து அறிவிப்பு வெளியான நிலையில், அதில் திருநர் அணியை வரிசை எண் 9 இல் தவெக வரிசைப்படுத்தி உள்ளது. பல ஆண்டு காலமாக திருநர்களை “9” என்றும் மற்றும் வேறு சில இழிவான சொற்களை வைத்தும் அழைக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதை மாற்ற நினைத்த தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் டாக்டர்.கலைஞர் அவர்கள் தனது 2006-2011 ஆட்சி காலத்தில் மூன்றாம் பாலினத்தவரை “திருநங்கை” என்றும் “திருநம்பி” என்றும் அழைப்பதற்கான சட்டத்தை இயற்றினார். அவர்களின் உரிமைகளை காக்க 2008ம் ஆண்டு கலைஞர் அவர்களால் திருநங்கைகள் நல வாரியம் உருவாக்கப்பட்டது.

தன் தந்தை வழியில் செயல்பட்டு, திருநர்களின் உரிமைகளை காத்திடவும், அவர்களின் வாழ்வு மேம்படவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மூன்றாம் பாலின ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளார். இவ்வாறு திருநர்களின் மீது வீசப்பட்ட இழி சொற்களை நீக்கியும், அவர்களின் உரிமைகளை காத்திட பல்வேறு சமூக சீர்திருத்தங்களை ஆட்சியாளர்கள் கொண்டு வந்த போதிலும், விஜய்‌ தனது சுய லாபத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் திருநர்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார்‌. திருநர் அணியை 9வது இடத்தில் வைத்தது எதர்ச்சியாக நடந்தது என்று சாக்கு சொல்கின்றனர் சில தவெக நண்பர்கள்.

கண்டிப்பாக இடம் பெறாமல் தவிர்க்க வேண்டிய‌ ஒரு இடத்தில் திருநர்களை இடம் பெற செய்திருப்பது எந்த வகையிலும் மன்னிக்க முடியாத ஒன்று. இதை பற்றிய அறிவு நிச்சயமாக விஜய் போன்ற ஒரு‌ தலைவருக்கு இருந்திருக்க வேண்டும். இதற்காக விஜய்‌ நிச்சயமாக பொது வெளியில்‌ மன்னிப்பு கேட்டாக‌ வேண்டும்.

இறுதியாக விஜய்க்கு மற்றொரு கேள்வி. இத்தனை அணிகள் இடம்பெற்றுள்ள உங்கள் கட்சியில் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான அணி அமைக்கப் படாமல் இருப்பது ஏன்? சிறுபான்மையினருக்கான அணி அமைக்கப்படாதது ஏன்? ‘என்னை பொறுத்த வரையில் நாம் எல்லோரும் ஒன்று தான், எல்லோரும் சமம் தான், அதனால் என் நெஞ்சில் குடியிருக்கும்…” என உங்கள் தலைவர் மாநாட்டில் முழங்கியது போல நீங்களும் எல்லோரும் சமம் அதனால் இந்த அணிகள் அமைக்கப்படவில்லை என்று உருட்டக் கூடாது. இன்றைக்கு சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றிணைப்பது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.

இது குறித்து பெரியாரும் அம்பேத்கரும் பல்வேறு இடங்களில் பேசியும் பல்வேறு புத்தகங்களில் எழுதியும் உள்ளனர்‌. ஆனால் இவர்களை உங்கள் கொள்கை தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள், பட்டியல், பழங்குடியினர் அணி‌ மற்றும் சிறுபான்மையினர் அணியை உங்கள் கட்சியில் உருவாக்காதது வியப்பாக இருக்கிறது. உங்கள் கட்சியில் பொறுப்பு வழங்குவதில் ஆதிக்க சாதியினரால் பட்டியல் மற்றும் பழங்குடியினர் எந்த அளவிற்கு ஒடுக்கப்படுகின்றனர் என்பது பற்றிய செய்தி கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அவ்வாறு இருக்கையில் இவர்கள் அனைவரும் ஒன்றிணைவது அவர்களுக்கு மட்டுமல்லாமல் உங்களுக்கும் பலம் சேர்க்கும் தானே? அப்படி இருந்தும் யாரை திருப்தி படுத்த இந்த அணிகள் உருவாக்கப்படாமல் இருக்கின்றன? அல்லது வெறும் ஆதிக்க சாதியினரை வைத்து கட்சி நடத்த முடிவு செய்துவிட்டீர்களா? இப்படி தொடங்கி ஒரு வருடம் மட்டுமே ஆன உங்கள் கட்சிக்குள்ளேயே தீண்டாமை இருக்கும் நிலையில், நீங்கள் எப்படி மற்ற இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக முடியும் மிஸ்டர் விஜய்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *