
பாஜகவின் ஹிட்டென் அஜெண்டாவுக்கு பலியான விஜய்
சினிமாவிலும் அரசியலிலும் நுழைவதற்கு எந்த தகுதியோ திறமையோ தேவையில்லை. ஆனால் நீடித்து நிலைக்க தம்மை பயன்படுத்துகிறவர்களை உணர்ந்து சரியான நபர்களுடன் களத்தில் நிற்க வேண்டும். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான அரசியலை செய்துவரும் பாஜகவின் ஹிட்டென் அஜெண்டா அரசியல் வலையில் விழுந்திருப்பது அவரது தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் அரசியல் பயணத்தை தொடங்கி வைத்ததே பாஜக எனலாம். 2010 சமயத்தில் விஜய் அரசியல் ஆசையுடன் தன்னுடைய ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கம் என மாற்றினார். 2011 இல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் விஜய் என்று இல்லாமல் நடிகர்கள் எவருக்குமே அரசியல் ஆசை வராத மாதிரி பார்த்துக் கொண்டார். தலைவா பட தலைப்பில் டைம் டூ லீட் என்ற வரி இடம்பெற படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. ஜெயலலிதாவை சந்தித்து மன்னிப்பு கேட்க கொடநாட்டுக்கே விஜய் சென்றார். ஆனால் அப்பாய்ண்ட்மெண்ட் கிடைக்காததால் கெஞ்சி கதறி ஒரு வீடியோ போட ஜெயலலிதா மனம் இரங்கினார். ஜெயலலிதா கட்டளைப்படி அந்த டேக்லைன் நீக்கப்பட்டு படம் வெளியானது.
அதன் பின்னர் விஜய் பேட்டி தரக் கூட பயந்தே இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழ்நாட்டு ஆட்சியை பாஜக கையில் எடுத்தது. அப்போது மெர்சல் படத்தின் போது விஜய்யை நேரடியாக பாஜக விமர்சித்தது. பின்னர் ஒவ்வொரு பட ரிலீசின் போதும் பாஜக தரப்பில் இருந்து ஏதோ ஒரு நெருக்கடி தருவது போல காட்டிக் கொண்டனர். சர்கார் படத்தில் இலவசங்களை விமர்சித்து விஜய் பேசினார்.
மாஸ்டர் படப்பிடிப்பின் போது வருமான வரித்துறை ஏய்ப்புக்காக விஜய் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு பரபரப்பாக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அடுத்த காட்சி, விஜய்யின் முதல் அரசியல் மேடையான விக்கிரவாண்டி மாநாடு. இந்த மாநாட்டில் விஜய் முழுக்க முழுக்க பாஜகவின் குரலாகவே ஒலித்தார். பாஜக பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா? என்று சம்பந்தமே இல்லாமல் பேசி பாஜகவை நார்மலைஸ் செய்தார். அப்போதே விஜய் மாநாடு செலவுகளை பாஜக தான் பார்த்துக் கொண்டதாக ஒரு செய்தி அடிப்பட்டது.
விஜய்யின் இரண்டாவது அரசியல் பேச்சு பரந்தூரில். அங்கு விமான நிலையத்துக்கு எதிராக போராடியவர்களை பார்த்து பேசியவர் எந்த இட த்திலும் ஒன்றிய அரசை விமர்சிக்கவில்லை. அம்பேத்கரை அமித் ஷா அவமதித்த போதும் அமித் ஷா பெயரைக் குறிப்பிடாமல் பார்த்துக் கொண்டார்.
ஒன்றிய அரசின் பிரச்சினைகளை விமர்சிக்கும்போது கூட தமிழ்நாட்டு அரசை சம்பந்தமே இல்லாமல் இழுப்பாரே தவிர ஒன்றிய அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட இருக்காது. முதல் மாநாட்டிலேயே தனக்கு காவி சாயம் பூசுவார்கள் என்றால். ஆனால் உண்மையிலேயே காவி சாயத்தை பூசிக் கொள்வது விஜய் தான்.
இப்போது கூட மும்மொழிக் கொள்கை விவகாரத்தையும் இந்தி திணிப்பு விவகாரத்தையும் அதற்காக திமுக போராடியதையும் கொச்சைப்படுத்தினார். வரி பகிர்வில் பாரபட்சம் நடப்பதால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது விஜய்க்கு தெரியாமல் இருக்குமா? கொடுப்பது அவர்கள் கடமை, வாங்குவது இவர்கள் உரிமை என்று ஒன்றிய அரசுக்கு தான் ஆதரவாக பேசினார்.
சங்கராச்சாரியரை நல்ல சாமியார் என்று சொன்ன ஆதவ் அர்ஜூனா, பாஜகவுக்கு எதிராக பணிபுரியவே செய்யாத பிரசாந்த் கிஷோர் என விஜய் கைகோர்த்திருப்பது எல்லாம் இந்துத்வா கூட்டணி தான்.
ஆந்திராவில் பவன் கல்யாணை உருவாக்கியதுபோல விஜய்யை கொண்டு வர பாஜக திட்டமிடுகிறது. இந்த திட்ட த்தில் இருக்கும் ஆபத்தை உணர்ந்து தான் ரஜினி தப்பினார்.
பாஜக என்னும் பூதம் ஆசை காட்டித் தான் இழுக்கும். ஆனால் அதன் வாயில் சென்று சிக்கினால் எல்லோரையும் விழுங்கி ஏப்பம் விடும். பாஜக விரித்த வலையில் லேட்டஸ்டாக சிக்கியிருக்கிறார் விஜய்.