குல்லா வியாபாரி பாணியில் ஒரு ‘ரியல்’ த்ரில்லர்! குழந்தையைத் தூக்கிச் சென்ற குரங்கு: சாதுர்யமாக மீட்ட கிராமத்தினர்!
உத்தரப்பிரதேசம்: கதைகளில் மட்டுமே கேட்ட “குல்லா வியாபாரியும் குரங்கு கூட்டமும்” பாணியிலான ஒரு நிஜச் சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. ஒரு தாய் சமைக்கச் சென்ற இடைவெளியில், அவரது ஒன்றரை மாதக் குழந்தையைக் குரங்கு ஒன்று தூக்கிச் சென்றது கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடந்தது என்ன? சமைக்கச் சென்ற தாயின் கவனத்தை மீறி, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையைக் குரங்கு ஒன்று லாவகமாகத் தூக்கிக் கொண்டு கூரை மீது ஏறிக்கொண்டது. குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடி வந்த கிராமத்தினர், குரங்கை விரட்டினால் அது குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை உணர்ந்தனர்.
சாமர்த்தியமான மீட்பு: கிராமத்தினர் மிகச் சாதுர்யமாகச் செயல்பட்டனர். குரங்கின் கவனத்தைத் திசைதிருப்ப ரொட்டிகளை அதன் அருகே வீசினர். உணவைக் கண்டதும் ஆசைப்பட்ட குரங்கு, ரொட்டியை எடுப்பதற்காகக் குழந்தையைக் கீழே இறக்கி வைத்தது. அந்த நொடிப்பொழுதைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட கிராமத்தினர், மின்னல் வேகத்தில் கூரை மீது ஏறி குழந்தையைப் பத்திரமாக மீட்டனர்.
