
அடங்கிப்போக மாட்டோம். பிளவுபட மாட்டோம்.ஒற்றுமையுடன் ஓரணியில் நிற்கும் தமிழ்நாடு!” -திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

மாண்புமிகு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், திராவிட இயக்கத்தின் பண்பாட்டு மையமான மதுரையில் இன்று நடக்கும் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் “ஓரணியில் தமிழ்நாடு” எனும் பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்துள்ளார்.
நம் மண், மொழி மற்றும் தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதையை காக்கும் போரில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் ஒன்றிணைக்கும் பொருட்டு இப்பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. “ஓரணியில் தமிழ்நாடு” என்பது, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களை கட்சி உறுப்பினராக பதிவு செய்வதற்கான முயற்சியாகவும் அமைந்துள்ளது.
மாநிலத்தின் ஒவ்வொரு சாமானியரையும் இணைக்கும் முதல் மக்கள் பிரச்சார இயக்கம்
நம் மண், மொழி, சுயமரியாதையை காக்க தமிழ்நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களிடமும் (2 கோடி குடும்பங்கள்) இப்பிரச்சாரத்தை கொண்டு சென்று அதில் குறைந்தபட்சம் 1 கோடி குடும்பங்களை ஒரே தமிழ்நாடு அணியில் (ஓரணி) இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது “ஓரணியில் தமிழ்நாடு” பிரச்சார இயக்கம்.
இப்பிரச்சாரம் முழுவதும் ஓரணியில் தமிழ்நாடு எனும் செயலியின் மூலம் செயல்படுத்தப்படும். இயக்கத்தை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் இதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணை அழைத்து தங்கள் ஆதரவை தெரிவித்து இணைந்துகொள்ளலாம். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்ற விரும்புபவர்களுக்கும் உறுப்பினராக இணைய இந்த செயலி வழிவகுக்கும்.
தமிழ்நாடு மற்றும் திராவிட மாடலின் பெருமையை வலியுறுத்தும் பிரச்சார இயக்கம்
ஒன்றிய அரசின் மாநில உரிமைகளை பறிக்கும் திட்டங்கள், மொழித் திணிப்பு ஆகிய சவால்களுக்கு எதிராக பண்பாடு மற்றும் அரசியல் தளத்தில் ஒற்றுமையுடன் செயல்படுவதற்கான அழைப்பே இப்பிரச்சார இயக்கம்.
அரசியல் மற்றும் பண்பாட்டு அழுத்தங்களால் தமிழ்நாடு சூழப்படும்போதெல்லாம் “ஓரணியில் தமிழ்நாடு” ஒற்றுமை, சுயமரியாதை மற்றும் மாநிலத்தின் கூட்டாட்சி உரிமைகளை வலியுறுத்தும். மாநிலத்தின் உரிமைக் குரல்களை முடக்கவும் வலிமை இழக்கவும் ஒன்றியம் செய்யும் முயற்சிகளுக்கு இப்பிரச்சார இயக்கம் நேரடி பதிலாக அமைவதோடு மக்களாட்சியில் திமுகவின் உறுதியான பங்களிப்பையும் வெளிப்படுத்தும்.
இந்த பிரச்சார இயக்கத்தின் மூலமாக தமிழ்நாடு இந்திய ஒன்றியத்திற்கு சொல்லும் செய்தி ஒன்றுதான்.
“அடங்கிப்போக மாட்டோம். பிளவுபட மாட்டோம்.
ஒற்றுமையுடன் ஓரணியில் நிற்கும் தமிழ்நாடு!”