மாட்டிக் கொண்டாரா பெரியார்? (16)
Opinion

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (16)

Feb 20, 2025

Pcpi (மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி [இந்தியா]) என்ற முகநூல் அடையாளம் கொண்ட தோழர் சண்முகசுந்தரம் தந்தை பெரியார் தொடர்பான இந்த உரையாடலில் பின்னூட்டம் இடுகையில் சில வினாக்களைத் தொடுத்து அவற்றுக்கு என் நேர்மையான விடைகளைக் கேட்டிருந்தார். இந்த வினாக்களைப் பெரியார் தொடர்பான விவாதத்துடன் அவர் எவ்வாறு உறவுபடுத்துகிறார் என்று அவர் தெளிவாக்கவில்லை, இப்போதும் கூட அவர் தெளிவாக்கினால் நன்று.
மார்க்சியம் முதலாளித்துவ ஆளும் வர்க்க அரசை ஆதரித்து அதற்காகச் செயல்படுமா? என்ற முதல் வினாவிற்கு சென்ற இடுகையில் [மாகொபெ? (15)] எனக்குத் தெரிந்த வரை விடையிறுத்திருந்தேன். அதை அவர் படித்தாரா? தெரியவில்லை. இப்போது இரண்டாவது வினாவை எடுத்துக் கொள்கிறேன்:

// சமூக நீதி என்பது வர்க்க விடுதலையா? அல்லது சாதிய சமத்துவமா?
மார்க்சியம் சொல்கின்ற பெண் விடுதலையும் பெரியார் சொல்கின்ற பெண்விடுதலையும் ஒன்றா?//

சமூக நீதி (குமுக அறம்) என்பது மாந்தர்களிடையிலான உறவிலும் தனியொரு மாந்தருக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவிலும் நீதி (அறம்) வேண்டும் என்பதைச் சொல்கிறது. வர்க்க விடுதலை என்பது சுரண்டப்படும் வகுப்பு சுரண்டலிலிருந்து விடுதலை பெறுவதைக் குறிக்கும், இந்த விடுதலை குமுகிய (சோசலிச) அமைப்பில்தான் மெய்ப்படும். இந்த அமைப்பை நிறுவும் வரலாற்றுக் கடன் பாட்டாளி வகுப்பிற்கு உள்ளது. ஆகவே சமூக நீதி என்னும் குமுக அறமும் சோசலிசம் என்னும் குமுகியமும் ஒன்றல்ல. அதாவது சமூக நீதியும் வர்க்க விடுதலையும் ஒன்றல்ல. ஆனால் வர்க்க விடுதலைக்கான வழி சமைப்பதில் சமூக நீதிக்கு அடிப்படையான பங்குண்டு.

எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழித்து கறுப்பின அடிமைகளை விடுதலை செய்வதற்கான போராட்டம் தன்னளவில் வர்க்க விடுதலைக்கான போராட்டம் அன்று, ஆனால் அடிமைமுறைக்கு எதிரான போராட்டம் இல்லாமல் பாட்டாளிகளும் உழைக்கும் மக்களும் நிறவேற்றுமை கடந்து வர்க்க விடுதலைக்கான போராட்டத்தில் ஒன்றுபட முடியாது. அதனால்தான் அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிப்பதற்காக ஆபிரகாம் லிங்கன் நடத்திய உள்நாட்டுப் போரை மார்க்சிய மூலவர்கள் போற்றினார்கள். ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க முதலாளித்துவ வல்லரசின் அதிபரக இருந்த போதும் அவரை கார்ல் மார்க்ஸ் மெச்சத் தவறவில்லை. அமெரிக்காவின் கறுப்பின அடிமைமுறைக்கு எதிரான போராட்டத்தை ஐரோப்பாவில் தொழிலாளர் வகுப்புப் போராட்டத்தோடு மார்க்சியம் உறவுபடுத்தியதைத் தோழர் சண்முகசுந்தரம் போன்றவர்கள் படித்துப் பார்க்க வேண்டும்.

மூலமுதலில் (CAPITAL) கார்ல் மார்க்ஸ் தெளிவாக அறிவித்தார்:
கறுப்புத் தோலில் உழைப்பு அடிமை முத்திரையோடு இருக்கும் வரை வெள்ளைத் தோலில் அதனால் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது.

“Labor in the white skin can never free itself as long as labor in the black skin is branded.” — Karl Marx, Capital

எளிமையாகச் சொன்னால், கறுப்புத் தொழிலாளி அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும் வரை வெள்ளைத் தொழிலாளியால் விடுதலை பெற முடியாது. அடிமைமுறைக்கு எதிரான போராட்டத்தில் வெள்ளைத் தொழிலாளர் வகுப்பு நேர் அக்கறை கொண்டிருப்பதையும், தெற்கு அமெரிக்காவில் அடிமை முறைக்கும் வடக்கு அமெரிக்காவில் தொழிலாளர் வகுப்பு சுரண்டப்படுவதற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதையும் மார்க்ஸ் தெளிவாகப் பார்த்தார்.
அடிமை முறையை ஒழிப்பதற்கான போராட்டம் வெள்ளை இன உழைக்கும் மக்களுக்கும் கறுப்பு இன உழைக்கும் மக்களுக்கும் வாய்ப்பு நிகர்மையை நிறுவும் அளவில் சமூக நீதிக்கான போராட்டம் ஆகிறது. இந்தப் போராட்டம் வகுப்பு (வர்க்க) விடுதலைக்கான போராட்டத்தில்
அம்மக்களை ஓரணியில் நிறுத்த வழிசெய்கிறது. அதாவது சமூக நீதிக்கான போராட்டம் வர்க்க விடுதலைக்கான போராட்டத்திற்கு உந்துவிசையாகிறது. சமூக நீதிக்கான போராட்டத்தின் ஏரணத் தொடர்ச்சி வர்க்க விடுதலைக்கான போராட்டத்தில் நம்மைக் கொண்டுபோய் நிறுத்துகிறது.

கிழாரியத்துக்கும் பிறப்பால் வேற்றுமை பாராட்டும் அனைத்து முறைமைகளுக்கும் எதிரான போராட்டம் மார்க்சியப் பார்வையில் குடியாட்சியத்துக்கான போராட்டமாகும். இதையே குறிப்பான நிலைமைகளில் சமூகநீதிக்கான போராட்டம் என்று வரையறுக்கிறோம். கிழாரியத்தையும் அது போன்ற சாதியத்தையும் எதிர்ப்பது குடியாட்சியம் என்றால், முதலியத்தை எதிர்ப்பது குமுகியம் ஆகும். எல்லார்க்கும் புரியும் விதத்தில் சொன்னால் பிரபுத்துவத்தையும் சாதியத்தையும் எதிர்ப்பது சனநாயகம், முதலாளியத்தை எதிர்ப்பது சோசலிசம்.

குடியாட்சியத்துக்கான போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டுசென்றால் அது குமுகியத்தில்தான் நிறைவு பெறும். முதலியப் பொருளாக்க முறையின் தனிச் சொத்து உறவுகள் சனநாயகத்தை வடிவ அளவிலானதாக்கி விடுவதால் சனநாயகம் நிறைவு பெற சோசலிசம் தேவைப்படுகிறது. இதைத்தான் குடியாட்சியத்தின் நிறைவாக்கமே குமுகியம் என்கிறோம் (Socialism is the consummation of democracy). சனநாயகம் இல்லறம் என்றால் சோசலிசம் குழந்தைப் பேறு எனலாம். புரிகிறதா?

நிறவெறி சார்ந்த இன ஒதுக்கலுக்க்கு எதிரான போராட்டத்துக்கும் வகுப்புப் போராட்டத்துக்குமான இயங்கியல் இணைவைப் பயில்வதற்கு மிகப் பொருத்தமான கல்விக் களம் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டமாகும். நெல்சன் மண்டேலா சிறையிலும் வாடாத கறுப்பு மலர் நூலை எழுதுவற்காக தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்ட வரலாற்றைக் கருத்தூன்றிப் பயின்ற போது நான் கற்றவை என் அரசியல் அறிவுவளத்தைப் பெரிதும் செழுமை செய்தன. இப்போது இதை எழுதுவதற்கு முன் நெல்சன் மண்டேலாவின் ரிவோனிய வழக்கு உரையை எடுத்துப் படித்தேன். மண்டேலாவின் ஒவ்வொரு வாக்கியமும் நம்முன்னுள்ள வினாக்களுக்கு விடைகளாக மேற்கோள் காட்டத்தக்கவை. விரிவஞ்சித் தவிர்க்கிறேன்.

வெள்ளை நிறவெறிக்கு எதிரான போராட்டம் சமூக நீதிக்கான போராட்டம் என்றால், வர்க்க விடுதலைக்கான போராட்டத்துக்கும் அதற்குமான உறவை வெள்ளை நீதியருக்குப் புரிய வைக்க மண்டேலா முன்வைக்கும் வாதுரைகள் “கேளாரும் வேட்ப மொழியும் சொல்” எனலாம்.

மண்டேலாவின் ரிவோனிய உரை இணையத்தில் முழுமையாகக் கிடைக்கிறது. வாய்ப்புள்ளோர் வாசியுங்கள். தமிழ்மக்கள் உரிமையிலும் விடுதலையிலும் உண்மையான அக்கறையுள்ளோர் அதிலிருந்து கற்க வேண்டியது ஏராளம் உண்டு.

(தம்பிகளே, மண்டேலா தமிழரல்லவே! என்று தயங்காதீர்கள். நீங்கள் அஞ்சி நடுங்க அவர் தெலுங்கரும் அல்ல!!)

போகட்டும். பிசிபிஐ தோழரின் மற்றக் கேள்விகளுக்கும் விடை வரும். இப்போது பெரியாரை நினைவு கூராமல் முடிக்க இயலாது,

கறுப்புத் தொழிலாளருக்கு விடுதலை இல்லாமல் வெள்ளைத் தொழிலாளருக்கு விடுதலை இல்லை என்றார் கார்ல் மார்க்ஸ் – வகுப்பு விடுதலைப் போராட்டத்தின் ஆசான்.

பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம் ஒழியாது என்றார் பெரியார் – சமூக நீதிப் போராட்டத்தின் ஆசான்.

தொடர்கிறேன்…

தோழர் தியாகு
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *