
பெரியார் மீதான அவதூறு சீமானிடம் கற்கச் சொல்கிறார் மாவோ!
தமிழ்நாட்டின் நிகழ்கால அரசியலில், குறுகிய காலத்தில் சீமான் அளவிற்கு கவனம் பெற்ற அரசியல் தலைவர் வேறு எவருமிலர் எனலாம். பொய்கள் மற்றும் போலிக் கதைகள் மட்டுமே சொல்லி தமிழ் இளையோரை ஈர்த்தவரல்லர் சீமான். சீமான் ஈர்ப்புக்கு ஞாயமான அடிப்படைகளும் இருக்கவே செய்தன.
2009 ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத இராணுவம் ஈழத் தமிழ் மக்களை கொன்றழித்த போது, அதற்கெதிராக தமிழ்நாட்டில் ஏற்பட்ட தமிழர் எழுச்சியை ஒடுக்கி, இனக்கொலை நடந்தேற இந்திய வல்லதிக்கத்தோடு துணை நின்றதன் வாயிலாக, திராவிடக் கட்சிகள் தமிழ் இளையோரிடம் செல்வாக்கிழந்தன. குறிப்பாக அன்றைய ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க, அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி உயிரோடிருந்த வரை மீண்டும் ஆட்சியைப் பிடிக்க இயலவில்லை.
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு நீதி கேட்கும் தொடர் போராட்டத்தின் விளைவாக தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய அரசியல் தமிழ் இளையோரிடத்தில் புத்தெழுச்சி பெற்றது. பெருஞ்சித்திரனார் தொடங்கி தமிழ்நாட்டின் தமிழ்த்தேசிய அரசியலுக்கு அரை நூற்றாண்டுக்கும் மேலான வரலாறு இருந்த போதிலும், தமிழ்நாட்டின் மைய அரசியல் நீரோட்டத்தில் தாக்கத்தைச் செலுத்தும் அளவிற்கு தமிழ்த்தேசிய அரசியல் மக்கள் மயப்படத் தொடங்கியது ஈழத்தமிழர் இனக்கொலைக்குப் பின்னைய எழுச்சியில் தான்.
வளர்ந்துவரும் அரசியல் போக்கு என்பதை உணர்ந்துகொண்டு தமிழ்த்தேசிய அலையில் நீந்தி பதவி மீன் பிடிக்கப் புறப்பட்டவர்தான் சீமான். ஆனாலும், தமிழ்த்தேசியக் கருத்துகளை அவ்வப்போது ஊறுகாய் போல் தொட்டுகொண்டாரே தவிர, தொடக்கத்திலிருந்தே சீமானின் இலக்கு, இன்றைய தி.மு.க.விற்கு நிகரான செல்வாக்கு மிக்க அரசியல் கட்சியாக உருப்பெறுவதும் முதலமைச்சர் ஆவதும் மட்டும் தான்.
இந்த வழித்தடத்தில் சீமானுக்கு பெரிய நம்பிக்கையாக இருந்தவை, சீரழிந்து போன தி.மு.க. அ.தி.மு.க வின் பதவி அரசியல் சல்லாபங்கள் தான். இந்த இரண்டு ஆண்ட கட்சிகளின் ஊழல் அரசியல், சாதி அரசியல், குடும்ப அரசியல். குறுநில மன்னர்கள் போன்ற கட்சியின் முக்கியப் பிரமுகர்களின் அடாவடித்தனமான அரசியல் போக்கு, ஆகியவற்றை தனது பேச்சாற்றலால் எடுத்தியம்பி இளையோரைக் கவர்ந்தார் சீமான். மக்கள் நலனுக்கு விரோதமாக இருந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் பண்புகளை மேடைகளில் அம்பலப்படுத்தி, தமிழ் மக்களிடையே வெளிச்சம் பெற்று அரசியல் அரங்கில் முன்னுக்கு வந்தார். திராவிடக் கட்சிகளின் இருபெரும் தலைவர்களும் அடுத்தடுத்து இறப்பெய்தியதும் அரசியல் களத்தில் புதிய கட்சிகளுக்கு வாய்ப்பாக அமைந்தது. சீமானும் வாக்கு வீதம் 8.2% ஐத் தொட்டார்.
தொடக்கத்தில் சீமானை மேடை ஏற்றி வளர்த்துவிட்ட பெரியார் இயக்கங்கள், இந்தக் கட்டத்தில் சீமானிடம் இருந்து விலகியே இருந்தன. இந்த இயக்கங்கள் சீமானிடம் நம்ப்பிக்கை இழந்திருந்தன என்றாலும், சீமானின் தி.மு.க எதிர்ப்பை இவை ரசிக்கவில்லை என்பதே முதன்மைக் காரணம். இடைப்பட்ட காலத்தில், திராவிட இயக்கங்கள் மட்டுமில்லாமல் தமிழ்த்தேசிய இயக்கங்களும் ஆளுமைகளும் கூட சீமானுக்கு அவர் எதிர்பார்த்த அளவிற்கு ஆதரவுக் கரம் நீட்டவில்லை. மாறாக சீமானின் அரசியல் தமிழ்த்தேசிய அரசியல் இல்லை என்று அம்பலப்படுத்தும் வேலைகளையே பல தமிழ்த்தேசிய அமைப்புகள் செய்துவந்தன. தான் பேசுவது தமிழ்த்தேசிய அரசியல் தான் என்று மெய்ப்பிக்கும் முயற்சியைக் கூட சீமான் செய்யவில்லை. முடியாது என்பதாலும் அவரது இலக்கு அதுவன்று என்பதாலுமே சீமான் அதைச் செய்யவில்லை. இதன் விளைவாக, நாம் தமிழர் கட்சி வழக்கமான இன்னொரு தேர்தல் கட்சி தான் என்பதை சீமானால் நீண்ட காலம் மறைத்துவைத்திருக்க முடியவில்லை.
பத்தாண்டுகால சீமானின் அரசியல் நடவடிக்கைகளே அவற்றை அம்பலப்படுத்தும் விதமாகவும் அமைந்துவிட்டன. கட்சியைக் கட்டத் தொடங்கிய போது, சனநாயகம் போராட்டம் சாதியொழிப்பு விடுதலை என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த சீமானிடம் பண்பளவில் முரண்பாடுகள் முற்றின. குடிகள் என்ற பெயரில் சாதிகளின் இருப்பை அங்கீகரிப்பது, சாதிப் பெருமை பேசுவதை ஊக்குவிப்பது, கட்சிக்குள் சனநாயகத்தை கடைபிடிக்க முடியாமை, மக்கள் பிரச்சனைகளை ஆளும் கட்சிக்கு எதிரான வாய்ப்புகளாக மட்டுமே பார்த்துப் பயன்படுத்திக்கொண்டு, போராட்ட அரசியலில் இருந்து விலகியே இருந்தமை, இவை அனைத்தும் பொதுவான மக்களிடையேயும், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையேயும் வேகத்தைக் குறைத்து சோர்வையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்திவிட்டன.
முதலமைச்சர் பதவிக்கான வேட்கையைத் தவிர, மாற்றுத் திட்டமும் இல்லை, ஒரு மண்ணாங்கட்டித் திட்டமும் இல்லை என்று பொதுவாக அம்பலப்பட்ட பிறகு, தற்போதைய போக்குடன் சீமானால் இதற்கு மேல் நகர முடியாது என்பது தெளிவாகிவிட்டது. நகர முடியவில்லை என்பதை அவரே உணர்ந்தும்கொண்டார். இது ஒரு வகையில் அவரது வளர்ச்சிப் பாதையில், அதாவது தமிழக தேர்தல் அரசியல் களத்தில் தனித்து நின்றே, செல்வாக்குமிக்க கட்சியாக தன்னை வளர்த்துக்கொள்வதில், அனைத்தும் முற்றித் தேக்கமுற்ற முற்றுப்புள்ளி ஆகும். இதில் நடிகர் விஜயின் அரசியல் வரவும் சீமானின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டது.
இந்த முற்றுப்புள்ளியைத் தாண்டி அரசியல் பயணத்தைத் தொடர்வதற்கு சீமான் கையிலெடுத்திருக்கும் உத்தி தான் பெரியார் மீதான தாக்குதல். குட்டையைக் கலக்கி மீன்பிடிக்கும் உத்தி. இதன் பகுதியாகவே தமிழ் மக்களின் பிற தலைவர்களை அறிஞர்களை ஆளுமைகளை பெரியாருடன் ஒப்பிட்டு, பிறகு அவர்களை பெரியாருக்கு நேரெதிராக நிறுத்த முயலும் வேலையை சீமான் செய்யத் தொடங்கினார். குறிப்பாக, சாதி சார்ந்த தலைவர்களை வம்படியாக இழுத்து பெரியாருக்கு எதிராக நிறுத்தி, மக்களிடையே உள்ள சாதி உணர்வை பெரியாருக்கு எதிராகத் திருப்பி அரசியல் அறுவடை செய்யும் முயற்சிகளை மேற்கொண்டார் சீமான். சாதிப் பெருமிதங்களைத் தூண்டிவிடும் போது பெரியாரை மிக எளிமையாக எதிரியாகக் காட்டிவிட முடியும். அது தான் பெரியாரின் இயல்பு. இருந்த போதிலும், இத்துணை தகிடுதித்தங்களைச் செய்த பிறகும், சீமானின் அவசரத்திற்கு தமிழ்ச் சமூகம் பின்னுக்கு வரவில்லை!
ஆன்மிக போதகர்கள், கடவுள் நம்பிக்கை உள்ள மக்கள், இந்து மதப் பற்றுள்ள தமிழர்கள், இந்துக்கள் என்று பல மட்டங்களிலும் பெரியார் கருத்துகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இதற்கு முன்னரும் இருந்தன. இப்போதும் இருக்கின்றன. அனால் இதன் காரணமாக மக்களுக்கு இடையே மோதல் போக்கு ஒருபோதும் உருவெடுத்ததில்லை. தங்களின் ஆன்மிக நம்பிக்கைகளைத் தாண்டி பெரியாரின் பெருந்தொண்டினை தமிழ் மக்கள் அறிந்தேற்றுள்ளனர்.
எய்த அம்பு இலக்கினைத் தைக்காமல் வீழ்ந்த விரக்தியில், பெரியார் கூறாத கருத்துகளை பெரியார் கூறியதாக பொய் பேசி, தமிழர்களின் பாலுறவு சார்ந்த ஒழுக்க விழுமியங்கள் குறித்து பெரியார் இழித்துப் பேசினார் என்று அவதூறு பரப்பி, குறுக்கு வழியில் தன்னுடைய இலக்கினைத் தாக்கியுள்ளார் சீமான். தான் பேசியவற்றுக்கு ஆதாரம் இல்லை, பச்சைப் பொய் என்று தெரிந்தே பேசிய சீமான் பெரியார் பற்றாளர்கள், நடுநிலையாளர்கள் கேட்கும் ஆதாரங்கள் குறித்து கவலைப்பட்டுக்கொள்ளவில்லை.
அரசியல், சித்தாந்த எதிரிகளை இதுவரை ஒருமையில் பேசாத பெரியார் இயக்கத் தலைவர்கள் சீமானை ஒருமையில் பேசும் அளவுக்கு சீமானின் தாக்குதல் துல்லியமாக இலக்கினைத் தைத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆசிரியர் கி.வீரமணி மட்டும் சீமானைத் தவிர்க்கும் நிலைப்பாட்டினை எடுத்தார். மற்றபடி தமிழ்ச் சமூகத்தின் சமூக அரசியல் இயக்கங்களுக்குள் மோதல் போக்கினை உருவாக்கிவிட்டார் சீமான். இனி இவற்றை மக்களுக்கு இடையிலான பிளவாகவும் மோதலாகவும் மாற்றுவது தான் மிச்சமுள்ள வேலை.
ஆம்! இந்து மதத்தின் வரலாறு மட்டும் தான் இந்தியாவின் வரலாறு, இந்து மதத்தின் நலனை பிரதிபலிக்கும் அமைப்புகள் தான் இந்திய மக்களின் அமைப்புகள் மற்றவை வரலாறாக இருந்தாலும் மதமாக இருந்தாலும் கருத்தியலாக இருந்தாலும் எல்லாம் இந்த மண்ணுக்கு அந்நியமானவை என்று கூறும் முரட்டுத் துணிச்சலை பாபர் மசூதி இடிப்பு சாதித்துக் கொடுத்தது. தி.மு.க.வைக் காட்டி, பெரியாரைத் தாக்கி, திராவிட அரசியல் வரலாற்றுக்கு மறுவிளக்கம் தர முயலும் சீமானின் போக்கும் அசலான சங்கப் பரிவார உத்தியே ஆகும். தமிழ்த்தேசிய அரசியலில் உள்ள சமூகநீதி மதிப்பீடுகளை வீழ்த்தி, இந்துத்தேசிய உருவாக்கத்திற்கு தமிழ் மக்களைத் தயார்ப்படுத்தி தங்களுக்குள் மோதவிடும் அரசியல் வேலை தான் இது.
இப்போதே ஜான் பாண்டியன் போன்ற தலைவர்களும், சில இனவாத இயக்கங்களும் இதே போக்குடன், சீமானுக்கு ஆதரவாக பெரியாரைத் தாக்கத் தொடங்கியுள்ளார்கள். இவர்களுக்கு தங்கள் சாதியைத் தாண்டி பெரிய இலக்கு ஏதும் இல்லை. இருக்கும் இலக்கிற்குள்ளும் திடமான நம்பிகையும் இல்லை. பெரியாரைத் தாக்குவதன் மூலம், தமிழ்நாட்டில் செல்வாக்கு மிக்க ஓர் அரசியல் பாரம்பரியத்தின் மீது கல்லெறிந்து தங்கள் இருப்பை தங்கள் சாதி உணர்வாளர்களிடம் காட்டிக்கொள்வதே இவர்களின் அதிகப்படியான திட்டம். ஆனாலும் இந்த தாக்குதல் நாம் எதிர்பாராத தரப்பிலிருந்து வெளிப்படையாகத் தொடங்கியுள்ளது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.
பெரியாரை நேரடியாக வெளிப்படையாகத் தாக்காமலேயே திராவிட கட்சிகள் மீது பழிபோட்டு, சுயசாதி திரட்சிக்காக வெளிப்படையான தலித் விரோதப் போக்கினை கடைபிடித்த மருத்துவர் இராமதாசு, தமிழ்நாட்டு முற்போக்கு அரசியலில் முற்றாக அயன்மைப்படுத்தபட்டது அண்மைக் கால வரலாறு. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின மக்களினங்களின் ஒற்றுமையை வலியுறுத்தி, தமிழ்நாட்டு அரசியலில் காத்திரமான தாக்கத்தையும் செலுத்தி, வலுவான இடத்தையும் பிடித்திருந்த பா.ம.க, இப்போது அரசியல் அரங்கில் அங்கிகாரதிற்கே அல்லாடிக்கொண்டிருக்கிறது. மருத்துவர் இராமதாசுவின் இந்த அனுபவத்தை நன்கு அறிந்தவர் தான் சீமான்.
ஆனால், ஜான்பாண்டியன் போல சீமான் ஒரு சாதி வெளிச்சத்திற்குள் மட்டும் உள்ளவர் இல்லை. பா.ம.க அளவுக்கு ஆழ வேரூன்றாத கட்சியாக இருந்தாலும், நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு முழுவதும் அகலக் கிளை விரித்து அறிமுகமாகியுள்ள கட்சி ஆகும். இந்த நம்பிக்கையில் சீமான் தன்னுணர்வுடன் துணிச்சலான முடிவினைதான் எடுத்துள்ளார்.
சீமான் இதற்கு முன்னர் திராவிட எதிர்ப்பை முதன்மைப்படுத்தி, பாசிசத் தன்மையுடன் இனத்தூய்மை பேசி, இனவாத அரசியல் செய்த போது கூட, திராவிட எதிர்ப்பு என்ற புள்ளியில் சங்கப் பரிவாரக் கூட்டத்தால் சீமானுக்கு ஆதரவுக் கரம் நீட்ட முடியவில்லை. காரணம், சீமானுக்கு அப்போது பெரியாரை எதிர்க்கத் தயக்கம் இருந்தது. சீமான் மீதான தம்பிகளின் நம்பிக்கைக்கும் அப்போது அடிப்படைகள் இருந்தன. இனி அவை இல்லை! பெரியார் எதிர்ப்பை வெளிப்படையாக்கி, அதையே முதன்மைப்படுத்தி ஆடத் தொடங்கியவுடன், சீமானுக்கு சங்கப் பரிவார இயக்கங்கள் வெளிப்படையாக ஆதரவுக் கரம் நீட்டத் தொடங்கிவிட்டன. பரிவாரங்களின் இந்த ஆதரவுக்கு சீமான் உடனடியாக தலையசைக்கவில்லை என்றாலும், இவற்றை எதிர்பார்த்தே சீமான் நகர்கிறார்.
தமிழர்களின் வரலாற்று வழிபட்ட முற்போக்கு அரசியலுக்கு எதிரான முகாமின் ஆளாக சீமான் தன்னை வெளிப்படையாக அடையாளப்படுத்திக்கொண்டார். இனி நாம் தமிழர் கட்சி முழுமையான பிற்போக்குத்தனமான வலதுசாரி அரசியல் கட்சி என்று சொந்தக் கட்சிக்குள்ளும் அம்பலப்படுவதற்கு இன்னும் ஒரு படி தான் மிச்சம் உள்ளது. சீமானின் இன்றைய நிலைப்பாடு என்பது பெரியார் கருத்துகள் மீதான மீள்வாசிப்பின் விளைவு என்பதெல்லாம் தம்பிகளுக்குள்ளேயே கூட நீண்ட காலத்திற்குத் தாக்குப்பிடிக்காது.
சீமானின் அரசியலில் முதற்பாதி முடிந்துவிட்டது. பிற்பாதியிலும் சீமானுக்கு எதிர்காலம் உண்டு. ஆனால் முற்பாதியின் திசையிலன்று, அதற்கு நேரெதிரான திசையில்! முற்பாதியில் கோட்டைவிட்ட நாம் பிற்பாதியிலாவது விழித்துக்கொள்ள வேண்டும். சீமானுக்கு மேடை போட்டுக்கொடுத்தது குற்றமன்று. அரசியல் களத்தையே விட்டுக்கொடுத்தது தான் தவறு. பெருந்தவறு. சீமான் வளர்ந்த களம் எது?
இந்தியச் சூழலில், சாதியச் சிக்கலுக்கு முகம் கொடுத்து, சமூக விடுதலைக் களத்தில் நேர்மையாக நின்றால் பட்டறிவுகொண்டே நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள முடியும். சமூக விடுதலை தேசிய விடுதலையுடன் இணைக்கப்படாமல் முழுமை பெறாது என்ற உண்மையே அதுவாகும். இந்தியச் சிக்கல் என்பது பல்வேறு மொழிவழிச் சமூகங்களாகவும் சாதியச் சமூகமாகவும் கட்டுண்டு இருப்பது தான் என்ற உண்மையை முதன்முதலில் விண்டுரைத்து, இச்சிக்கலைத் தீர்க்க (திராவிடம்) கருத்தியல் அடித்தளத்தையும், மக்கள் இயக்கத்தையும் அமைத்தது தான் பெரியாரின் தனிச்சிறப்பு ஆகும்.
தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய அரசியல் எழுச்சி பெறும் வேளையில், பெரியார் எனும் பெரும் படைகலனைப் பூட்டி வைத்துவிட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமான சமூகச் சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதோடு, விடுதலை அரசியலுக்கு முழுக்குப்போட்டது தான் பெரியார் இயக்கங்கள் செய்த பெரும்பிழை ஆகும். இந்த வெற்றிடம் தான், சீமானுக்கு நாம் அமைத்துக் கொடுத்துவிட்ட களமும் ஆகும்.
நவீன சமூக வடிவமான ‘தேசம்’ உருப்பெறும் முதலியக் குடியாட்சிய அமைப்புக்குள், தமிழ் இன மொழி உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு, வெகுமக்கள் இயக்கமாக தமிழ்த்தேசிய உணர்வை வெளிப்படுத்தியது பெரியார் இயக்கம் தான். அல்லது வெகுமக்களிடையே பெரியார் இயக்கமாகத் தான் தமிழ்த்தேசியம், தமிழ்த்தேசிய உணர்வு வெளிப்பட்டது.
ஆனாலும் வரலாற்று முரணாக தமிழ்த்தேசிய விடுதலையை விலக்கிய பெரியாரிய இயக்கங்களும், பெரியாரை விலக்கிய தமிழ்த்தேசிய இயக்கங்களும் சுயமுரண்பாடுகளுடன் ஒன்றுகொன்றும் முரண்பட்டுக்கொண்டன. தமிழ்த்தேசிய விடுதலையை முன்னிறுத்தாத பெரியார் இயக்கங்களும், பெரியாரைப் புறக்கணிக்கும் தமிழ்த்தேசிய இயக்கங்களும் தங்களின் விருப்பத்திற்கு மனமகிழ் மன்றங்களாகச் செயல்படலாமே தவிர, ஒருபோதும் ஆற்றல் மிகு மக்கள் இயக்கமாக இயங்காது. இலக்கு நோக்கி நகராது. இந்தச் சூழலை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார் சீமான்.
காந்தியின் ‘மகாத்மா’ பிம்பம் குறித்து அம்பேத்கர் கூறுகையில், தன் வாயில் கடவுளின் பெயரையும் கக்கத்தில் கத்தியையும் வைத்திருப்பவர் காந்தி என்பார். அது போல தன் வாயில் தமிழ்த் தேசியத்தையும் வயிற்றுக்குள் முதலமைச்சர் வேட்கையையும் வைத்துகொண்டு, விடுதலை அரசியல் உணர்வை தன் குடலுக்குள் மடைமாற்றம் செய்து ஏப்பம்விட்டுக்கொண்டார் சீமான். பெரியார் இயக்கங்கள் தமிழ்த்தேசிய அரசியலை இறுகப் பற்றி நின்றிருந்தால், சீமான் அந்தப்பக்கம் திரும்பி தேர்தல் அரசியலில் தி.மு.க.வைத் தாக்கிவிட்டு, இந்தப்பக்கம் திரும்பி தமிழ்த்தேசிய உணர்வுள்ள இளையோரை அறுவடை செய்திருக்க முடியாது. தனக்குப் பின்னால் தமிழ்த்தேசிய உணர்வுள்ள இளையோர் இல்லை என்றால் சீமானால் தி.மு.க.வைத் தாக்கியிருக்கவும் முடியாது.
சமூக விடுதலைக்குப் போராடும் இயக்கங்கள், தமிழ்த்தேசிய விடுதலையின் தேவையை உணராமால் போனது தான், சீமான் போன்றோரின் ‘இனவாத அரசியல்’ தமிழ் மக்கள் மத்தியில் எடுபட்டமைக்கு அடிப்படை ஆகும். சமூக விடுதலையை உள்ளடக்கமாகக் கொண்ட தமிழ்த்தேசிய அரசியலால் தான் இனவாதத்தை வீழ்த்த முடியும். தமிழ்த்தேசிய விடுதலை அரசியல் என்பது பெரியாரியர்களின் கடமை ஆகும்.
இதோ தோழர் மாவோ நமக்காகவே சொல்லியுள்ளார். வரலாற்றில் சந்தர்ப்பவாதிகளாகவும் பிற்போக்காளர்களாகவும் வலதுசாரிகளாகவும் ஆதிக்கவாதிகளாகவும் எதிர்ப்-புரட்சிக்காரர்களாகவும் உளவாளிகளாகவும், இன்னும் பல்வேறு வடிவங்களிலும் எதிர்மறை உதாரணங்களாக நமக்கு ஆசிரியர்கள் அமைவார்கள் என்பார் மாவோ. சமூக மாற்றத்திற்கான நமது புரட்சிகர அரசியல் பயணத்தில் எதிர்படும் இந்த எதிர்மறை ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நம் கடமை என்று வலியுறுத்துவார் மாவோ. அப்படி ஓர் எதிர்மறை உதாரணம் தான் சீமானும். அரசியல் நேர்மையுள்ள நேர்நிறையான தம்பிகள் இனியும் சீமானுடன் நீண்ட நாட்கள் ஒட்டியிருக்க முடியாது. இந்த அனுபவத்திலிருந்து நாமும் கற்றுக்கொள்வோம். தமிழ்த்தேசிய அரசியலை உயர்த்திப் பிடித்து பெரியாருக்கு புகழ் சேர்ப்போம். பெரியாரின் கருத்துகளை உயர்த்திப் பிடித்து தமிழ்த்தேசிய அரசியலுக்கு வலுச் சேர்ப்போம்.
மதியவன் இரும்பொறை
தமிழ்த் தேச மார்க்சியக் கழகம்