பாஜகவோடு கைகோர்த்து உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீட்டில் செய்த மற்றொரு அயோக்கியத்தனம். தென் மாநிலங்களை பழிவாங்கும் செயலா?
Opinion

பாஜகவோடு கைகோர்த்து உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீட்டில் செய்த மற்றொரு அயோக்கியத்தனம். தென் மாநிலங்களை பழிவாங்கும் செயலா?

Jan 31, 2025

சென்ற புதன்கிழமை (ஜனவரி 29) அளிக்கப்பட்ட முக்கியமான தீர்ப்பு ஒன்றில், முதுகலை மருத்துவ இடங்களில் வசிப்பிடம் அடிப்படையிலான இடஒதுக்கீடுகள் அரசியலமைப்பு பிரிவு 14-ஐ (Article14) மீறுவதால் அரசியலமைப்புக்கு முரணானது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

மாநில ஒதுக்கீட்டு இடங்களில் வசிப்பிடம் அடிப்படையிலான இடஒதுக்கீடுகளை அனுமதிப்பது அரசியலமைப்பு ரீதியாக செல்லாது என நீதிமன்றம் கூறியது. இந்த இடங்கள் நீட் தேர்வில் தகுதியின் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும் எனவும் தீர்ப்பு குறிப்பிட்டது. முன்னர் பிரதீப் ஜெயின் மற்றும் சௌரப் சந்திரா வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

நீதிபதி துளியா இத்தீர்ப்பு குறித்து விளக்கமாகக் கூறியதாவது:
“நாம் அனைவரும் இந்தியாவின் குடிமக்கள். நாட்டின் ஒற்றுமை, வாழ்விடம் தேர்ந்தெடுக்கும் உரிமை, தொழில் மேற்கொள்ளும் உரிமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், இளநிலை மருத்துவப் படிப்புகளில் மட்டுமே குறைந்த அளவு மாநில அடிப்படையிலான இடஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால், முதுகலை மருத்துவ படிப்புகளில் சிறப்பு மருத்துவ நிபுணத்துவம் அவசியமென்பதால், இங்கு வசிப்பிடம் அடிப்படையிலான ஒதுக்கீடு சமத்துவ உரிமைக்கு (பிரிவு 14) முரணானது.”

ஆனால் இத்தீர்ப்பு என்பது‌ மருத்துவத்துறையில் பெரிய‌ அளவில் முதலீடுகள் செய்து, மருத்துவத் தரத்தை மேம்படுத்திய தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களை பழிவாங்கும் நோக்கமாகவே பார்க்கப்படுகிறது.

தற்போது, மொத்த மருத்துவ இடங்களில் 50% மாநில ஒதுக்கீட்டின் கீழ் வருகிறது, இது பொதுவாக வசிப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு ஒதுக்கப்படுகிறது. ஆனால் இத்தீர்ப்பின்‌ படி வசிப்பிடத்தை அடிப்படையாகக் கொண்ட ஒதுக்கீடு நீக்கப்பட்டால், ஒரு மாநிலத்தில் இளநிலை மருத்துவம் படித்த அனைவரும் மட்டுமின்றி அகில இந்திய ஒதுக்கீடு வேட்பாளர்களும் கூட இந்த 50% மாநில ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பின்‌ படி பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்க்கு வந்த மாணவர்கள் இங்கு மாநில ஒதுக்கீட்டிற்குள் படித்து, பின்னர் வேறு இடங்களில் வேலை செய்ய செல்லலாம். அல்லது தமிழ்நாட்டிலும் பணி புரியலாம்.

எங்கிருந்தோ வந்து, நம் மக்களின் சூழலையும், வாழ்வியல் முறையையும், உணவு முறையையும், மக்கள் பேசும் மொழியையும், துளியும் புரிந்து கொள்ளாத ஒருவர் அம்மக்களுக்கு சிகிச்சை அளித்தால் எப்படி குணமாகும் நோய்? ஆக, தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் மருத்துவர்களின் எண்ணிக்கையையும், அதே அளவிற்கு தரத்தையும் மேம்படுத்துதல், தமிழ்நாட்டில் வாழும் பாமர மக்களின் சூழல், உணவு முறை, அவர்கள் பேசும் மொழி என‌ எல்லாவற்றையும் புரிந்து கொண்டு சிகிச்சை அளித்தல், போன்ற காரணங்களுக்காக உருவாக்கப்பட்டது தான் வசிப்பிடம் சார்ந்த மாநில ஒதுக்கீடு. ஆனால் உச்சநீதிமன்றம் அளித்த இத்தீர்ப்பு இந்த இடங்களை ஒதுக்கியதன் முழு நோக்கத்தையும் சீர்குலைக்கும் படி அமைந்திருக்கின்றது‌ .

தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) புதிய வழிகாட்டுதல்களின்‌ படி தென்னிந்தியாவில் புதிய மருத்துவக் கல்லூரி இடங்களை நிறுவுவது தடை செய்யப்படுகின்றது. காரணம் இந்த மாநிலங்கள் ஏற்கனவே மருத்துவத் துறையில் சிறப்பாக செயல்படுகின்றன.
ஆனால், 23.5 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் 9,703 இடங்கள் மட்டுமே உள்ளன, இது விதிமுறையை விட 14,000 குறைவாக உள்ளது. இந்த இடங்களை நிறப்புவதற்கான நோக்கமாகவே இத்தீர்ப்பு அமைந்துள்ளது. ஆனால் ஒரு மாநிலம் ஒரு குறிப்பிட்ட துறையில் மிக மோசமாக செயல்பட்டதை சரி‌செய்து ஈடு கட்டுவதற்காக மற்ற மாநிலங்களின்‌ மாணவர்களை தண்டிப்பது எந்த விதத்தில் நியாயமம்?

சான்றாக தமிழ்நாட்டை எடுத்துக்கொள்ளலாம். இந்தியா சுதந்திரம் அடைந்த போது மருத்துவத் துறை மட்டுமல்லாமல் பெரும்பாலான துறைகளில் அரசு வெளியிட்ட பட்டியலின் படி கடைசி மூன்று இடங்களில் அங்கம் வகித்த தமிழ்நாடு, 70 ஆண்டு கால திராவிட ஆட்சியின் மூலம் இன்று இந்தியாவுக்கே முன் மாதிரியாக திகழ்ந்து வருகிறது‌. இன்று
சிசு‌ இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் 2வது இடம். தாய் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் 4வது இடம்.
பாமர‌ மக்கள் பெரும்பாலானோர் அனுகும் ஆராம்ப சுகாதார நிலையங்களில் அதிக மருத்துவர்களை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் இடம். மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் 3வது இடம். அதிக இளநிலை மருத்துவ படிப்பு இடங்களை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் இடம், இந்திய நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் உருவாக்கப்படும் மருத்துவர்களில், சுமார் 10 சதவீதம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் போன்ற பல்வேறு சாதனைகளை தன்வசம் வைத்துள்ளது தமிழ்நாடு. குறிப்பாக 2021ஆம்‌ ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு மருத்துவத் துறையில் தமிழ்நாடு பல உச்சங்களை எட்டியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகள்,‌ மாணவர்கள் மீது செய்த முதலீடு‌. இதை சாத்தியமாக்கிக் காட்டியது வசிப்பிடத்தை அடிப்படையாக கொண்ட மாநில இட ஒதுக்கீடு.

மற்றொரு சான்றாக தெலங்கானாவை எடுத்துக்கொள்ளலாம். பி.ஆர்.எஸ் அரசாங்கம் மருத்துவ உள்கட்டமைப்பில் பெரும் முதலீடுகளை செய்து, தெலங்கானாவை இந்தியாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசு மருத்துவ கல்லூரியை நிறுவிய முதல் மாநிலமாக மாற்றியுள்ளது.
ஆனால் இப்போது, தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் காரணமாக தெலங்கானாவிற்கு அதன் மருத்துவ கல்லூரி இடங்களை அதிகரிக்க அனுமதி கிடையாது, தெலங்கானா தனது மாநில ஒதுக்கீட்டிற்கு வசிப்பிடத்தை அடிப்படையாகக் கொண்ட ஒதுக்கீட்டை செயல்படுத்த முடியாது.

எனவே, மருத்துவத்துறையில் இந்தயாவுக்கு முன் மாதிரியாக திகழும் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களுக்கு இத்தீர்ப்பு அளித்துள்ள தண்டனை என்னவென்றால், பிற மாநிலங்களின் சுமையை ஏற்றுக்கொள், மேலும் கல்லூரிகளை கட்டு, பிற மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களை பயிற்றுவி, அம்மாணவர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பு, மற்றும் மாநிலத்திற்குள் மருத்துவ வல்லுநர்களின் தரத்தை மேம்படுத்துவதில் தோல்வியடை.

வசிப்பிடத்தை அடிப்படையாகக் கொண்ட ஒதுக்கீடுகளை நீக்குவது சமமான மருத்துவ பராமரிப்புக்கு ஒரு பலவீனமான அடியாகும். மாநிலங்கள் தங்கள் மருத்துவ மாணவர்களில் முதலீடு செய்வது உள்ளூர் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்காக. ஆனால் அதை பாஜக ஆளும் மற்ற மாநிலங்களின் இயலாமையை ஈடு கட்டுவதற்காக சீர்குலைப்பது என்பது மிகப்பெரிய அயோக்கியத்தனம்.

இதற்கான ஒரே தீர்வு என்பது “அதிகார‌ பரவலாக்கல்”(Decentralisation) . கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது மாநிலங்கள் தங்கள் தனித்துவமான தேவைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க அனுமதிக்கும், இது மக்களுக்கு உண்மையாகவே பயனளிக்கும் நியாயமான கொள்கைகளை உறுதி செய்யும்.

மருத்துவ பராமரிப்பின் எதிர்காலத்திற்காக தென்னிந்திய தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மாற்றத்தை கோருவதற்கான நேரம் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *