ரிசர்வ் வங்கி 2025-26 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி கணிப்பை 6.5% ஆக தக்க வைத்துள்ளது
National

ரிசர்வ் வங்கி 2025-26 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி கணிப்பை 6.5% ஆக தக்க வைத்துள்ளது

Jun 6, 2025

புவிசார் அரசியல் பதட்டங்கள் நிலவியபோதிலும், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2025-26 ஆம் நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதத்தைக் 6.5% என்ற முன்னைய கணிப்பில் மாற்றமின்றி நிலைநாட்டியுள்ளது.

மூன்று நாட்கள் நீடித்த நிதிக் கொள்கைக் குழு (MPC) கூட்டங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கியின் இருமாதம் ஒருமுறை நடைபெறும் பணவியல் கொள்கை அறிவிப்பு நிகழ்வில் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்த தகவலை வெளியிட்டார்.

“இந்த நிதியாண்டில் நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடுகிறோம். இது முதல் காலாண்டில் 6.5%, இரண்டாவது காலாண்டில் 6.7%, மூன்றாவது காலாண்டில் 6.6%, மற்றும் நான்காவது காலாண்டில் 6.4% ஆக இருக்கும். சமநிலையான அபாயங்களை எதிர்பார்க்கலாம்,” என மல்ஹோத்ரா கூறினார்.

இதே நேரத்தில், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெறும் விகிதமான ரெப்போ விகிதம் 50 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போதைய ரெப்போ விகிதம் 5.5% ஆக உள்ளது, இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த விகிதமாகும்.

இந்த மாற்றம் வீடு, வாகனம் மற்றும் நிறுவனக் கடன்களுக்கான வட்டி சுமையை குறைக்கும் என்பதால், கடன்வாங்குபவர்கள் பெரிதும் பயன்பெற வாய்ப்பு உள்ளது.

இதேவேளை, பணவீக்கம் குறைவடையும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில், முந்தைய 4% கணிப்பிலிருந்து பணவீக்க விகிதம் 3.7% ஆக திருத்தப்பட்டுள்ளது. இது, நல்ல பருவமழை பெய்யும் எதிர்பார்ப்பு காரணமாக நிகழ்ந்ததாக RBI தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி பிப்ரவரி 2025 முதல் இதுவரை மொத்தமாக 100 அடிப்படைப் புள்ளிகள் விகிதக் குறைப்புகளை மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டு, ரெப்போ விகிதம் 6% ஆக இருந்தது.

“கோவிட்-19க்கு பிறகு, இது நாங்கள் தொடர்ந்து மூன்று முறைகள் விகிதங்களை குறைக்கும் முதல் நிகழ்வாகும்,” என்று ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைகள், நாடு வளர்ச்சியைத் தூண்டும் வகையில் பணவியல் கொள்கையை மென்மையாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசியல் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *