Rahul Gandhi: `ராகுல் காந்தியின் இங்கிலாந்து குடியுரிமை!?’; விசாரித்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
பா.ஜ.க நிர்வாகி எஸ். விக்னேஷ் ஷிஷிர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமையை ரத்து செய்யக்கோரி அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மனுவில், ராகுல் பிரிட்டிஷ் குடிமகனாக இருப்பதற்கான ஆதாரங்கள் மற்றும் ரகசிய மின்னஞ்சல்கள் இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பான நடவடிக்கைகளுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார் அளித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் துணை சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.பி. பாண்டே, குறித்த புகார் பரிசீலனைக்காக உள்ளதென தெரிவித்தார். இதனை அடுத்து, நீதிமன்றம் மத்திய அரசை உரிய பதிலை அளிக்க கேட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணை டிசம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பாக இறுதி முடிவுகள் விரைவில் எடுக்கப்பட வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தினார். இந்திய சட்டத்தின் அடிப்படையில் இரட்டை குடியுரிமை அனுமதிக்கப்படாததால், ஒருவர் வேறு நாட்டின் குடியுரிமையை பெற்றால், இந்தியக் குடியுரிமையைத் துறக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
