
2020 க்கு பிறகு உலகளாவிய நிரந்தர அவசர நிலை : அடிமைகளா ?சுதந்திரமானவர்களா ?
2020ம் ஆண்டிற்குப் பிறகு உலகம் சாமானிய மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு புதிய காலத்திற்குள் நுழைந்திருக்கிறது. இது வெறும் கொரோனா தொற்று, உக்ரைன்-ரஷ்யா போர், பாலஸ்தீனில் நடக்கும் படுகொலைகள், இஸ்ரேல் ஈரான் போர்அல்லது உலகளாவிய விளம்பர கலாச்சாரம் போன்ற நிகழ்வுகள் மட்டும் அல்ல. இதை விட ஆழமான ஒரு புதிய ஒழுங்கும் அமைப்பு உலகத்தையே புதிய வழியில் இயங்க வைக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலை என்பது Negri மற்றும் Hardt ஆகியோரின் “Empire” “அதிபேரமைப்பு” எனும் புதிய உலக ஒழுங்கின் துவக்கமாகவும் Gramsci-யின் Hegemony கருத்தின் நவீன வடிவாகவும் Agamben-ன் “State of Exception”-ன் “நிரந்தர அவசரநிலை” என்று மாற்றப்பட்ட நிலையில் திகழ்கிறது.
Empire -அதிபேரமைப்பு எனும் கருத்து, மரபு வலிமை கொண்ட தேசிய நாடுகளின் ஆட்சி வடிவங்களைவிட வேறுபட்டது. இங்கே அதிகாரம் எல்லை கடந்த, பன்முகம் கொண்ட, இறையாண்மை இல்லாத சக்தியாக உள்ளது. இது அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, ரஷ்யா ஆகிய தனிநாடுகளால் ஆளப்படும் ஒன்றல்ல; பன்னாட்டு நிதி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் (Apple, Google, Meta, Amazon, Google, AI), கலாச்சார மீடியா (Netflix, TikTok, YouTube, IPL), செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்புகள் — போன்றவற்றின் மூலம் தனிமனித வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் நுழைந்துள்ளன. இங்கு அதிகாரம் அரசு அல்லது இராணுவம் வழியாக அல்ல, மாறாக மனிதனின் ஆசை, பயம், நம்பிக்கை, விருப்பம், விரக்தி ஆகியவற்றை ஆளும் சக்தியாகவே இருக்கிறது. இது உடலையும் மனதையும் அரசியல் பொருளாக ஆக்கும் Bio-power எனும் Negri & focault யின் கருதுகோளுக்கேற்ப இயங்குகிறது.
Gramsci கூறிய Hegemony — அதாவது சமூக மேலாண்மை / பொது புத்தி மூலம் — இப்போதைய உலகத்தில் மிக நுணுக்கமாக செயல்படுகிறது. அதிகாரம் தண்டிப்பதோ கட்டாயப்படுத்துவதோ இல்லை. மாறாக மக்களின் ஒப்புதலைப் பெறும் வகையில் செய்கிறது. மக்கள் surveillance capitalism-ஐ எதிர்த்து போராடவில்லை; மாறாக தன்னார்வமாக அதற்குள் நுழைகின்றனர். தனிமனித உரிமை , அந்தரங்க இழப்பும் எதார்த்தமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு வழிநடத்தும் சமூக ஊடக உணர்வுப்பயன்பாடும், டிஜிட்டல் மார்க்கெட் ஆசையும், அதன் தூண்டுதல்களும் மனித உணர்வுகளையே Empire-க்கு சொந்தமான பொருள்களாக மாற்றுகின்றன. Gramsci சொன்னது போல இது ஒரு கலாச்சார உளவியல் தளத்தில் செயல்படும் Hegemony ஆகும்.
இதை ஆழமாக விளக்கும் மற்றொரு தத்துவவாதி Giorgio Agamben. அவர் கூறியபடி உலகம் “State of Exception” — நிரந்தர அவசரநிலை — என்ற நிலைக்கு தள்ளப்பட்டு, அந்நிலை புதிய இயல்பாக மாறியுள்ளது. கொரோனா தொற்றின் போது துவங்கிய இந்த நிலை தற்போது கண்காணிப்பு வழிமுறைகளில் (Lockdown, Vaccine Passport, Thermal Scan) வழக்கமாகி விட்டது. இதை உலகம் இயல்பாக ஏற்றுக்கொள்கிறது. பயம் மூலம் தொடங்கிய ஒவ்வொரு கட்டமும் பின்னர் இயல்பாக மாறுகிறது. இதை Agamben முன்பே எச்சரித்திருந்தார்.
சுகாதார அவசரநிலை, பாதுகாப்பு அவசரநிலை, உணர்வு அவசரநிலை என மூன்று முக்கிய வடிவங்களில் “அதிபேரமைப்பு” தனது கட்டுப்பாட்டை செலுத்துகிறது. முதன்மையாக, 2020க்குப் பிறகு மனித உடல் என்பதே ஒரு புள்ளிவிவர வடிவமாகி விட்டது. கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் மூலம் நம்முடைய உடல்நிலை, பயணம், தனியுரிமை அனைத்தும் Bio-political கட்டுப்பாட்டில் மாறியுள்ளன. இரண்டாவது, பாதுகாப்பு என்பதன் பெயரில் மனித உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. உக்ரைன், பாலஸ்தீன் போர்கள் இதற்குச் சான்று. மூன்றாவது, சமூக ஊடகங்கள் மூலம் தனிநபர்களின் மனநிலை, பயம், கோபம், சந்தோஷம் ஆகிய உணர்வுகள் அதிபேரமைப்புக்கு உட்பட்ட பொருள்களாக மாறிவிட்டன. FOMO (Fear of Missing Out), Doom Scrolling, Viral Outrage போன்றவை ஆளும் சின்னங்களாக இருக்கின்றன.
இந்த புதிய அதிபேரமைப்பு இந்தியாவிலும் தன் முகங்களை வெளிப்படுத்தி வருகிறது. Aadhaar, Cow Surveillance Apps, CCTV Politics, Uniform Civil Code போன்றவை இங்கே செயல்படுகின்றன. Modi அரசும் இந்த புதிய நவஉலக அதிபேரமைப்பு-ன் பாகமாகவே செயல்படுகிறது. ‘Digital India’, ‘Make in India’, ‘Smart Cities’ போன்ற திட்டங்கள் நம்மை Bio-political subjects ஆக மாற்றும் முயற்சிகளாக உள்ளன. New Education Policy, E-commerce Bill ஆகியவை கூட அதிபேரமைப்பு-ன் உத்திகளே.
இஸ்ரேல், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் அதிபேரமைப்பு-ன் புறஉருவங்கள் தான். ரஷ்யாவும் சீனாவும் இப்பொழுது முழு கம்யூனிச நாடுகள் இல்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள ஏனோ மறுக்கிறோம். இஸ்ரேல் ஒரு ‘Military-Tech Surveillance Empire’, சீனா ‘Data-Credit Empire’, ரஷ்யா ‘Energy-Tech Influence Empire’ என வகைப்படுத்த முடியும். அமெரிக்கா எப்போதும் போல ‘Financial-Digital Control Empire’ ஆக உள்ளது.
இவ்வளவு பெரிய கட்டமைப்புக்கு எதிர்ப்பு தோன்றுவதற்கான இடம் எங்கே? Gramsci சொன்ன Counter-Hegemony இங்கே தேவைப்படுகிறது. Open Source Software, Global Farmer Movements (Bharat Kisan Andolan), Palestinian Resistance, Digital Privacy Groups (Signal, Tor) ஆகியவை இந்த எதிர்ப்பு விதைகளை விதைக்கின்றன. ஆனால் அவை இன்னும் நம்மை அதிபேரமைப்பு-ன் கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கவில்லை. நாம் இன்னும் இந்த பேரியக்கத்தின் உள்ளடக்கிய பாகங்களாகவே இருப்பது உண்மை.
நெகிரி மற்றும் ஹார்ட் சொல்வது போல, இந்த அதிகாரம் repression மூலம் அல்ல, seduction மூலம் நடக்கிறது. Gramsci சொல்வது போல பழைய உலகம் இறந்து கொண்டிருக்கிறது; புதிய உலகம் இன்னும் பிறக்கவில்லை; அதற்கிடையில் பல பைத்தியக்காரங்கள் — டிரெண்டிங் வீடியோக்கள், வைரல் பரப்புரைகள், திரையரங்க வழிபாடுகள், பொது ஆர்வ நுகர்வுகள் — உலகம் முழுதும் தோன்றுகின்றன. இது Agamben சொன்னது போல நிரந்தரமான “அவசர”நிலைதான். ஒவ்வொரு crisis-ம் பின்னர் ஒரு new normal ஆக மாறி விடுகிறது.
இந்த அதிபேரமைப்பு யுகம் எப்போது முடியும் என்று கூற முடியாது. ஆனால் அதன் எதிர்மறை உளவியல், நமக்குத் தோன்றும் நம்பிக்கையற்ற தனிமை, பயம், நுகர்வு தூண்டுதல்கள், அனைத்தும் இது ஒரு ‘crisis as normal’ நிலை என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகின்றன. இதற்குள் நம்முடைய ஆசைகள், எதிர்பார்ப்புகள், எதிர்ப்பு சக்திகள் கூட Empire-ன் கணக்கீட்டுக்குள் உள்ளன.
இது ஒரு சமாதானம் தரும் உலகமல்ல; தடுமாற்றம் நிறைந்த, ஒருபக்கம் நிர்வாகமும் மறுபக்கம் நமக்குள் ஆழமாக புகுந்த ஆதிக்கமும் கொண்ட அதிபேரமைப்பு உலகம். Agamben கூறிய “state of exception” ” “நிரந்தர அவசர நிலை” இப்போது அதிபேரமைப்பு-ன் இயல்பான பாகம்.
நெய்வேலி அசோக்
பொதுச் செயலாளர்
தோழர் களம்