“திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” – திருவள்ளுவர் நாளில் பிரதமர் மோடி வேண்டுகோள்!
National

“திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” – திருவள்ளுவர் நாளில் பிரதமர் மோடி வேண்டுகோள்!

Jan 16, 2026

புதுடெல்லி: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு (ஜனவரி 16), உலகப் பொதுமறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது புகழஞ்சலியைச் செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், திருக்குறளின் சிறப்புகளை உலகறியச் செய்யும் வகையில் பேசியுள்ளார்.

தமிழ்க் கலாசாரத்தின் அடையாளம்

பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருவள்ளுவர் தினமான இன்று, பல கோடி மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் சிந்தனைகளைக் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன். அவர் நல்லிணக்கமும், கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தை விரும்பினார். தமிழ்க் கலாசாரத்தின் மிகச்சிறந்த அடையாளமாக அவர் திகழ்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் விருப்பம்

திருக்குறள் வெறும் ஒரு மொழிக்குரியது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்குமான வழிகாட்டி என்பதை வலியுறுத்திய பிரதமர், “திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும்” என்று உலக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முயற்சியின் முக்கியத்துவம் – பிரதமர் மேற்கோள் காட்டிய குறள்

தனது வீடியோ செய்தியில் ஆளுமைத்திறன் மற்றும் தன்னம்பிக்கை குறித்துப் பேசிய பிரதமர், கீழ்க்கண்ட குறளை மேற்கோள் காட்டினார்:

“அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்”

விளக்கம்: “நம்மால் இதைச் செய்ய முடியாது என்று நினைத்து யாரும் மனம் தளரக்கூடாது; அதைச் செய்து முடிப்பதற்கான பெருமையை ஒருவரது விடாமுயற்சியே தரும்” என்று பிரதமர் அதன் பொருளை விளக்கி, இளைய தலைமுறையினருக்கு ஊக்கமளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *