
மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொன்னானாம்! தந்தை பெரியார் சொல்லவே சொல்லாத ஒன்றைச் சொன்னதாக அவதூறு செய்த நா.த.க. சீமானும் சரி, அவரைக் காப்பாற்றப் புறப்பட்ட சிலரும் சரி, இப்படித்தான் விடையும் விளக்கமும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
”உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக தாய், அக்காள் தங்கை, மகள் எவருடன் வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம்” என்று பெரியார் சொன்னாரா? எங்கு சொன்னார்? எப்போது சொன்னார்? அதற்கு என்ன சான்று? சீமானிடமோ அவருக்கு சப்பை கட்டுகிறவர்களிடமோ இந்த வினாக்களுக்கு விடை இல்லை. தான் செய்த அவதூறுக்காக அவர், அல்லது அவர் சார்பில் மற்றவர்கள் வருத்தம் தெரிவித்து விட்டு, பெரியாரின் உண்மையான கருத்துகளை எவ்வளவு வேண்டுமானாலும் குற்றாய்வு செய்யவும் விவாதிக்கவும் உரிமை உண்டு.
இதை விடுத்து அவர்கள் ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லத்தான் முற்பட்டுள்ளார்கள். பெரியார் இதைச் சொல்லவில்லையா? அதை எழுதவில்லையா? என்று எதிர் வினாக்கள் தொடுத்து வருகின்றார்கள். அதாவது அவர் பேசியதாக சீமான் சொன்னதற்குச் சான்றே இல்லை என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம்தான் இந்த எதிர்வினாக்கள்.
அவர்கள் காட்டிய முதல் சான்று – செந்தில்மள்ளர் என்பவர் கண்டுபிடித்த அந்த விடுதலை நாளிதழ் மேற்கோள் – பொய் என்று மெய்ப்பிக்கப்பட்டு விட்டது. இரண்டாவது சான்றுதான் குடியரசில் பெரியார் எழுதிய ”உறவு முறை” பற்றிய கட்டுரையின் இறுதியில் இடம் பெற்றுள்ள ’சமயோசிதம்’ என்ற சொல். இந்த முழுக் கட்டுரையையுமே நான் எடுத்துப் போட்டு அதன் பொருளை விளக்கிக்காட்டி விட்டேன். பெரியார் கூறாத ஒன்றை மட்டுமல்ல, அவர் கூறியதற்கு மாறான ஒன்றையே இவர்கள் பெரியார் தலையில் கட்டப் பார்க்கிறார்கள். ஒருசிலர் உண்மையை உணர்ந்து விட்டாலும், வேறுசிலர் பெரியாரைத் திட்டுவதையே எல்லாவற்றுக்கும் விடையாக வைத்துள்ளார்கள். இவர்களுக்கான வசனம் சொல்லப்பட்டு ஈராயிரம் ஆண்டுக்கு மேலாயிற்று.
“பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியா திருக்கிறார்களே” (லூக்கா 23:34).
கர்த்தர் மன்னிக்கலாம். காலம் மன்னிக்காது!
என் இந்த முகநூல் இடுகைக்கு ஒரு சிலர் எழுதுகிற பின்னூட்டங்களைப் படிக்கும் போது இவர்கள் அரசியல் ஆட்டிசத்தால் பீடிக்கப்பட்டிருப்பது போல் உள்ளது. நாம் எவ்வளவு எழுதினாலும் இவர்கள் படிக்க மாட்டார்கள், படித்தாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். சொன்னதையே கிளிப்பிள்ளை போல் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆனால் நான் எழுதுவது இவர்களுக்காக அல்ல. புதியனவற்றைப் படிக்கவும் கற்கவும் சற்றேனும் ஆர்வமுள்ள அன்பர்களுக்காகவே எழுதுகிறேன். எழுதுங்கள், நாங்கள் படிக்கவும் கற்கவும் விரும்புகிறோம் என்று ஊக்கம் கொடுக்கிறவர்களுக்கு நாம் ஏமாற்றமளிக்க விரும்பவில்லை.
போகட்டும். சீமானையும் ஆட்டிசத்தையும் மறந்து விட்டு, எங்கெல்சிடம் கொஞ்சம் திரும்பிச் செல்வோம்.
ஆக்கமும் மீளாக்கமுமே மாந்த சமூக வளர்ச்சிக்கு அடிப்படையானவை எனக் கண்டோம். ஆக்கம் என்பது பொருள்-ஆக்கம் மட்டுமன்று, மாந்தர்-ஆக்கமும் கூட. மாந்தர் ஆக்கமும் மீளாக்கமும் செய்யபடுவதையே இனவிருத்தி என்கிறோம். புதுமக் காலத்தில் (நவீனக் காலத்தில்) இதற்கான ஏற்பாடுதான் இல்லறமாகிய குடும்பமும் இல்லற ஏற்பாகிய திருமணமும்.
குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் நூலின் முன்னுரையில் எங்கெல்ஸ் சொன்னார்:
”பொருண்மிய (பொருள்முதல்வாத) கண்ணோட்டத்தின் படி, வரலாற்றில் இறுதியாகத் தீர்மானிக்கும் காரணி நேரான இன்றியமையா வாழ்வுத் தேவைகளின் ஆக்கமும் மீளாக்கமுமே. இதற்கு ஓர் இரட்டைத்தன்மை உள்ளது. ஒரு புறம், உணவுப் பண்டங்கள், உடைகள், வசிப்பிடங்கள், இவற்றின் ஆக்கத்துக்குத் தேவையான கருவிகள்; மறுபுறம், மாந்தப் பிறவிகளின் ஆக்கம், அதாவது இனப்பெருக்கம். இந்த இரு வகை ஆக்கமும்தான் – ஒரு புறம் உழைப்பும், மறுபுறம் குடும்பமும் எந்த வளர்ச்சிக் கட்டத்தில் உள்ளன என்பதுதான் – குறிப்பான ஒரு வரலாற்று ஊழியையும் குறிப்பான ஒரு நாட்டையும் சேர்ந்த மக்கள் வாழும் குமுக (சமூக) ஒழுங்கமைப்பைத் தீர்மானிக்கின்றன.”
[According to the materialistic conception, the determining factor in history is, in the final instance, the production and reproduction of the immediate essentials of life. This, again, is of a twofold character. On the one side, the production of the means of existence, of articles of food and clothing, dwellings, and of the tools necessary for that production; on the other side, the production of human beings themselves, the propagation of the species. The social organization under which the people of a particular historical epoch and a particular country live is determined by both kinds of production: by the stage of development of labor on the one hand and of the family on the other.]
ஆக, நம் குமுக ஒழுங்கைத் தீர்மானிப்பதில் குடும்பத்தின் வளர்ச்சி நிலைக்கும் ஒரு பங்குண்டு. ஆனால் குமுக அறிவியல் வரலாற்றில் மிகவும் பிற்காலத்தில்தான் குடும்ப முறைகள் பற்றிய ஆய்வு தொடங்கியது.
இந்த ஆய்வில் கிடைத்த முடிவுகளைப் பார்க்குமுன், இதெல்லாம் பெரியார் பற்றிய உரையாடலுக்குத் தேவையா? என்ற வினாவிற்கு விடை சொல்லி விடுகிறேன். முகன்மையான சில மார்க்சிய நூல்களைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர் பெரியார். 1931ஆம் ஆண்டே பொதுமைக் கட்சி அறிக்கை “சமதர்ம அறிக்கை” என்ற தலைப்பில் குடியரசு ஏட்டில் வெளிவந்தது. பகத்சிங்கின் ”நான் ஏன் நாத்திகன்?”, அம்பேத்கரின் ”சாதியொழிப்பு” ஆகியவற்றையும் பெரியார் தமிழில் வெளியிட்டார். தமிழ்நாட்டில் அவருக்கு நிகராக அறிவு கொளுத்தும் பணியைச் செய்தது யார்?
சிமிழுக்குள் அடங்காத சிந்தனைக் கிடங்கு தந்தை பெரியார்.
தோழர் தியாகு,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.