
“பெரியார் மீதான அவதூறு: சீமான் பரப்பிய தவறான தகவல்களுக்கு விளக்கம்”
பெரியாரின் உண்மையான கருத்துகளை சிதைத்து, அவதூறு பரப்பும் சீமான் மற்றும் அதற்கு எதிரான சான்றுகளின் விளக்கம்.
“உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோடு , உடன் பிறந்த சகோதரியோடு கலவி வைத்துக் கொள்” என்று தந்தை பெரியார் குடியரசு கட்டுரையில் எழுதியதாக ஒரு வதந்தியை பரப்பி வருகிறார்கள் சீமானும் அவரது தம்பிகளும்.
பெரியார் எந்த கட்டுரையிலும், மேடையிலும் இந்த கருத்தை எழுதவோ, கூறவோ இல்லை.
1945 ஆம் ஆண்டு பெரியார் குடியரசு இதழில் “உறவுமுறை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதுகிறார். அக்கட்டுரையில் மனிதன் எப்படி உறவினர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய அறிவுரையை வழங்குகிறார்.
அந்த கட்டுரையில் ஒவ்வொறு சமூகமும் உறவுமுறைகளை பின்பற்றும் விதம் வேறுபட்டிருப்பதை பற்றி எடுத்துரைத்திருக்கிறார். அதற்கு சான்றாக இந்தியாவில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் திருமணங்களில் பின்பற்றும் வேறுபட்ட உறவு முறைகள் பற்றி கூறுகிறார். ஐரோப்பாவின் திருமணமுறை மற்றும் இந்தியாவின் திருமண முறையின் வேறுபாட்டை பற்றி கூறியிருக்கிறார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் உறவுமுறைகளை பின்பற்றும் விதங்கள் பற்றியும் பகுப்பாய்வு செய்திருக்கிறார். எடுத்துக்காட்டாக, சயாம் நாடுகளில் ஒரு ஆண் தன்னுடன் பிறந்த சகோதரியுடன் கலவி வைத்துக் கொள்வது வழக்கமாக இருந்ததாகவும்; திபெத், மலையாள தேசங்களில் ஒரு பெண் பல புருஷர்களை வைத்துக்கொள்வது வழக்கமாக இருந்ததாகவும், தமிழ் நாட்டில் ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்றாக கருதப்பட்டதாகவும் கூறுகிறார்.
பல்வேறு சமூகங்களில் வழங்கப்படும் சொத்துரிமை வேறுபாட்டை பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். பொதுவாக பல சமூகங்களில் சொத்துரிமை என்பது ஆண்களுக்கே உரிய உரிமையாக இருந்தது. ஆனால் மலையாள நாயர் சாதியில் சொத்துரிமை பெண்களிடம் இருப்பதாகவும், இஸ்லாமிய மதத்தில் ஆண்-பெண் சொத்துரிமை பங்கீடு பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.
ஒவ்வொரு சமுதாயத்திலும் கலவி, சொத்து, துக்கம் போன்றவற்றில் ஒரே மாதிரியான விதி அமல்படுத்தப்படவில்லை. இவை ஏற்கனவே இருந்த பழக்க வழக்கங்களின் அடிப்படையில் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் எழுதியிருக்கிறார்.
கட்டுரையின் இறுதியில் மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறும் போது சமயோசிதமாக நடப்பதே சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்ற அறிவுரையையும் கூறுகிறார். அதற்காகத் தான் உறவுமுறை ஒவ்வொரு நாட்டிலும், சாதியிலும், மதத்திலும் எப்படி வேறுபட்டு இருக்கிறது என்பதை உதாரணமாக எடுத்துக் காட்டினேன் என்று பெரியார் எழுதியுள்ளார்.
ஆகவே கட்டுரையின் எந்த பகுதியிலும் “உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோடு , உடன் பிறந்த சகோதரியோடு கலவி வைத்துக் கொள்” என்று பெரியார் கூறவே இல்லை, மாறாக அவர் பல்வேறு நாடுகள், சமூகங்களில் பின்பற்றப்படும் உறவுமுறைகளின் வேறுபாட்டை எடுத்துரைத்துள்ளார். ஆனால் சீமான் தன்னுடைய நாக்பூர் (ஆர்.எஸ்.எஸ்) முதலாளிகளின் உள்ளங்களை குளிர வைப்பதற்காக தொடர்ந்து பெரியாரை பற்றிய அவதூறுகளை பரப்பிக் கொண்டிருக்கிறார். பெரியாரை கொள்கை தலைவர் என அறிவித்த புதிதாக வந்த ஒருசிலரும் சீமானின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது எந்த முதலாளிகளின் உள்ளங்களை குளிர வைப்பதற்காக இருக்கும்?