இந்த இடுகைத் தொடரில் 12ஆம் இடுகைக்குப் பின்னூட்டமாக வந்த பின்வரும் இடுகையை நீங்கள் படித்திருக்கக் கூடும்.
// தோழர் தியாகு, நீங்கள் அறிவாளி தான் நான் ஏற்கிறேன்.
எனக்கு சில கேள்வி உள்ளன கேட்கட்டுமா?
// 1. மார்க்சியம் முதலாளித்துவ ஆளும்வர்க்க அரசை ஆதரித்து அதற்காக செயல்படுமா? அப்படி செயல்படும் கட்சிகளை உயர்த்திப் பிடிப்பது மார்க்சியம் ஆகுமா?
// சமூக நீதி என்பது வர்க்க விடுதலையா? அல்லது சாதிய சமத்துவமா?
மார்க்சியம் சொல்கின்ற பெண் விடுதலையும் பெரியார் சொல்கின்ற பெண்விடுதலையும் ஒன்றா?
// அரசை எதிர்க்காமல் பார்ப்பன எதிர்ப்பை, பார்ப்பன கடவுள் மறுப்பை சொல்லி மக்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தி ஆளும் வர்க்க அரசை பாதுகாத்தாரே இதை மார்க்சியம் உணர்ந்தவர்கள் ஆதரிக்கலாமா?
// இந்தக் கேள்விகளுக்கு நேர்மையான பதில்களை தங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன்!
Pcpi என்றால் மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி (இந்தியா) என்பதைக் குறிக்கும் என்று தெரிந்து கொண்டேன். இந்த முகநூல் அடையாளத்துடன் எழுதுகிறவர் தோழர் சண்முகசுந்தரம் என்று அறிகிறேன். மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி(இந்தியா)க்கும் தோழர் சண்முகசுந்தரத்துக்கும் வணக்கம்.
கருத்துச் சமரில் அறிவாளி, முட்டாள் என்ற வண்ணனைகள் தேவையற்றவை. கருத்தாளரைப் பற்றிக் கவலைப்படாமல் கருத்தைக் கருத்தாக மட்டும் அணுகுவதுதான் புறஞ்சார்ந்த பார்வை. சரி, அது போகட்டும். உங்கள் வினாக்களை எடுத்துக் கொண்டு எனக்குத் தெரிந்த வரை விடை சொல்கிறேன்.
வினா: 1) மார்க்சியம் முதலாளித்துவ ஆளும் வர்க்க அரசை ஆதரித்து அதற்காகச் செயல்படுமா?
விடை: மார்க்சியம் என்பது ஒரு கோட்பாடு, கொள்கை அல்லது கருத்தியல். அது பாட்டாளி வகுப்பின் கருத்துப் படைக்கலன். பாட்டாளி வகுப்பின் வரலாற்றுக் கடன் என்ற கோணத்திலிருந்தே அது ஒவ்வொரு சிக்கலையும் அணுகுகிறது. குமுகியம் (சோசலிசம்) நோக்கி உழைக்கும் மக்கள் அனைவரையும் அணிதிரட்டி வழிநடத்துவதுதான் அந்த வரலாற்றுக் கடன்.
பாட்டாளி வகுப்பு முதலிய (முதலாளித்துவ) ஆளும் வகுப்பு அரசை ஆதரித்து அதற்காகச் செயல்படலாமா? என்றால், அந்த அரசு எது? எந்தக் காலச் சூழலில் அதை ஆதரிக்கும் தேவை எழுகிறது? அந்த ஆதரவின் தன்மை என்ன? என்ற வினாக்களுக்குக் கிடைக்கும் விடைகளைப் பொறுத்தது. மார்க்சியம், அதாவது பாட்டாளி வகுப்பு, எந்தக் காலத்திலும் எந்தச் சூழலிலும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் எந்த வகையிலும் முதலிய (முதலாளித்துவ) ஆளும் வகுப்பு அரசை ஆதரிக்காது என்று சொல்ல முடியாது. அது மார்க்சியம் வலியுறுத்தும் இயங்கியல் கண்ணோட்டத்துக்கு எதிரானது.
உழைக்கும் மக்கள், குடியாட்சிய ஆற்றல்களின் நலன்கள் அல்லாத தனி நலன்கள் பாட்டாளி வகுப்புக்கு இல்லை, ஆதலால் அனைவர் நலனையும் கருத்தில் கொண்டுதான் பாட்டளி வகுப்பு தன் செயல்பாடுகளைத் தீர்மானித்துக் கொள்வதுதான் மார்க்சிய வழி. மார்க்சியம் மந்திரக் கோலன்று. மார்க்சியர்கள் மந்திரவாதிகளும் அல்லர். மார்க்சியம் உலக அரங்கில் வருகை தருமுன்பே மாந்த குலம் போராட்டங்களையும் புரட்சிகளையும் நடத்திக் கொண்டுதான் இருந்தது. பார்க்கப் போனால் அந்தப் போராட்டங்களின் இயங்கியல் தொடர்ச்சியாகவே மார்க்சியம் மலர்ந்தது. மார்க்சியம் அனைத்து நோய்களுக்குமான அறுதி மருந்தன்று. சர்வரோக சஞ்சீவி எதுவும் இல்லை.
அறிஞர்கள் உலகை விளக்கிக் கொண்டிருந்த போது உலகை மாற்றுவதே குறி என்று மார்க்சியம் சாற்றியது. குமுகத்தை விளங்கிக் கொள்ளவும் மாற்றியமைக்கவும் மிகச் சிறந்த கருவி மார்க்சியம். சில சூழல்களில் இந்தக் கருவி போதாமற்போவதும் உண்டு.
இந்தியாவில் சாதிய அமைப்பை முழுமையாக விளங்கிக் கொள்ள மார்க்சியம் போதுமானதன்று. மார்க்சிய அடிப்படை மீது ஜோதிராவ் புலே, அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட அறிஞர்களையும் துணைக் கோடல் வேண்டும். சாதியமைப்பை விளங்கிக் கொள்வதற்கு மட்டுமன்று, அதனை மாற்றியமைக்கவும் கூட இத்தனைச் சிந்தனை மரபுகளும் நமக்குத் தேவைப்படுகின்றன.
”மார்க்சியம் முதலாளித்துவ ஆளும் வர்க்க அரசை ஆதரித்து அதற்காகச் செயல்படுமா?” என்ற வினாவைத் தோழர் சண்முகசுந்தரம் (Pcpi) எழுப்புவதற்கான பின்னணியைத் தெரிந்து கொண்டால் இன்னுங்கூட விரிவாகவும் ஆழமாகவும் விவாதிக்க உதவியாக இருக்கும்.
முதலாளித்துவ அரசை ஆதரிக்கலாமா? என்ற கேள்வியின் நீட்சியாக… முதலாளித்துவக் கட்சிகளை ஆதரிக்கலாமா? என்ற கேள்வியையும் எழுப்பிப் பார்க்க வேண்டும். இந்தக் கோட்பாட்டுச் சிக்கலுக்கு ஒரு தீர்வு கண்டு விட்டால் செயல்பாட்டுச் சிக்கலுக்கு எளிதில் விடை காணலாம்.
தோழர் தியாகு
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்