மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!
Opinion

மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

Feb 11, 2025

“…உன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள தாய், அக்காள் தங்கை, மகள் யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம்” என்று பெரியார் சொன்னதாக சீமான் ஊடகர்களிடம் பேசி 16 நாளாயிற்று. இது வரை இதற்கு அவர் எவ்விதச் சான்றும் தரவில்லை. சான்று எங்கே? என்று கேட்டவர்களிடம் “அது உங்களிடம்தான் இருக்கிறது, நீங்கள்தான் எடுத்துக் கொடுக்க வேண்டும்” என்று குதர்க்கம் செய்தார். பெரியார் படைப்புகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்று எதிர்க் கோரிக்கையும் வைத்தார்.

ஆக, அவர் எவ்விதச் சான்றும் காட்டவில்லை. பெரியார் எங்கே எப்போது இப்படிச் சொன்னார்? அதை இவர் எப்படித் தெரிந்து கொண்டார்? நாட்டுடைமை ஆகாமல் இருக்கும் போதே பெரியார் பேசியதாக இந்த அசிங்கத்தை எங்கே கண்டுபிடித்தார்?

இந்த நிலையில் சீமானின் சார்பில் வாதிட்ட நண்பர்கள் 11.05.1953 விடுதலை நாளிதழில் பெரியார் பேசியதற்கு சான்று இருப்பதாக (செந்தில் மள்ளரை நம்பி) அறிவித்தார்கள். அந்த விடுதலை இதழில் அப்படி எதுவும் இல்லை என்று மெய்ப்பித்தோம். வேறு நாளில் வந்திருக்கலாம் என்றனர். அது எந்த நாள் என்றும் சொல்லவில்லை. சொன்னால் அந்த விடுதலையையும் காட்டி விடுவோம் என்ற அச்சம்!

பிறகு குடியரசு ஏட்டில் பெரியார் எழுதிய “உறவு முறை” பற்றிய கட்டுரையில் ‘சமயோசிதம்’ என்ற சொல் இருப்பதைச் சொல்லி, இதுதான் சீமான் சொன்னது போல் பெரியார் பேசியதற்கு சான்று என்றார்கள். அந்தக் கட்டுரையை நான் முழுமையாக வெளியிட்டு அதன் கருத்தையும் விளக்கினேன்.

பெரியார் சொன்னதன் பொருள் சீமான் அவர் மீது சுமத்திய அவதூறுக்கு நேர்மாறாக இருப்பதையும் காட்டினேன். ஆனால் இந்த ”உறவு முறை” சான்றை சீமான் ஒருபோதும் காட்டியதாகத் தெரியவில்லை. இப்போது நாதக நண்பர்கள் ”உறவு முறை”யை சான்று காட்டுவதை நிறுத்திக் கொண்டார்கள்.

சீமான் பேசியதற்கு நான் சான்று காட்டுகிறேன் என்று வீறாப்பாக அறிவித்த அண்ணாமலையும் இப்போது தேடப்படுகிறார். அவரைக் காணவில்லை, கிடைத்தால் சொல்லுங்கள். ஆனால் வலதுசாரிகள் என்று தங்களை அறிவித்துக் கொண்டு ஊடக விவாதங்களுக்கு வந்து உட்காரும் சங்கிகள் (சீமானின் கூட்டாளிகள்) சிலர் இப்போதும் சமயோசிதத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சீமான் பேசியதற்கு வேறு யாராவது சான்று தந்தால் கருதிப் பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த போது தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவரும் சீமானால் பேராசானாகப் போற்றப்படுகிறவருமான தோழர் பெ. மணியரசன் நினைவுக்கு வந்தார். ழகரம் செய்தியாளருக்கு மணியரசன் தந்த செவ்வி சனவரி 11ஆம் நாள் வெளிவந்தது. நான் அதை முழுமையாகக் கேட்டு விட்டு முகநூல் சுவரில் இப்படி இடுகையிட்டேன்:

பெரியார் பேசியதாக சீமான் சொல்வதற்குத் தானறிந்த வரை சான்று இல்லை என பெ. மணியரசன் ழகரம் பேட்டி! நன்று!

இதற்குப் பல பின்னூட்டஙகள் வந்தன. அவற்றில் முகன்மையானது ’வளர் மெய்யறிவான் தமிழியல்’ எழுதியது. என் இடுகை தவறு என்று சொல்லி விட்டு “தான் வாசிக்கவில்லை என்றுதான் கூறியிருக்கிறார்” என்று சுட்டிக்காட்டியிருந்தார். அது மட்டுமல்ல. பெம அவர்களின் ழகரம் பேட்டிக்கான வலையொளி இணைப்பையும் கொடுத்திருந்தார். இதோ நானும் அந்த இணைப்பைக் கொடுக்கிறேன். எது சரி என்று நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்:

என் இடுகைக்கான சான்று இந்தச் செவ்விப் பதிவின் வினாடி 2.07க்கும் 3..36க்கும் இடையில் உள்ளது.

ழகரம் ஊடகர் சீமானின் அந்தக் குறிப்பான பேச்சை எடுத்துக் காட்டி பெம அவர்களின் விடையைக் கேட்கிறார். பெம சொல்கிறார்:

“நான் அப்படிப் படிக்கவில்லை. ஆனைமுத்து பதிப்பித்த மூன்று தொகுதிகளைப் படித்துள்ளேன். எல்லாவற்றையும் படித்தாகச் சொல்ல முடியாது. நான் படித்த வரை சீமான் சொன்னது போல் படிக்கவில்லை.”

== சீமான் சொல்வதற்குத் தானறிந்த வரை சான்று இல்லை என்று பெ. மணியரசன் ழகரம் பேட்டி! நன்று == என்று நான் இடுகையிட்டதில் என்ன பிழை? வளர் மெய்யறிவான் சொல்லட்டும். அல்லது யார் வேண்டுமானலும் சொல்லுங்கள். இதற்குப் பிறகு பெம பேசுவதெல்லாம் பெரியார் பற்றிய அவரின் சாடல்கள்! எல்லாமே சொந்தச் சரக்கு! இதுதான் கொட்டைப்பாக்கு என்ன விலை? என்று கேட்டால் பட்டுக்கோட்டைக்கு வழி சொல்லும் தந்திரம்!

பெம சீமானைக் காப்பாற்ற்வில்லை என்பதுதான் நிகர விளைவு! சீமான் சான்று ஏதுமில்லாமல் பேசி விட்டார் என்பதை அவர் ஏற்றுக் கொண்டால் பெரியார் பற்றிய மற்றக் குற்றாய்வுகள் ஒவ்வொன்றையும் அவருடன் விவாதிக்க அணியமாய் உள்ளேன்.

சீமானுக்காக எடுத்துக் காட்டப்பட்ட விடுதலை மேற்கோள் பற்றியோ, குடியரசு “சமயோசிதம்” பற்றியோ இந்தச் செவ்வியில் பெம எதுவும் சொல்லவில்லை. அதற்குப் பிறகும் இந்த சான்றுகள் பற்றி அவர் கருத்துக் கூறவில்லை. இந்தப் பேட்டி வெளிவந்து இரு கிழமை ஆயிற்று. இந்த இடைக்காலத்தில் சீமான் பேச்சுக்கு சான்று கண்டுபிடிக்க பெம எடுத்த முயற்சி என்ன? ஆனைமுத்து அவர்களின் தொகுப்பிலாவது படித்துப் பார்த்து சொல்லியிருக்கலாமே? ”உங்கள் குற்றாய்வுக்கு சான்று இல்லை” என்று சீமானுக்குத் தோழமையாகச் சுட்டியிருக்கலாமே? 15 நாளாக ஏன் இந்த மௌனம்? பெரியாரைச் சாடுவதென்றால் அதற்கு அவதூறும் பயன்படும் எனக் கருதுகின்றீர்களா? நீங்கள் பல்குத்த சீமான் ஒரு சிறு துரும்பா?

தோழர் பெ. மணியரசன் செவ்வியில் வெளிப்படும் அகச் சான்றும், இத்தனை நாளாக அவர் கடைப்பிடிக்கும் கள்ள மௌனமும் சீமான் செய்திருப்பது அவதூறு என்பதை அவர் ஒப்புக்கொண்டிருப்பதையே காட்டும். சீமான் பேசியது பொது வெளியில்! நாம் விவாதித்துக் கொண்டிருப்பதும் பொதுவெளியில்! பெம தனது நிலைப்பாட்டைப் பொதுவெளியில் சொல்ல வேண்டும். சீமான் பேசியதற்கு சான்று இருந்தால் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் சீமானிடம் அவரே சான்று கேட்டு வாங்கித்தர வேண்டும்.எதுவும் இல்லையென்றால் சீமானுக்கு முட்டுக் கொடுப்பதற்காக தொடர்பற்ற முறையில் மடை மாற்றுவதை நிறுத்திக் கொள்ளட்டும்!

தோழர் பெ. மணியரசனிடம் அறிவு நாணயம் எதிர்பார்க்கிறேன். சரிதானே, வளர் மெய்யறிவான் தமிழியல்?

தோழர் தியாகு,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *