
கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில் ஊட்டியில் இன்று தொடங்கும் துணைவேந்தர்கள் மாநாடு
நீலகிரி: ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் இன்றும், நாளையும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கிறார்.
கடும் எதிர்ப்பை மீறி இன்று ஊட்டியில் தொடங்குகிறது துணை வேந்தர்கள் மாநாடு. இந்த மாநாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கக் கூடாது என மாணவர் இயக்கங்கள் வலியுறுத்தி உள்ளன.
துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டைச் சேர்ந்த 48 மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி குறித்து இந்த மாநாட்டில் விரிவான விவாதங்கள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணை வேந்தர்கள் மாநாட்டில் பல்வேறு துறைகளை சார்ந்த நிபுணர்கள் உரையாற்ற உள்ளனர்
துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10.35 மணிக்கு கோவை வருகிறார். பின்னர் அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு, ஊட்டியில் உள்ள ராஜ்பவனுக்கு செல்கிறார். அங்கு நடக்கும் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்று அவர் சிறப்புரை ஆற்றுகிறார்.
முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி சாலை மார்க்கமாக நேற்று மாலை 6 மணியளவில் ஊட்டி ராஜ்பவனுக்கு வந்தார். அங்கு அவரை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் வரவேற்றனர்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், கவர்னர் ரவி மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பில், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா உட்பட, 10 மசோதாக்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் நடத்துவது கடும் எதிர்ப்புகளை கிளப்பி உள்ளது. ஆளுநர் தமிழ்நாடு அரசுடன் அதிகார மோதலில் ஈடுபடுவதாக விமர்சிக்கப்பட்டது. ஆளுநரின் செயல்பாட்டுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
துணைவேந்தர்கள் மாநாட்டை அறிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து நீலகிரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஊட்டி காபி ஹவுஸ் முன்பு கருப்புக்கொடி போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதேபோல, தந்தை பெரியார் திராவிடர் கழகம், துணைவேந்தர்கள் மாநாடு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஆளுநரைக் கண்டித்து ஊட்டி ராஜ்பவனை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளது.
ஆளுநரைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.