ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இதற்கிடையே பயங்கரவாத செயலுக்குக் கண்டனம் தெரிவித்து காஷ்மீர் சட்டசபையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். மன்னிப்பு கேட்க வார்த்தைகளே இல்லை எனக் குறிப்பிட்ட அவர், இந்த துயரச் சம்பவத்தை வைத்து மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்த மாட்டேன் எனத் தெரிவித்தார்..
கடந்த வாரம் நடந்த பஹல்காம் தாக்குதல் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் காஷ்மீர் சிறப்புச் சட்டசபை கூட்டத்தொடர் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உமர் அப்துல்லா
அப்போது பேசிய காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, “இந்த தாக்குதலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி மாநில அந்தஸ்து கோர நான் விரும்பவில்லை. பஹல்காம் துயரத்தைப் பயன்படுத்தி மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கேட்க எப்படி முடியும்? எனது அரசியல் அவ்வளவு மலிவானது இல்லை. இந்த 26 உயிர்களை நான் அவ்வளவு குறைவாக மதிப்பிடப்போவது இல்லை. நாங்கள் ஏற்கனவே மாநில அந்தஸ்து பற்றிப் பேசியுள்ளோம், எதிர்காலத்திலும் பேசுவோம். ஆனால் நான் இப்போது மத்திய அரசிடம் சென்று அதைக் கேட்டால் எனக்கு தான் அது அவமானம்.
இந்த சூழலில் எந்த அரசியலும் இல்லை, எந்த பிஸ்னஸும் இல்லை.. எந்த மாநில அந்தஸ்து கோரிக்கையும் இல்லை. இந்தத் தாக்குதலுக்குக் கடுமையான கண்டனத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனமார்ந்த ஆதரவையும் தெரிவிப்பதற்கான நேரம் இது..
மன்னிப்பு கேட்க வார்த்தைகளே இல்லை
வடக்கிலிருந்து தெற்கு வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை, அருணாச்சல பிரதேசம் முதல் குஜராத் வரை.. ஜம்மு காஷ்மீர் முதல் கேரளா வரை, முழு நாடும் இந்தத் தாக்குதலின் துயரத்தில் மூழ்கியுள்ளது. அடுத்த தாக்குதல் எங்கு நடக்கும் என்று மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக பைசரன் தாக்குதல் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பாதிக்கப்பட்டோரைச் சந்தித்த போது நானும் அங்கு இருந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க எனக்கு வார்த்தைகளே இல்லை.
எனது பொறுப்பு
ஜம்மு காஷ்மீரில் இப்போது பாதுகாப்புத் துறை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கட்டுப்பாட்டில் இல்லை.. ஆனால் முதலமைச்சர், சுற்றுலா அமைச்சர் என்ற முறையில், நான்தான் சுற்றுலா பயணிகளை இங்கு வரவேற்றேன். எனவே, நமது மாநிலத்திற்கு வந்த விருந்தினர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்வது எனது பொறுப்பு. ஆனால், அது என்னால் முடியவில்லை. மன்னிப்பு கேட்க எனக்கு வார்த்தைகள் இல்லை.
தங்கள் அப்பா ரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்ட அந்தக் குழந்தைகளுக்கு, சில நாட்களுக்கு முன்பு திருமணமான கடற்படை அதிகாரியின் மனைவியிடம் நான் என்ன சொல்ல முடியும்? காஷ்மீருக்கு முதல்முறையாகச் சுற்றுலாவுக்கு வந்ததைத் தவிர என்ன தவறு செய்தோம் என அவர்கள் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.
மக்கள் போராட்டம்
இந்த நாசவேலையைச் செய்தவர்கள் எங்களுக்காக இதைச் செய்ததாகக் கூறினர். ஆனால் நாங்கள் இதைக் கேட்டோமா? இந்த 26 பேரையும் எங்கள் பெயரை சொல்லி கொலை செய்யச் சொன்னோமா? இதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோமா? இந்தத் தாக்குதலுக்கு நாங்கள் யாரும் உடன்படவில்லை. மோசமான காலங்களில் நம்பிக்கையைத் தேட வேண்டும் என்பார்கள். அதுபோல தான் காஷ்மீரில் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் நடந்து வருகிறது. 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கத்துவா முதல் குப்வாரா வரை எல்லா இடங்களிலும் மக்கள் தனிச்சையாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்” என்றார்