டெல்லி: மத்திய அரசின் புதிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக்கான தேசிய கவுன்சில் எனப்படும் NCERT-ன் 7-ம் வகுப்புக்கான புத்தகங்களில் இருந்து முகலாயர்கள் மற்றும் சுல்தான்கள் தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது. அதேநேரத்தில் உத்தரப்பிரதேச பாஜக அரசு நடத்திய மகா கும்பமேளா பற்றி மாணவர்களுக்கான இந்த பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல இந்திய வழிபாட்டுத் தலங்கள் குறித்த விவரங்களும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. NCERT பாடப்புத்தகங்களில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவை ஆட்சி செய்த முகலாயர்கள், சுல்தான்கள் பற்றிய பாடங்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டன. தற்போது திருத்தப்பட்ட புத்தகங்களில், இந்த பாடங்கள் அடியோடு நீக்கப்பட்டுள்ளன. தற்போது 7-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இந்திய அரசுகளான, மகதப் பேரரசு தொடங்கி சாதவாகனர்கள் ஆட்சி வரையான பாடங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த பகுதியில் சோழர்கள், பாண்டியர்கள் அரச வம்சங்கள் குறித்த பாடங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான இந்திய வழிபாட்டுத் தலங்கள் குறித்த விவரங்கள், முன்னாள் பிரதமர் நேருவின் வாசகங்களுடன் இடம் பெறச் செய்துள்ளது NCERT. இந்தியாவின் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் குறித்த விவரங்கள் இந்த பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான மேக் இன் இந்தியா குறித்தும் இந்தப் பாடப் புத்தகத்தில் இடம் பெறச் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு பிரக்யாராஜில் நடத்திய பிரம்மாண்டமான மகா கும்பமேளா பற்றிய பாடமும் சேர்க்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பற்றிய பாடமும் இந்த முறை இடம் பெற்றுள்ளது.
அண்மையில்தான் NCERT பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில வழி பாடப் புத்தகங்களுக்கும் இந்தி தலைப்புகள் இடம் பெற்றிருந்தது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அதாவது ஆங்கிலப் புத்தகங்களுக்கு பூர்வி, மிருதங், சந்தூர் என இந்தியில் பெயரிடப்பட்டிருந்தன கணிதப் புத்தகங்களுக்கு கணித பிரகாஷ் எனவும் பெயரிடப்பட்டிருந்தது சர்ச்சைக்குரியதானது குறிப்பிடத்தக்கது.