ஜூலியன் அசாஞ்ச் (1): உண்மைக்காக உயிர்நிலைத் தவறிய வரலாறு: ஜூலியன் அசாஞ்சின் போராட்டம்
Opinion

ஜூலியன் அசாஞ்ச் (1): உண்மைக்காக உயிர்நிலைத் தவறிய வரலாறு: ஜூலியன் அசாஞ்சின் போராட்டம்

Feb 12, 2025

உண்மையின் அச்சமற்ற பரப்புரையாளர் என்று பாராட்டப்படும் ஜூலியன் அசாஞ்ச் ஒரு புலனாய்வு பத்திரிகையாளர். ‘விக்கிலீக்ஸ்’ வலைத்தளத்தின் நிறுவனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அசாஞ்ச் அடிப்படையில் ஒரு கணினி நிரலியலாளர். ஜுலியன் அசாஞ்ச் தனது சுயநலத்தைப் பற்றி மட்டுமே நினைத்திருந்தால் தனது அறிவுத் திறனால் மிகப்பெருமளவிற்கு செல்வம் சேர்த்து பெரும் பணக்காரராக உருவாகியிருக்கலாம், இல்லை புதியக் கண்டுபிடிப்புகளின் மூலம் காப்புரிமை சொத்துக்களை சேர்க்கும் அறிவியல் நிபுணராகக் கூட ஆகியிருக்கலாம்.

வல்லரசுகளின் உளவுத்துறையில் அதிஉயர்ந்த பதவியையும், புகழையும் பெற்றிருக்கலாம். ஆனால் அவரால் அப்படி இருக்க முடியவில்லை. அவர் அப்படி வளர்க்கப்படவும் இல்லை, அப்படிப்பட்ட குறிக்கோளை அவர் வைத்துக் கொள்ளவும் இல்லை. அவர் அசாதாரணமாவராக இருந்தார். உலகின் பெருஞ்செல்வந்தர்கள் செல்வத்தைப் வரிமோசடி செய்து பாதுகாப்பாக வரிப்புகலிடங்களில் சேமித்த போது, அவர் தகவல்களை மக்கள் பெறும் வகையில் பாதுகாப்பாக எங்கு பகிரலாம் எனத் தேடி அலைந்து ‘விக்கி லீக்ஸை’ நிறுவினார். தனி ஒருவராக அவரால் ஒரு இயக்கத்தைப் போல் அசாத்தியமாக செயல்பட முடிந்தது.

வல்லரசுகளின் சவால்களை எதிர்கொள்ளும் துணிவும், அசாத்தியமான அஞ்சா நெஞ்சமும் அவர் கைவரப் பெற்றார். அவர் தனி ஒருவராக ஆரம்பித்தப் பயணம் தனது சிறியத் தொடக்கத்திலிருந்து, சிறிய உதவிகளுடன் தொடங்கப்பட்டது, இன்று வல்லரசுகள் அவரது இருப்பையே அச்சுறுத்தலாகப் பார்க்கின்றனர். மக்களுக்காக உழைப்பவர்களை, மக்களால் அதிகம் தெரிந்துக் கொள்ளப்படவேண்டியவர்கள், மக்கள் அவர்களை அறியாதவண்ணம் இருட்டடிப்பு செய்யப்படுகிறார்கள், அவதூறுகளாலும் பொய்களாலும் தூற்றப்பட்டு, களங்கம் ஏற்படுத்தப்பட்டு சொல்லொணா துயரத்திற்கு ஆட்கொள்கிறார்கள்.

அந்தப் பட்டியலில் இன்றையக் காலத்தைச் சேர்ந்தவராக ஜூலியன் அசாஞ்சே நம் முன் நிற்கிறார். அவர் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டு புனையப்பட்டது. மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் அமெரிக்க அரசு, சர்வதேச ரவுடியாக உலக நாடுகளின் முன்னேற்றத்தைத் தடுத்து சின்னாபின்னமாக்கி, கோடிக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த அமெரிக்க அரசு, ஈரான், ஈராக், ஆஃப்கானிஸ்தான் உட்பட பல்வேறு உலக நாடுகளில் கம்யூனிசத்தை வளரவிடாது ஆட்சிக்கவிழ்ப்புகளை அரங்கேற்றிய அமெரிக்க அரசு, தேசப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் எனக்கூறி ஜூலியன் அசாஞ்சே மீது பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்தியது.

தேசப்பாதுகாப்பு என்றால் என்ன, அமெரிக்க அரசு அதற்கு தலைகீழான வரையறையை தருகிறது. உண்மைகளை மக்களுக்குத் தெரியாமல் ரகசியமாக மறைப்பதே தேசப்பாதுகாப்பு என்கிறது. இத்தகைய அரசுகளால் உண்மைகளை வெளிக்கொணருபவர் தேசவிரோதியாகத் தண்டிக்கப்படுகின்றார். சர்வதேச சட்டங்களை மீறி ஈராக், ஆஃப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்க அரசு செய்த குற்றங்களை மக்களுக்கு அறியத்தந்தார் ஜூலியன் அசாஞ்சே.

அதற்காக அமெரிக்க அரசால் பன்னிரெண்டு வருடங்களாகத் தனிமைப்படுத்தப்பட்டு அரசின் அதி நவீன ஒடுக்குமுறைக் கருவிகளால் ஜூலியன் அசாஞ்சே சித்திரவதை செய்யப்பட்டார். தன் குழந்தை பருவத்தில் நாடோடி போல் சுற்றித்திரிந்தவர் ஜூலியன் அசாஞ்ச். அவர் வளர் இளம் பருவத்தை அடைவதற்குள் 30 க்கும் மேற்பட்ட வெவ்வேறு இடங்களில் வசித்துள்ளார்.

பறவை போல் சுற்றித்திரிந்த அவருக்கு பன்னிரெண்டு ஆண்டுகளாக சிறைப்படுத்தப்பட்டதும், தனிமைப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதும் எவ்வளவு பெரிய கொடுஞ்சித்திரவதையாக இருந்திருக்கும், நினைத்துப்பாருங்கள். தகவல் தொழில்நுட்ப வல்லுநரான அசாஞ்சே தகவலைக் கூறவும் முடியாமல், பகிரவும் முடியாமல், தகவலைப் பெறவும் முடியாமல், அவரது ஐம்புலன்களையும் ஒடுக்கி, நான்கு சுவற்றுக்குள் முடக்கி குற்றுயிராக்கியது அமெரிக்க அரசு.

(தொடரும்)

சமந்தா,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *