நீதிபதி வீட்டில் ₹15 கோடி பணம்! யஷ்வந்த் வர்மா மீது கடும் குற்றச்சாட்டுகள் – பதவிநீக்கம் பரிந்துரை
National

நீதிபதி வீட்டில் ₹15 கோடி பணம்! யஷ்வந்த் வர்மா மீது கடும் குற்றச்சாட்டுகள் – பதவிநீக்கம் பரிந்துரை

Jun 21, 2025

டெல்லி : டெல்லி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில், மார்ச் 14 அன்று ஹோலி பண்டிகை நாளில் ஏற்பட்ட தீ விபத்தில் அவரது சேமிப்பு அறையில் கட்டுக்கட்டாக கணக்கிலிடப்படாத ₹15 கோடிக்கு மேற்பட்ட பணம் மற்றும் நகைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.

தீ விபத்திலும் அதிர்ச்சி அளித்த கண்டுபிடிப்பும்

தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தபோது, வர்மாவின் இல்லத்தில் உள்ள மற்றொரு அறையில் நிறைய பணக் கட்டுகள் மற்றும் நகைகள் இருந்தது. மேலும், சில பணக்கட்டுகள் தீயில் எரிந்தும் மீட்கப்பட்டன. இதைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்தும் கொலிஜியம் ஆலோசனை நடைபெற்று, நீதிபதி வர்மாவை மாற்றுப்பணியிடத்தில் நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

உச்சநீதிமன்ற விசாரணைக் குழுவின் கண்டறிதல்கள்

இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் ஷிக் நாகு, ஜி.எஸ் சந்தவாலியா, அனு சிவராமன் ஆகியோரின் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. சமீபத்தில் அந்தக் குழு தாக்கல் செய்த அறிக்கையில், தீ விபத்துக்கு உள்ளான அறை நீதிபதியின் குடும்ப கட்டுப்பாட்டில் இருந்தது என்றும், அங்கு இருந்த பணம் குறித்த முழுப் பொறுப்பும் நீதிபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என கண்டறிந்துள்ளனர்.

அதிகாரப்பூர்வ பறிமுதல் ஆவணங்கள், எஃப்ஐஆர் பதிவு செய்யாமை, மற்றும் போலீசாரின் ஒழுங்கின்மை குறித்து விசாரணை குழு “அஜாக்கிரதையான செயற்பாடுகள்” என கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் அதுவே நீதிபதி வர்மாவை விடுவிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

சதி வாதங்கள் நிராகரிப்பு

நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது மீது சதி நடத்தப்பட்டதாக கூறினார். ஆனால் விசாரணை குழு, இந்த வாதத்தை அடிப்படை ஆதாரங்கள் இல்லாததாக நிராகரித்தது. மேலும், தனது டிரான்ஸ்பரை ஏற்கவும், போலீசாரிடம் முறையான புகாரளிக்க தவறியதையும் குழு கேள்வி எழுப்பியது.

அதுமட்டுமல்லாது, மார்ச் 15 அதிகாலை நேரத்தில் பணம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளதாக குழு தெரிவிக்கிறது. இது ஒரு திட்டமிடப்பட்ட சூழ்ச்சி எனப் பார்க்க வாய்ப்பு அதிகம் என அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

பதவிநீக்கம் பரிந்துரை – நாடாளுமன்ற நடவடிக்கை எதிர்பார்ப்பு

இந்த வழக்கைத் தொடர்ந்து, யஷ்வந்த் வர்மா பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டிய நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜூலை மழைக்கால கூட்டத்தொடரில், இது தொடர்பான பதவிநீக்க தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என நம்பப்படுகிறது.

இந்த வழக்கு, இந்திய நீதிமன்ற அமைப்பின் நம்பிக்கையை அச்சுறுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. நீதிபதியாக உள்ள ஒருவரது இல்லத்தில் ₹15 கோடி மதிப்பிலான பணம் இருப்பது, அதற்கான முறையான விளக்கமின்றி தவிர்க்கப்பட்டுள்ளதோடு, அந்தச் சம்பவம் மீது நேர்மையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூற முடியாது.

நாட்டின் நீதித்துறையின் தழுவல் மற்றும் நம்பிக்கைக்கு பாதிப்பளிக்கக்கூடிய இந்த வழக்கு, நீதிமன்ற அதிகாரிகளை பொறுப்புடனும் கண்காணிப்புடனும் செயல்பட வேண்டிய அவசியத்தை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறது.

அரசியல் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *