ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டின் முதல் இரு நிலைகள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், மூன்றாவது நிலை பிரியும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் திட்டம் தோல்வி அடைந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரோ அனுப்பும் சாட்டிலைட்களும் பெரும்பாலும் வெற்றி அடையவே செய்யும். இதன் காரணமாகவே உலகின் பல டாப் நாடுகள் கூட தங்கள் சாட்டிலைட்டை விண்ணில் செலுத்த இஸ்ரோவிடம் வரும்.
தோல்வி
இருப்பினும், சில அரிய சூழலில் இஸ்ரோ திட்டம் தோல்வி அடையும். அப்படியொரு சம்பவம் தான் இன்று நடந்துள்ளது. எதிர்பாராத விதமாக இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது. பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 3வது அடுக்கு பிரிந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் EOS-09 சாட்டிலைட்டை விண்ணில் செலுத்தும் திட்டம் தோல்வி அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடித்து சிதறியது
முதல் இரண்டு அடுக்குகள் வெற்றி ரகமாக முடிந்த நிலையில், மூன்றாவது அடுக்கு பிரியும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இந்திய நேரப்படி காலை 5:59 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்பட்டது. இருப்பினும், PS3 திட ராக்கெட்டில் மோட்டார் கட்டத்தின் போது அது பாதையிலிருந்து விலகிச் சென்றது.
இதனால் வேறு வழியின்றி இஸ்ரோ பிஎஸ்3 பணியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் ராக்கெட் மற்றும் சாட்டிலைட்டை நடுவானில் வெடித்துச் சிதற வைத்தனர். அதன் பாகங்கள் பாதுகாப்பாகக் கடலில் விழுவதும் உறுதி செய்யப்பட்டது.
மூன்றாவது முறை
இந்த திட்டம் மூலம் 1,696 கிலோ எடையுள்ள EOS-09 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதே திட்டமாக இருந்தது. 524 கிமீ தொலைவில் உள்ள சூரிய துருவ சுற்றுப்பாதையை அடையத் தவறிவிட்டது. இது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட 101ஆவது ராக்கெட் திட்டமாகும். கடந்த 2017 முதல் இஸ்ரோவின் திட்டங்கள் 58 முறை தொடர்ச்சியாக வெற்றி அடைந்தே வந்தது. இப்போது சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாகத் திட்டம் தோல்வி அடைந்துள்ளது. பிஎஸ்எல்வி இஸ்ரோவின் நம்பிக்கைக்குரிய ராக்கெட்டாக இருந்து வருகிறது. பிஎஸ்எல்வி வரலாற்றில் இதுபோல முழுமையாகத் தோல்வி அடைவது இது மூன்றாவது முறையாகும்.
என்ன நடந்தது
இன்றைய இஸ்ரோ மிஷன் தோல்வி அடைந்ததை இஸ்ரோ தலைவர் வி நாராயணன் உறுதி செய்துள்ளார். ராக்கெட்டில் என்ன சிக்கல் ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் இஸ்ரோ தலைவர் வி நாராயணன் தெரிவித்தார்.
HTPB, அதாவது ஹைட்ராக்சில்-டெர்மினேட்டட் பாலிபியூடடீன் உந்துசக்தியைப் பயன்படுத்தும் மூன்றாம்-நிலை மோட்டார், 203ஆவது நொடிகளுக்குப் பிறகுச் சரியாகச் செயல்படவில்லை. இதுவே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. என்ன தவறாகப் போனது என்பது குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், அதன் பிறகே என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரிய வரும்.