டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் நடைபெறும் இந்த முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான மேலும் சில அதிரடி நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த நேரத்திலும் இந்தியா தாக்குதல் நடத்தலாம் என பீதியில் பாகிஸ்தான் அலறும் நிலையில் இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாத கும்பல் சுட்டுப் படுகொலை செய்தது. இதனையடுத்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்தது. பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து; பாகிஸ்தானியர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வெளியேற்றம்; பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைப்பு; பாகிஸ்தானுடனான வாகா, அட்டாரி எல்லைகள் மூடல் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கான சிந்து நதிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டனர். வாகா, அட்டாரி எல்லைகள் வழியாக பாகிஸ்தானுடனான அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு இந்த எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
இதற்கு பதில் தருவதாக பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை அறிவித்தது. இந்தியாவுடனான யுத்தத்தை தவிர்க்கும் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வது, இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்பரப்பில் தடை, இந்தியர்கள் வெளியேற்றம் என்பது பாகிஸ்தானின் அறிவிப்பு.
இந்த நிலையில் தங்கள் நாடு மீது இந்தியா எந்த நேரத்திலும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பீதியில் அலறிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இந்த அச்சத்தால் ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்தினர் மீது தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது.
டெல்லியில் பிரதமர் மோடியும் நேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் நடைபெறும் முதலாவது மத்திய அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.
இன்றைய கூட்டத்திலும் பாகிஸ்தானுக்கு எதிரான மேலும் சில அதிரடி நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்திய வான்பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையவும், இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்கள் நுழையவும் தடை விதிக்கும் முடிவு இன்று வெளியாகக் கூடும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.