உலகின் முதல் சாதனை: பீரங்கி குண்டுகளில் ரேம்ஜெட் இன்ஜின்! சென்னை ஐஐடி மற்றும் இந்திய ராணுவம் அதிரடி!
இந்தியப் பாதுகாப்புத் துறையில் ஒரு புரட்சிகரமான மைல்கல்லை இந்திய ராணுவம் எட்டியுள்ளது. உலகில் முதல் முறையாக, 155 எம்எம் (155mm) பீரங்கி குண்டுகளில் ரேம்ஜெட் (Ramjet) இன்ஜின் தொழில்நுட்பத்தைப் பொருத்தி இந்திய ராணுவம் சாதனை படைத்துள்ளது.
சென்னை ஐஐடியின் பங்களிப்பு
சென்னை ஐஐடியின் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறை பேராசிரியர்கள் பி.ஏ. ராமகிருஷ்ணா மற்றும் எஸ். வர்மா ஆகியோர் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். ‘தற்சார்பு இந்தியா’ (Atmanirbhar Bharat) திட்டத்தின் கீழ் இது உருவாக்கப்பட்டுள்ளது.
ரேம்ஜெட் தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள்:
- அதிவேகம்: இந்த வகை குண்டுகள் ‘மேக் 2’ (Mach 2) வேகத்தில் பயணிக்கும். இது சாதாரண திட எரிபொருள் ராக்கெட் குண்டுகளை விட அதிக வேகமானது.
- அதிக தூரம்: சாதாரண பீரங்கி குண்டுகளை விட, ரேம்ஜெட் பொருத்தப்பட்ட குண்டுகள் 30% முதல் 50% அதிக தூரம் சென்று இலக்கைத் தாக்கும்.
- இயங்கும் முறை: இந்த இன்ஜின் வெளியில் உள்ள காற்றையே உறிஞ்சி அழுத்தத்தை ஏற்படுத்தி இயங்குவதால், இதற்குத் தனியாக கம்ப்ரசர்கள் தேவையில்லை.
இந்தத் தொழில்நுட்பம் மூலம், இந்திய ராணுவத்தின் தொலைதூர இலக்குகளைத் தாக்கும் திறன் பலமடங்கு அதிகரிக்கும். தற்போது ராணுவத்திடம் உள்ள 155 எம்எம் பீரங்கிகளிலேயே இந்த நவீன குண்டுகளைப் பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும்.
