
“அடிக்கும்மழையில் அணையும் நிக்க முடியாது” – சட்டமன்றத்தில் துரைமுருகன் பதில்கள்
சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பர்.
இன்று, நாளை என இரண்டு நாட்கள் இந்தக் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதல் நாளான இன்று, மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தொழிலதிபர் ரத்தன் டாடா, மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்தவகையில், மலட்டாற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டுமென திமுக எம்.எல்.ஏ மணிகண்ணன் முன்வைத்த கோரிக்கைக்கு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தடுப்பணைகள், நீர்த்தேக்கங்களை உடனடியாக சீரமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என்றார். மேலும், கீழ்பெண்ணாத்தூர் கிளிஞ்சல் ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்ட நடவடிக்கை தேவை என சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “இந்த காலத்து மழைக்கு தடுப்பணை என்ன, அணையே நிக்க மாட்டேங்குது. இருப்பினும் அரசு சார்பில் பிச்சாண்டி கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார். அதேபோல, அதிமுக எம்.எல்.ஏ அரக்கோணம் ரவி “எங்களுடைய தொகுதியில் நீர்நிலைகள் மிகவும் சீரற்று இருக்கிறது. அதனை போர்க்கால அடிப்படையில் சரி செய்து கொடுக்க வேண்டும்” என்று கூறினார். அதற்கு பதிலளித்த துரைமுருகன், “போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல், மின்னல் வேகத்திலேயே நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். துரை முருகனின் இதுபோன்ற பதில்களைக் கேட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சிரித்தனர்.