டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் நடவடிக்கையை ‘டிராமா’ என சாடும் திமுக வழக்கறிஞர் – உச்சநீதிமன்ற இடைநிறுத்த உத்தரவை வரவேற்பு
National

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் நடவடிக்கையை ‘டிராமா’ என சாடும் திமுக வழக்கறிஞர் – உச்சநீதிமன்ற இடைநிறுத்த உத்தரவை வரவேற்பு

May 22, 2025

சென்னை: அமலாக்கத்துறையின் முட்டாள்தனத்திற்கு தான் உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக திமுக வழக்கறிஞர் சரவணன் கருத்து தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள எஃப்ஐஆர் முட்டாள்தனமானது என்று கூறியுள்ள அவர், டாஸ்மாக் அதிகாரிகளின் வீடுகளுக்கு வெளியில் இருந்த பேப்பரை எடுத்து டிராமா செய்ததாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைக்கு பின் அமலாக்கத்துறை சார்பாக ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் இந்த சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் சார்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்றம் கேள்வி

இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது. டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அதிகாரிக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அமலாக்கத்துறைக்கு அங்கு என்ன வேலை?

தனியுரிமை எங்கே போனது? தனி நபர் செய்த விதிமீறலுக்காக ஒரு நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதா? அமலாக்கத்துறை தனது எல்லையை கடந்து செயல்பட்டுள்ளது. கூட்டாட்சி அமைப்பையே தனது நடவடிக்கையால் சிதைத்துள்ளது. ஒரு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் செயல்பாட்டை முடக்கும் வகையில் செல்போன், கணினி உள்ளிட்ட அனைத்தையும் முடக்கியுள்ளனர். தனியுரிமை எங்கே போனது? என்று கேள்வி எழுப்பியது.

திமுக வழக்கறிஞர் சரவணன்

தொடர்ந்து தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனை திமுகவினர் வரவேற்றுள்ளனர். இதுதொடர்பாக திமுக வழக்கறிஞர் சரவணன் பேசுகையில், டாஸ்மாக் வழக்கு தொடர்பாக இதனைதான் முன்னால் இருந்து சொல்லி கொண்டிருந்தோம்.

60 மணி நேரம்

இந்த எஃப்ஐஆர்-ஏ முட்டாள்தனமான ஒன்று. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட 30 எஃப்ஐஆர், திமுக ஆட்சியில் போடப்பட்ட 10 எஃப்ஐஆர் என்று மொத்தமாக கையில் எடுத்து, ரெய்டு நடத்தி இருக்கிறது. அமலாக்கத்துறையின் முட்டாள்தனத்திற்கு தான் உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. டாஸ்மாக் அதிகாரிகளை 60 மணி நேரம் அடைத்துவைத்து துன்புறுத்தினார்கள்.

அமலாக்கத்துறையின் டிராமா

அதற்காகதான் தமிழக அரசு உச்சநீதிமன்றம் வரை சென்றது. அதிகாரிகளின் வீடுகளுக்கு வெளியில் கிடந்த பேப்பரை வைத்து கொண்டு டிராமா செய்தார்கள். வாட்ஸ் அப் சாட்டில் இப்படியிருந்தது என்றெல்லாம் சொல்லி கொண்டிருக்கிறார்கள். இதனால் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்டோர் சோகம் அடைந்திருப்பார்கள். அமலாக்கத்துறையினர் எஃப்ஐஆர் தவறானது.

தேர்தல் நேரத்தில் ED செய்யும் வேலை

அதாவது மாநில அரசு அமைப்பின் மீது தகுந்த ஆதாரம் இல்லாமல் இப்படியான முன்னெடுப்புகளை எடுக்க முடியாது என்று சொல்லி வந்தோம். விரைவில் அமலாக்கத்துறையினரின் இந்த விசாரணை தவறு என்று சொல்லி, உச்சநீதிமன்றம் ரத்து செய்யும். தேர்தல் தேரத்தில் ஊழல் வழக்கு விசாரணை என்று எதிர்க்கட்சியின் முக்கிய நிர்வாகிகளை கைது செய்யக் கூடிய முக்கிய பணியை அமலாக்கத்துறை செய்து வந்தது. அமலாக்கத்துறை ஏராளமான வழக்குகளில் குட்டு வாங்கி கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அரசியல் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *