மாட்டிக் கொண்டாரா பெரியார்? (14)
Opinion

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (14)

Feb 15, 2025

தந்தை பெரியார் மீது சீமான் பரப்பிய அவதூறு, தன் குற்றாய்வுக்குச் சான்று காட்ட முடியாத நிலையில் அவர் அள்ளிச் சிதற விட்ட பழிதூற்றல்கள், திடீரென்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் பெரியாரையும் மோத விட்ட தீச்செயல், இதுதான் வாய்ப்பென்று சீமானுக்கு சப்பைகட்டும் சாக்கில் பெரியார் புகழை சிதைக்கக் கிளம்பிய தோழர் பெ. மணியரசனின் முன்னுக்குப் பின் முரணான வாதுரைகள், அம்பறாத் தூணியில் கணை ஏதும் இல்லாத நிலையில் செருப்பை எடுத்து வீசுவது போல் பெரியார் மீதும் அவருக்காகக் கொள்கை வழிநின்று வாதிட்டவர்கள் மீதும் அசிங்கமான வசவுகளை வாரி வீசும் கதிர்நிலவன் வகையறாவின் தரங்கெட்ட ’சமயோசித’ முயற்சிகள்… இத்தனைக்கும் நடுவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்து முடிவும் தெரிந்து விட்டது.

இந்த இடைத்தேர்தலில் நாங்கள் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும், தமிழ் மக்கள் உரிமை முன்னணியும்) எவ்வித அக்கறையும் செலுத்தவில்லை. நம்முடைய பொதுவான விடுதலைப் போராட்டத்திலும், இப்போது சீமான் வகையறாவின் அவதூறுக்கு எதிரான கருத்துப் போராட்டத்திலும் இந்த இடைத்தேர்தலுக்கும் அதன் முடிவுக்கும் எவ்விதப் பங்கும் இல்லை எனக் கருதினோம். தேர்தல் ஆனாலும் இடைத் தேர்தல் ஆனாலும் அதற்குரிய மையச் சிக்கலை அடிப்படையாகக் கொண்டுதான் பங்கேற்பு, ஆதரவு அல்லது எதிர்ப்பு, புறக்கணிப்பு அல்லது ஒதுங்கியிருத்தல் பற்றி முடிவெடுக்க முடியும். பெரியார் புகழ் என்பது ஒரு தேர்தலில், அதிலும் இடைத் தேர்தலில் மையச் சிக்கலாக முடியாது. பாசக பார்ப்பனிய பாசிச எதிர்ப்பை மையச் சிக்கலாக்கி திமுக இந்தத் தேர்தலை சந்திக்கவில்லை. திமுக தேர்தலில் ஆதரவு கேட்டு முன்வைத்த ’சாதனை’ச் செய்திகளை நம்மால் அட்டியின்றி ஆதரிக்க முடியாது. நம் குற்றாய்வுகளை முன்னிறுத்தி தேர்தலில் இயக்கம் நடத்துவதற்குரிய வேட்பாளர் யாருமில்லை.

சீமானை எதிர்ப்பது பெரியார் புகழுக்காகவா? பெரியார் கொள்கைக்காகவா? என்ற தெளிவு நமக்குத் தேவை. இன்றைக்கு நமக்குத் தேவைப்படுவது பெரியார் கொள்கை, தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தின் வடிவில் அவர் உறுதியாக முன்வைத்த அரசியல் கொள்கை! இந்தக் கொள்கையில் திமுக எங்கே நிற்கிறது என்ற தெளிவில்லாமல் பெரியார் பெயருக்காக மட்டும் நாம் திமுகவை ஆதரிக்க முடியாது. ஆதரிப்பதற்கு வேறு காரணங்கள் இருந்தால் சொல்ல வேண்டும். இந்த இடைத்தேர்தலில் அப்படி எந்தக் காரணமும் நமக்குப் புலப்படவில்லை.

நண்பர்கள் சிலர் சீமானைத் தண்டிக்க இந்த இடைத்தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதினார்கள். அவர்களின் உணர்வுகளை மதிக்கும் போதே, எந்தத் தேர்தல் களத்தையும் ஒருவரைத் தண்டிப்பதற்கோ மெச்சிப் பரிசளிக்கவோ ஒரு வாய்ப்பாகக் கருதுவது சரியான அரசியல் பார்வையாகாது. தேர்தல் என்பது ஓர் அரசியல் போராட்டக் களமாக அமையும் போதுதான் கொள்கை வழி நின்று அதில் நம்மால் இறங்க முடியும். அப்படியில்லாமல் அவ்வப்போதைய உணர்ச்சிசார்ந்து களத்தில் இறங்கி எவரையும் கொள்கை வழிப்படாமல் ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது மக்கள் நலனுக்கு உதவாது, அது நம்மைக் கேலிப்பொருளாக்கி விடும்.

ஒரு பழைய செய்தியை நினைவுபடுத்த விரும்புகிறேன். 1977 பொதுத் தேர்தலின் போது நான் திருச்சிராப்பள்ளி நடுவண் சிறையில் இருந்தேன். அந்தத் தேர்தல் இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடிக்கு நிலைக்குப் பின் நடந்தது. நெருக்கடி நிலையை ஆதரித்த இந்திரா காங்கிரசு, சிபிஐ, அதிமுக ஒரு பக்கமும் எதிர்த்த திமுக, பழைய காங்கிரசு, சிபிஎம் மறு பக்கமும் நின்று போட்டியிட்டன. திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதியில் சிபிஐ சார்பில் தோழர் எம் கல்யாணசுந்தரமும் பழைய காங்கிரசு சார்பில் ஒய். வெங்கடேச தீட்சிதரும் போட்டியிட்டனர். தோழர் எம்கே எங்களுக்கும் சிறைப்பட்டவர்களுக்கும் குரல் கொடுக்கக் கூடியவர்; சிறைப்பட்டவர்கள் கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்கக் கூடியவர். சிறைப் போராட்டங்களை ஆதரிப்பவர். அவர் வெற்றி பெற வேண்டும் என்பதே சிறைப்பட்டோரின் விருப்பமாக இருந்தது. இதை வைத்து சிபிஐ தோழர்கள் சிபிஎம்மில் இருந்த எங்களோடு வாதிட்டார்கள். வெங்கடேச தீட்சிதர் திருவரங்கம் நகராட்சித் தலைவராக இருந்தவர், முன்பு சுதந்திராக் கட்சியில் இருந்தார். பிறகு காமராசர் தலைமையிலான காங்கிரசில் சேர்ந்தார். அள்ளி முடிந்த பார்ப்பனர். தோழர் கல்யாணசுந்தரம் எங்கே? இந்தக் குடுமி வைத்த பார்ப்பனர் எங்கே? என்று எங்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

நாங்கள் இந்தப் போட்டி கல்யாணசுந்தரம், வெங்கடேச தீட்சிதர் ஆகிய இரு தனிமனிதர்களிடையே என்றால் தோழர் எம்கேயைத்தான் ஆதரிக்க வேண்டியிருக்கும். ஆனால் நெருக்கடிநிலை ஆதரவுக்கும் எதிர்ப்புக்குமான போட்டி என்பதால் சனநாயத்தின் பொருட்டு தீட்சிதரைத்தான் ஆதரிக்க முடியும் என்று வாதிட்டோம். உங்கள் அளவுகோலை அப்படியே மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்குப் பொருத்திப் பார்த்தால் என்னாகும்? என்று கேட்டோம். அங்கு பி.ராமமூர்த்திக்கு ஆர்வி சாமிநாதன் ஈடாவாரா?

தேர்தல் அரசியல் அணுகுமுறை குறித்து நமக்கு ஒரு தெளிவான பார்வை இருந்தால்தான் சட்புட்டென்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுப்பதைத் தவிர்க்க முடியும். இல்லையேல் தன் முரண்பாடுகளில் சிக்கிக் கொள்வோம்.

போகட்டும். ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையும் முடிவாக வந்துள்ள வாக்கு எண்ணிக்கையும் சீமானின் தீய உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தி விட்டன. சீமான் திடீரென்று பெரியாரைப் பாய்ந்து கடிக்கத் தொடங்கியது தற்செயலாக அன்று என்பது தெரிந்து விட்டது. பெரியாரைத் திட்டினால் பார்ப்பனர்களின் ஆதரவு கிடைக்கும், ஓரளவு மற்ற உயர்வகுப்பார் ஆதரவும் கிடைக்கும், பாசக ஆதரவு மனப்போக்குடைய வாக்காளர்களின் ஆதரவும் கிடைக்கும் என்ற கணக்கோடுதான் பெரியார் சாடலை அவர் தொடங்கியிருக்க வேண்டும்.

எனக்குத் தெரிந்த ஒன்றைச் சொல்கிறேன். தூய தமிழ்த் தேசியத்தின் பெயரால் பெரியாரைக் கடுமையாகச் சாடுகின்ற சிலர் அகத்தில் சாதிப் பற்றாளர்கள். அதை மறைத்துக் கொண்டுதான் ‘ஐயோ, பெரியார் தமிழைப் பழித்து விட்டாரே!’ என்று புலம்புவார்கள்!

அண்ணாமலை, குருமூர்த்தி, தமிழிசை (”தீம் பார்ட்னர்”), பாண்டே ஆகியோரின் நல்லாதரவை அவர் உவந்து ஏற்றுக் கொண்டார். நாதக வேட்பாளர் விளைவளவில் நாதக-பாசக கூட்டு வேட்பாளராகத்தான் நின்றார். குடுமியை மறைக்கத்தான் இப்போது அண்ணாமலை சிணுங்குகிறார். சென்ற முறை நாதகவும் பாசகவும் பெற்ற வாக்குகளைக் கூட்டினால் இந்த முறை நாதக பெற்ற வாக்குகளுக்குக் கிட்டத்தட்ட சமம் என்று பலரும் சுட்டியுள்ளனர். சில கூட்டல் கழித்தல் திருத்தங்கள் தேவைப்படலாம். நாதகவுக்கு சென்ற முறை வாக்களித்த சிலர் இந்த முறை அவ்வாறு வாக்களிக்காமல் போயிருக்கலாம். திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு என்ற வகையிலும் சில வாக்குகள் நாதகவுக்குப் போயிருக்கலாம். யாரும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அனைத்து மக்களையும் முறையே கட்சிகளின் நிரந்தரமான தனித்துரிய வாக்கு வங்கிகளாகக் கூறு போட்டுப் பார்ப்பது பிழை. பெரும்பாலான மக்கள் இந்தப் பெட்டிகளில் அடங்க மாட்டார்கள்.

திமுக தரப்போ நாதக தரப்போ பெரிய வெற்றி என்று கொண்டாடுவதற்கு எதுவுமில்லை. இந்த இடைத்தேர்தலுக்கோ அதன் முடிவுக்கோ தமிழ்நாட்டின் வரலாற்றில் எவ்விதத் தாக்கமும் இல்லை. சீமான் மற்றும் மணியரசனின் பெரியார்-சாடலுக்கு எதிரான கருத்துப் போராட்டத்திலும் இந்த இடைத்தேர்தலும் அதன் முடிவும் எந்த விளைவும் கொள்ளாது. நாதக 25 ஆயிரம் என்ன, 75 ஆயிரம் வாக்குப் பெற்றாலும் பெரியார் மீதான அவதூறு உண்மையாகி விடாது. நாம் பெரியாரை, அவர்தம் கொள்கையை முன்னிறுத்திப் போராடுவதும் ஓயாது. தமிழ்நாடு தமிழருக்கே!

தொடர்கிறேன்…

தோழர் தியாகு
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *