
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (23)
மார்க்சியத்தின் மெய்யியல் அடிப்படையாகிய பொருண்மிய இயங்கியலை மார்க்சியத்துக்கு மட்டும் பொருத்திப் பார்க்க மறுப்பது தங்களை மார்க்சியர்களாகக் கருதிக் கொள்ளும் சில அன்புத் தோழர்களிடம் காணப்படும் பெருங்குறையாக உள்ளது.
மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இயங்கியல் ஆசானாகத் திகழ்ந்த எர்னெஸ்ட் ஹெகலுக்கு இப்படி ஒரு சிக்கல் நேரிட்டது. எல்லாம் இயங்கிக் கொண்டே இருக்கிறது, மாறிக்கொண்டே இருக்கிறது என்றார் ஹெகல். அப்படியானால் பிரஷ்யப் பேரரசு மட்டும் எப்படி நிலையாக மாறாமல் இருக்க முடியும் என்று மார்க்சும் எங்கெல்சும் மற்ற இளம் ஹெகலியர்களும் கேள்வி எழுப்பினார்கள். ஹெகலின் இயங்கியல் பொருண்மிய இயங்கியல் (பொருள்முதல்வாத இயக்கவியல்) அன்று என்பதால், இயக்கத்துக்கும் மாற்றத்துக்கும் அடிப்படையாகத் ”தன்னிலான ஒன்று” (a thing-in-itself) உள்ளது, அதன் உருவமாக பிரஷ்யப் பேரரசு இருப்பதால் அதற்கு மாற்றம் பற்றிய நெறி பொருந்தாது என்று ஹெகல் சொல்லி விட்டார். நம் மெய்யியலில் இந்தத் தன்னிலான ஒன்றைத்தான் ’பிரம்மம்’ என்கிறோம். பருப்பொருள் என்று பொருண்மிய மெய்யியல் வரையறுப்பதைப் பரம்பொருள் ஆக்குவதுதான் பிரம்மம் என்ற நம்பிக்கை.
மார்க்சியமும் மார்க்சியப் புரிதலும் வளர்ந்து செல்வதுதான் உயிரோட்டமான அறிவியல் பார்வை மார்க்சியத்தை மதக் கோட்பாடு போல் புனிதமாக்குவது அதன் தேக்கத்துக்கும் அழிவுக்குமே வழிகோலும். கார்ல் மார்க்சைப் போற்றுவதில் ஒரு மீப்புனைவிய அணுகுமுறை (romanticist approach) உள்ளது. என்னிடம் இருந்தது, மார்க்ஸ் தொடர்பாக மட்டுமன்று, இலெனின், மாவோ தொடர்பாகவும் இருந்தது. அதனால்தான் மார்க்ஸ் குறித்து “இவனுக்கு முந்தைய வரலாறு அனைத்தும் இவனில் முடிந்து பிந்தைய வரலாறு அனைத்தும் இவனிலிருந்தே தொடங்குகிறது” என்று ஒருவர் சொன்னதை நம்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தேன். புரட்சி என்ற பெயரில் நாங்கள் செய்த மடைமைகளையெல்லம் மாவோ பெயரில் ஞாயப்படுத்திக் கொண்டிருந்தேன். இதையெல்லாம் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு இளந்தலைமுறையை எச்சரிக்கும் கடமை என் போன்றவர்களுக்கு உண்டு.
கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ் வாழ்ந்த காலத்திலேயே அவர்கள் மீது பெருந்தாக்கம் செலுத்திய ஒரு நிகழ்ச்சிதான் பாரிஸ் கொம்யூன்! நிகழ்ச்சி என்றா சொன்னேன்? இல்லை, புரட்சி!
ஒரு பொதுமையரிடம் கேளுங்கள்: உலகின் முதல் பாட்டாளியப் புரட்சி எது? என்று. பெரும்பாலும் உருசியாவின் 1917 நவம்பர் புரட்சி என்றுதான் சொல்வார். ஆனால் 1871 பாரிஸ் கொம்யூன் என்பதுதான் சரியான விடை. அது என்ன பாரிஸ் கொம்யூன்?
முதலிய வல்லரசுகளான பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் நடந்த போரில் பிரான்ஸ் தோற்றது. 1852 முதல் 1870 வரை ஆட்சி புரிந்த மூன்றாம் நெப்போலியனின் இரண்டாம் பேரரசு வீழ்ந்தது. ஜெர்மனியுடன் அமைதி காண்பதற்காக 1871 ஃபிப்ரவரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு நாடாளுமன்றமாகிய தேசியப் பேரவையில் முடியாட்சியர்கள் பெரும்பான்மை பெற்றிருந்தனர்.
ஆனால் பாரிஸ் நகரப் பாட்டாளிகளும் பொதுமக்களும் குடியாட்சியத்தை விரும்பினார்கள். வெர்சேயில் கூடும் தேசியப் பேரவை முடியரசை மீட்டமைக்கும் என அவர்கள் அஞ்சினார்கள். போருக்காகப் பெரும்பாலும் தொழிலாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட தேசியக் காவல்படையின் படைக்கலன்களைப் பறிக்க இடைக்கால தேசிய அரசாங்கத்தின் செயல்தலைவர் அதோல்ஃப் தியர்ஸ் ஆணையிட்டார்.
இதற்குப் பணிய மறுத்துக் காவல்படையில் இருந்த தொழிலாளர்கள் 1871 மார்ச்சு 18ஆம் நாள் கலகம் செய்து பாரிஸ் நகர அரசாங்கத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். இது பாரிஸ் நகரத் தொழிலாளர்கள் “விண்ணைச் சாடிய” நிகழ்வு என்றார் மார்க்ஸ். அதிலிருந்து 72 நாள் இந்தப் புரட்சி நீடித்தது.
மார்ச்சு 26ஆம் நாள் காவல் படையின் மையக் குழு பாரிஸ் நகராட்சிக்குத் தேர்தல் நடத்தியது. தேர்தலில் வென்ற புரட்சியாளர்கள் பாரிஸ் கொம்யூன் அரசாங்கம் அமைத்தார்கள். இதுவே உலக வரலாற்றில் முதல் பாட்டாளி அரசு. இந்த அரசில் பலதரப்பட்ட குமுகியர்கள் (சோசலிஸ்டுகள்) இடம் பெற்றார்கள். இறுதி நோக்கில் இதுவே வரலாற்றில் பாட்டாளிய வல்லாட்சியத்தின் (Proletarian Dictatorship) முதல் வடிவம்.
1793 பிரெஞ்சுப் புரட்சி மரபில் வந்த ஜக்கோபின்கள் — புரட்சியை பாரிஸ் கொம்யூன் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நம்பியவர்கள் – இருந்தார்கள்; நாடெங்கும் கொம்யூன்களின் கூட்டாட்சி அமைக்க ஆதரவளித்த குமுகியர்களான புருதானியர்கள் இருந்தார்கள்; ஆய்த நடவடிக்கை கோரிய குமுகியர்களான பிளாங்கியர்கள் இருந்தார்கள். உள் வேறுபாடுகள் இருந்த போதிலும் கொம்யூன் 1793 புரட்சி போலவே சில முற்போக்கான நடவடிக்கைகள் எடுத்தது. மதத்துக்கு அரசு ஆதரவு நிறுத்தப்பட்டது. பாதிரியார்கள் சொந்த வாழ்க்கைக்கு அனுப்பப்பட்டனர். புரட்சிய வழிக் காலங்காட்டி முறை ஏற்கப்பட்டது. 10 மணி வேலை-நாள் அறிவிக்கப்பட்டது. வெதுப்பகத் தொழிலாளர்கள் இரவில் வேலை செய்வது நிறுத்தப்பட்டது. இராணுவமும் காவல்துறையும் கலைக்கப்பட்டன. ஆயுதம் ஏந்த வல்ல அனைத்துக் குடிமக்களும் தேசியக் காவல் படையில் சேர்க்கப்பட்டனர்.
வெர்சேயிலிருந்து இயங்கி வந்த பிரெஞ்சு முதலிய அரசு கொம்யூன் புரட்சியை அடக்கத் தன் படைகளை ஏவிற்று. லீயன், சான் எத்தியன், மார்சே, டூலூஸ் ஆகிய நகரங்களின் கொம்யூன்கள் விரைந்து நசுக்கப்பட்டன. பாரிஸ் கொம்யூன் மட்டும் தொடர்ந்து தாக்குப் பிடித்து நின்றது.
முடிவில் 1871 மே 21ஆம் நாள் அரசப்படையினர் பாரிசின் பாதுகாப்பற்ற ஒரு பகுதிக்குள் நுழைந்து விட்டனர். அடுத்து வந்த ஒரு கிழமையும் ”குருதிக் கிழமை” ஆயிற்று. சற்றொப்ப 20,000 புரட்சி வீரர்கள் கொலையுண்டார்கள். அரசுப் படையில் 750 பேர் உயிரிழந்தனர். கொம்யூனை அரத்தக் களரியில் அமிழ்த்திய பின் அரசு கொடிய அடக்குமுறையை ஏவிற்று. சற்றொப்ப 38,000 பேர் தளைப்படுத்தப்பட்டனர். 7,000க்கு மேற்பட்டோர் நாடுகடத்தப்பட்டனர்.
1871 மார்ச்சு திங்கள் பாரிசில் நடந்த நிகழ்ச்சிகளின் விளைவாக பிரெஞ்சு அரசாங்கம் பாரிஸ் நகராட்சியைப் பாரிஸ் தொழிலாளர்களிடம் இழந்தது. செங்கொடிப் பதாகையில் தொழிலாளர் விடுதலையைப் பொறித்துக் கொண்டு ஆய்தமேந்திய தொழிலாளர்கள் சில திங்கள் காலம் பாரிஸ் பெருநகரில் அதிகாரம் செலுத்தினார்கள். வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாத புரட்சி இது. இந்தப் புரட்சி நடந்து கொண்டிருந்த போது மார்க்சும் எங்கெல்சும் ’கூப்பிடு தொலைவில்’ இருந்தார்கள். ஆம், ஆங்கிலேய நாட்டில் வாழ்ந்து ஆய்வுப் பணிகள் செய்து கொண்டும், முதல் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பை (முதல் அகிலம்) வழிநடத்திக் கொண்டும் இருந்தார்கள். ஜெர்மன் (பிரஷ்ய) – பிரெஞ்சுப் போரையும் அந்தப் போரில் பிரான்சு அடைந்த தோல்வியையும் உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் பிரெஞ்சுத் தொழிலாளர்கள் கலகம் செய்ய வேண்டும் என்ற கருத்தை அவர்கள் ஆதரிக்கவில்லை. புதிய பிரெஞ்சுக் குடியரசில் தொழிலாளர் வகுப்பு குடியாட்சிய உரிமைகளைப் பயன்படுத்தி அணிதிரள வேண்டும் என்று மார்க்ஸ் எழுதினார்.
ஆனால் 1871 மார்ச்சு 18ஆம் நாள் பிரெஞ்சு அரசு தொழிலாளர்களின் படைக்கலன்களைப் பறிக்க முற்பட்ட போது பாரிஸ் சிவந்தெழ ஆதரவுக் குரல் கொடுத்தார் கார்ல் மார்க்ஸ். “கொம்யூன் நீண்ட காலம் நிலைக்காது என்று தெரிந்திருந்தும் ”வெல்க கொம்யூன்!” என்று முழங்கினார். ”வகுப்புகளின் (வர்க்கங்களின்) பொருளியல் அடித்தளங்களை வேருடன் சாய்க்கும் கடப்பாரை கொம்யூன்” என்று போற்றினார். கொம்யூனை ”கம்யூனிசம்” என்று குற்றஞ்சாட்டியவர்களைப் பார்த்துச் சொன்னார்:
”ஆமாம், பெரியோர்களே! பலரது உழைப்பைச் சிலரது செல்வமாக்கும் வகுப்புச் சொத்துடைமையை ஒழிப்பதே கொம்யூனின் நோக்கம். உடைமை பறித்தவர்களின் உடைமை பறிப்பதே அதன் குறி.”
குமுகியத்துக்கான வகுப்புப் போராட்டத்தின் ஒரு கட்டம் என்பது பாரிஸ் கொம்யூன் பற்றிய மார்க்சின் கணிப்பாக அமைந்தது. பாரிஸ் கொம்யூனை மார்க்ஸ் வழிநடத்தவில்லை, மார்க்சியர்களும் வழிநடத்தவில்லை. மார்க்சால் கடுமையாகக் குற்றாய்வு செய்யப்பட்ட பிளாங்கியர் முதலானோர்தாம் பாரிஸ் கொம்யூனை வழிநடத்தியவர்கள். ஆனாலும் மார்க்சின் புறஞ்சார் பார்வையில் அது பாட்டாளியப் புரட்சியாகவே தெரிந்தது. “குட்டி முதலாளித்துவக் கலகமாக” அது தூற்றப்பட வில்லை.
ஏன்? ஏன் என்றால் தலைமை யார் கையில் இருந்த போதும் போர்க்குணமிக்க பாட்டாளிகள் அந்தப் புரட்சியின் திசைவழியைத் தீர்மானித்தார்கள். புறநோக்கில் அது அவர்களின் நலனுக்கே உழைத்தது. ஆயிரக் கணக்கில் அவர்களே புரட்சிப் பயிருக்குச் செந்நீர் பாய்ச்சினார்கள். இரண்டாவதாக முன்கூட்டியே வரித்துக் கொண்ட வறட்டு வாய்பாடுகளை நம்பிக் கொண்டிராமல் பாரிஸ் கொம்யூன் எழுவதற்கான சிறப்பு உருநிலைக் காரணிகளை (peculiar concrete factors) மார்க்ஸ் உரியவாறு கணக்கில் கொண்டார்.
அனைத்துக்கும் மேலாக மார்க்சும் எங்கெல்சும் பாரிஸ் கொம்யூன் பட்டறிவிலிருந்து பாட்டாளியக் கருத்தியலுக்குப் புதிய பாடம் கற்றார்கள்: “தொழிலாளர் வகுப்பு ஆயத்த நிலையில் இருக்கும் அரசு எந்திரத்தை அப்படியே கையில் எடுத்துக் கொண்டு தன் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துக் கொள்ள முடியாது.”
அரசும் புரட்சியும் நூலில் மா இலெனின் இந்தப் படிப்பினையை மேலும் உறுதி செய்து “அரசைத் தகர்த்தல்” (Smash the State) என்று முழக்கம் தந்தார். ஆட்சியைப் பிடித்தல் அல்ல, அரசைத் தகர்த்தலே புரட்சி!
மாவோ சொன்னார்:
“மார்க்ஸ் முதலில் பாரிஸ் கொம்யூனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்… பாரிஸ் கொம்யூன் உயர்ந்தெழுந்த போது, அது தோற்கும் என்று கணித்த போதிலும் ஆதரித்தார். அதுதான் முதல் பாட்டாளிய வல்லாட்சியம் என்பதை உணர்ந்த போது, மூன்று மாதமே நீடித்தாலும் நல்லதுதான் என்று நினைத்தார். பொருளியல் கண்ணோட்டத்தில் மதிப்பாய்வு செய்வோமானால் அதனால் விளைந்த பயன் எதுவுமில்லை.”
போதும் அன்பர்களே, பாரிஸ் கொம்யூனிலிருந்து மார்க்சும் எங்கெல்சும் இலெனினும் மாவோவும் பன்னாட்டுப் புரட்சியாளர்களும் கற்றவை பல. அவர்களெல்லாம் என்ன கற்றார்கள்? எப்படிக் கற்றார்கள்? என்பதை நாமும் கொஞ்சம் கற்கத் துணிவோமா? பணிவோமா? விண்ணைச் சாடிய வீரர்கள் முன் கைகட்டி நின்று கற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா?
பாரிஸ் கொம்யூன் எனும் உலகின் முதல் பாட்டாளியப் புரட்சிக்கும் முதல் பாட்டாளிய அரசுக்கும் மார்க்ஸ், மார்க்சியம், அல்லது மார்க்சியர் தலைமை ஏற்கவில்லை என்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? அதுவும் மார்க்சியத்தின் துணை கொண்டே எப்படிப் புரிந்து கொள்வது? எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.
தொடர்வேன்….
தோழர் தியாகு ,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்