மாட்டிக் கொண்டாரா பெரியார்? (10) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இதுகைத் தொடர்!
Opinion

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (10) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இதுகைத் தொடர்!

Feb 12, 2025

நாதக சீமான் தந்தை பெரியார் பற்றி முழுக்க அவதூறாகப் பேசி 17 நாளாயிற்று. தன் குற்றச்சாட்டுக்கு அவர் சான்றேதும் தரவில்லை. “உங்களிடம்தான் அது இருக்கிறது” என்று கவுண்ட மணி – செந்தில் வாழைப்பழக் கதையைப் போல் கதை விட்டுச் சிரிப்பு மூட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் தான் செய்த அவதூறுக்காக அவர் வருத்தம் தெரிவிக்கவும் இல்லை.

சீமான் பேசியதற்கு நான் சான்று தருகிறேன் என்று பாசக அண்ணாமலை வீறாப்பாக அறிவித்துக் குறைந்தது 15 நாளாயிற்று. அவரும் எவ்விதச் சான்றும் தரவில்லை. அவரும் தன்னால் சான்று தர முடிவில்லை என்று நேர்மையாக ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவிக்க அணியமில்லை.

சீமான் கூறியது போல் பெரியார் பேசியதாக நான் படித்த வரை தெரியவில்லை என்று பெ.மணியரசன் செவ்வியளித்து 14 நாளாயிற்று. ஆனால் இந்த 14 நாளும் அவர் பெரியாரைத் தேடித் துழாவி ஒரு சான்று கொண்டுவந்து நிறுத்த வில்லை. தொடர்ந்து அவர் தேடட்டும். அவர் வேறொன்று செய்யலாம்: சீமானிடமே “நீங்கள் பெரியார் பேசியதாகச் சொன்னீர்களே, அப்படி எங்கே படித்தீர்கள்?” என்று கேட்டு சான்று வாங்கிக் கொடுத்திருக்கலாம். ஒன்றுமே முடியாதென்றால், ”சீமான் ஒரு flowஇல் அப்படிச் சொல்லிவிட்டார், பெரிதுபடுத்தாமல் விட்டுத் தள்ளுங்கள்” என்று சமாதானம் பேசியிருக்கலாம். நாமும் சரி என்று விட்டிருக்கலாம்.

இப்படிச் செய்யாமல் சீமானோடு சேர்ந்து பெரியார்-வெறுப்பைக் கொட்டியதோடு வேலிக்கு ஓணான் சாட்சியாகி நாட்டுடைமைக் கோரிக்கைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்க வேண்டாம். போகட்டும், தமிழ்த் தேசியத்துக்குக் காவலனாய் இருப்பதை விடவும் சீமானுக்குக் கேடயமாய் இருப்பதே தெய்வத் தமிழ்க் கடமை என்ற நிலைக்குப் போய் விட்டார் பெம.

எப்படி அவர் சீமானைக் காப்பாற்றும் முயற்சியில் அவரோடு தானும் மீளா முடிச்சுகளில் சிக்கிக் கொள்கிறார் (tying himself in knots) என்பதையும் அவரது சொற்களைக் கொண்டே மெய்ப்பிக்க விரும்புகிறேன்.

இதற்கிடையில், எப்படி இருந்தவர் இப்படி இறங்கி விட்டார் என்று வருந்தாமலிருக்க முடியவில்லை. எப்படி இருந்தவர் என்பதற்குச் சான்றாக அவரே எழுதிய ஒரு கட்டுரையை ஈண்டு மீள்பதிவு செய்கிறேன். தமிழ்த் தேசிய நோக்கில் தந்தை பெரியார் பற்றித் தோழர் பெ. மணியரசன் எழுதிய மிகச் சிறந்த கட்டுரை இது.
+++++++++++++++++++++++++++++++++++++++
பெரியாருக்குப் பிறகுள்ள பெரியாரியல்
-பெ. மணியரசன்

// இந்துத்துவ ஆதிக்க சக்திகள் அதிர்ச்சியடையும் அளவிற்குத் தந்தை பெரியார் அவர் வாழ்ந்த காலத்தை விட இப்போது விரிவான சமூகத் தளத்திற்குள் செல்வாக்குப் பெற்று வருகிறார். அவரின் தேவை கூடுதலாக உணரப்படுகிறது. பெரியாரியலின் இந்த விரிவாக்கம், அவரின் நேரடி வாரிசுகளாகக் கர்வத்தோடு கருதிக் கொண்டிருக்கும் அரசியல் பீடாதிபதிகளுக்குக் கூட அதிர்ச்சியைத் தந்திருக்கிறது.

// இந்துத்துவ அரசியலை எதிர்ப்போர், தலித் விடுதலைக்கு நிற்போர், பெண் விடுதலைக்கு இயங்குவோர், தமிழ்த் தேசியம் பரப்புவோர், பார்ப்பனியம் எதிர்ப்போர், பொதுவுடைமை கோருவோர், கடவுளை மறுப்போர், பின் நவீனத்துவம் பேசுவோர் எனச் சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் பெரியார் வடித்துத் தந்த கருவிகளைக் கையில் ஏந்தி நிற்கின்றனர்.

// ஒரு சித்தாந்தம் இவ்வாறு விரிவாக்கம் பெறும் போது அதன் எதிரிகள் தங்களின் எதிர்ப்பையும் விரிவுபடுத்துவர். தொழிலாளிகள் சிலரைக் கொண்டே, மார்க்சியத்தை எதிர்க்க முதலாளிகள் தந்திரம் செய்வது போல, தலித்துகள் சிலரைக் கொண்டே பெரியாரை எதிர்க்கப் பார்ப்பனியம் வியூகம் வகுக்கிறது.

// சமூகத்தைச் சுரண்டிப் பிழைக்கும் ஆதிக்க சக்திகள், பெரியாரின் புதுமலர்ச்சியைக் கண்டு பீதியடைந்துள்ளன. இந்த உண்மையைத்தான் அவர்களின் இந்த வியூகமும், கையாட்களின் அலறலும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

// “பெரியார் – ஒரு தலித் விரோதி”, “பெரியார் – ஒரு முஸ்லிம் விரோதி” என்று எழுதி ஆத்திரமூட்டும் பார்ப்பனிய முகவர்களுக்குப் பதில் சொல்வது தேவையானது. ஆனால் அது மட்டும் போதாது. தமிழ்ச் சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளைத் தீர்க்க பெரியாரியலை இன்று எவ்வாறு கையாளுவது என்பதில், புதிய முன்மாதிரிகளை உருவாக்க வேண்டும். பெரியாரியல் குறித்துப் புதிய வரையறைகள் தேவைப்படுகின்றன.

// பெரியாரியல் புரட்சிகரக் கோட்பாடா? சீர்திருத்தக் கோட்பாடா? இதற்கான விடை, இரண்டும் கலந்தது என்பதுதான். புரட்சிகரத் தத்துவம் அல்லது சீர்திருத்தவாதம் என்று ஒரு சட்டகத்திற்குள் பெரியாரியலை அடக்கி விட முடியாது. அவர் காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய சமூகச் சூழலுக்கும் அதை அவர் எதிர் கொண்ட உத்திக்கும் ஏற்ப அவரது சிந்தனைகள் வடிவம் பெற்றன.

// சமூகவியலில், புரட்சி என்பது ஒடுக்கப்பட்ட மக்கள் போராடி, தங்கள் எதிரிகள் கையிலுள்ள அரசைக் கைப்பற்றும் நிகழ்வைக் குறிக்கும். (தேர்தலில் வெற்றி பெற்று, தற்காலிகமாக அமைச்சரவை அமைப்பதைக் குறிக்காது). சீர்திருத்தம் என்பது, ஒடுக்கப்பட்ட மக்கள் போராடி, தங்களுக்கான சில உரிமைகளையும் முன்னேற்றச் செயல்பாடுகளையும் வழங்குமாறு எதிரியின் அரசை நிர்பந்திப்பதைக் குறிக்கும்.

// தந்தை பெரியார் சுதந்திரத் தமிழ்நாடு வேண்டும் என்று கடைசி வரை வலியுறுத்தினார். அதற்காகச் சில போராட்டங்களையும் நடத்தினார். இந்தியாவிற்கு விடுதலை வழங்குவது பற்றிக் கருத்துக் கேட்ட வெள்ளையர்களின் குழுவிடமும் தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்தார். 1973 செப்டம்பர் 17-ல் வெளிவந்த பெரியார் மலருக்காக அவர் எழுதிய கடைசிக் கட்டுரையிலும், சுதந்திரத் தமிழ்நாடுதான் ஒரே தீர்வு என்று எழுதினார். 1938இல் இந்தி எதிர்ப்புப் பேரணியில் கொடுக்கப்பட்ட “தமிழ்நாடு தமிழருக்கே” என்றே முழக்கத்தைக் கடைசி வரை விடுதலை ஏட்டின் முகப்பில் முத்திரை முழக்கமாகப் பொறித்து வந்தார்.

// பெரியாரின் சுதந்திரத் தமிழ்நாடு கோரிக்கை “புரட்சி” வகையைச் சேர்ந்தது. அவர் கடைசி வரை தேர்தலில் போட்டியிட மறுத்தது, தேர்தல் பற்றி அவர் செய்த விமர்சனம் ஆகியவை புரட்சி வகையைச் சார்ந்தவை.

// பார்ப்பனிய ஆதிக்கத்தை முடிந்த வரை ஒழிக்க அல்லது கட்டுப்படுத்த, காமராசரின் காங்கிரசை ஆதரித்தது, அக்கட்சிக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்தது, பின்னர் தி.மு.க.வை ஆதரித்தது, அக்கட்சிக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்தது போன்றவை “சீர்திருத்த” வகையைச் சேர்ந்தவை.

// தனித் தமிழ்நாடு கோரினார் என்றாலும் அதையே தமது முதல் அரசியல் இலக்காக அவர் வைத்துக் கொள்ளவில்லை. தனித்தமிழ்நாட்டை அடைவதற்கான ஓர் அமைப்பாக, திராவிடர் கழகத்தை வடிவமைக்கவுமில்லை.

// அடிமைப்பட்ட நாட்டின் விடுதலை கோருபவர், அதைத் தான் முதல் இலக்காக வைப்பார். கடவுள் மறுப்பை முதல் இலக்காக வைக்க மாட்டார். விடுதலைக்கான புரட்சியில் கடவுள் மறுப்புக் கொள்கையும் அடங்கும். அவ்வளவே. ஏனெனில் கடவுள் மறுப்பு, சமூக அறிவியல் உண்மை. கடவுள் மறுப்புக் கொள்கையைச் சமூகத்தில் பெரும்பான்மையோர் கடைப்பிடிக்க நீண்டகாலம் பிடிக்கும். ஒரு நாட்டின் விடுதலை என்பது அதனோடு ஒப்பிடும் போது குறுகிய காலத்தில் நிகழ்ந்துவிடும். நாத்திகரும் ஆத்திகரும் சேர்ந்து போராடித்தான் ஒவ்வொரு நாட்டு விடுதலைப் போரும் வெற்றியை ஈட்டியுள்ளது.

// அதேபோல் வர்ண-சாதி ஆதிக்க எதிர்ப்பிற்கான போராட்டத்திலும் நாத்திகர்களும் ஆத்திகர்களும் சேர்ந்தே ஈடுபடுவர். இதனைப் பெரியார் நன்கறிந்தார் என்பதால், ஞானியார் சுவாமிகள், குன்றக்குடி அடிகளார் போன்ற ஆன்மீகத் தலைவர்களுடன் அவர் நல்லுறவும் கூட்டு முயற்சியும் கொண்டிருந்தார்.

// பெரியார் சிறைக்கஞ்சாதவர்; தியாகம் செய்யத் தயங்காதவர். ஆனால் தாம் நடத்தும் போராட்டங்களில் வன்முறை கூடாதென்பார். சட்டத்தை மீறுவார். அதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முன் வந்து உட்படுவார். இப்படியான போராட்ட முறை கூடவே கூடாது என்பதல்ல. இந்த எல்லையை வகுத்துக் கொண்ட போராட்டம் புரட்சிக்கு இட்டுச் செல்லாது.

// பெரியாரின் கொள்கை, போராட்ட வழி போன்றவற்றில் புரட்சிகரத் தன்மையும் இருக்கும். சீர்திருத்தத் தன்மையும் இருக்கும். தி.மு.க. போன்ற ஒரு தேர்தல் கட்சியால், பெரியாரைப் பின்பற்ற முடியாது. அவரது தனித் தமிழ்நாடு கோரிக்கையை ஏற்றால் அக்கட்சி தேர்தலில் நிற்க முடியாது. அவரது கடவுள் மறுப்பை ஏற்றால், பெரும்பாலோராய் உள்ள ஆத்திகர்களிடம் வாக்கு வாங்க முடியாது. அதேபோல், தூயநெஞ்சோடு அவரது சாதி மறுப்பை ஏற்றால், சாதிப்பற்றாளர்களிடம் வாக்கு வாங்க முடியாது. பெரியாரை முழுமையாக ஏற்றால் தேர்தலில் நிற்கவே கூடாது.

// எனவே, தி.க.விலிருந்து பிரிந்து தேர்தல் கட்சியாக மாறிப் போன தி.மு.க. “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற திருமூலர் வாக்கை எடுத்துச் சொல்லி ஒரு சமரச வழி கண்டது. “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்று கூறித் தேர்தல் அரசியலை உன்னதப்படுத்தியது.

// பெரியாருக்குப் பிந்தைய திராவிடர் கழகத் தலைமை பெரியாரியலின் புரட்சிகரப் பகுதியைக் கனவில் கூட நினைத்துப் பார்ப்பதில்லை. விடுதலை ஏட்டின் முகப்பில் பொறிக்கப்பட்ட “தமிழ்நாடு தமிழர்க்கே” என்ற முழக்கத்தை நீக்கியது. மறந்தும் தமிழ்நாட்டு விடுதலையைப் பற்றிப் பேசுவதில்லை. தேர்தலில் போட்டியிடாத ஒன்றைத் தவிர, மற்றபடி ஒரு தேர்தல் கட்சி போல் தனது செயல்பாட்டை அது சுருக்கிக் கொண்டது.
// தி.மு.க., தி.க., தலைவர்களால் பெரியாரை விட்டு விடவும் முடியவில்லை; பின்பற்றவும் முடியவில்லை. கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு, இட ஒதுக்கீடு கோரிக்கை போன்றவற்றில், திராவிடர் கழகம் பெரியாரைப் பின்பற்றிச் செயல்படுகிறது. அந்த அளவிற்கு அது பயனுள்ள பணியே! மற்றபடி தனித் தமிழ்நாடு என்று அதன் உறுப்பினர் யாராவது சிந்தித்தால் கூட, தி.க. தலைமை அவரைக் கட்சியை விட்டு நீக்கி விடுகிறது. பெரியாரைப் போல் நீண்ட காலம் சிறையிலிருக்கவும், அரசின் அடக்குமுறையை எதிர்க்கொள்ளவும் இப்போதுள்ள தி.க. தலைமை அணியமாக இல்லை.

// பெரியாரோடு முழுமையாக உடன்பட முடியாத தி.மு.க., ஒரு பாதி உடன்படும் தி.க. ஆகிய இவ்விரண்டு கழகங்களும் தாம் பெரியாரின் “அசல் வாரிசுகள்” என்ற முத்திரையைத் தாங்கியுள்ளன. ஆனால் இக்கழகங்கள் பெரியாரின் அனைத்து எழுத்துக்களையும், பேச்சுகளையும் தொகுத்து நூல்வரிசை வெளியிட அஞ்சுகின்றன. பெரியாரை முழுமையாகப் புரிந்து கொண்டால், தம்தம் கட்சி அணியினர், தங்களிடம் கொள்கை பற்றி வினா எழுப்புவார்கள் என்று அஞ்சுகிறார்களோ என்னவோ!

// அண்ணல் அம்பேத்கரின் அத்தனை படைப்புகளும் தமிழ் உள்ளிட்டுப் பல மொழிகளில் மராத்திய அரசின் செலவில் வெளிவந்துள்ளன. 1967-லிருந்து ஆட்சி புரிவோர், பெரியார் படைப்புகள் அனைத்தையும் தமிழ் மொழியில் கூடக் கொண்டு வரவில்லை. தமிழ் அறிஞர்கள், தமிழ் இலக்கியவாதிகள் பலரின் படைப்புகளை அரசுடைமை ஆக்கிய தமிழக ஆட்சியாளர்கள் பெரியார் எழுத்துகளை ஏன் அரசுடைமையாக்கவில்லை? பெரிய வினாதான்.

// தோழர் ஆனைமுத்து அவர்கள் பெரியாரின் சிந்தனைகளை மூன்று தொகுதிகளாகத் தொகுக்கவில்லை என்றால் நம் தலைமுறைத் தமிழர்கள் பெரியாரை எங்கு தேடிக் கண்டறிவர்? தமிழக ஆட்சியாளர்கள் பெரியார் படைப்புகள் அனைத்தையும் தொகுத்து வெளியிடவில்லை என்றாலும் திராவிடர் கழகம் தன் பொறுப்பில் அதைச் செய்திருக்கலாம். அதனிடம் நிதிவசதிக்கு ஒன்றும் பஞ்சமில்லை. அதுவும் செய்யவில்லை.

// பெரியாரியலில் உள்ள தனித் தமிழ்நாடு கோரிக்கையையோ, வர்ண-சாதி ஒழிப்பையோ முழு நிறைவாக முன் வைப்பதற்கு ஒரு புரட்சிகர அமைப்பால் மட்டுமே இன்று முடியும். பார்ப்பனியத்தை ஒழிப்பதும் வர்ண-சாதி முறைகளை ஒழிப்பதும் தனித் தமிழ் நாட்டில்தான் இயலும் என்று பெரியார் முடிவுக்கு வந்தார். (1973 செப்டம்பர் – பெரியார் பிறந்தநாள் மலர்).

// உடனடிச் சீர்த்திருத்தத்திற்குத் தேவையான பல கூறுகளும் பெரியாரியலில் உள்ளன. தீண்டாமை ஒழிப்பு, சாதி வெறி ஒழிப்பு, பெண்ணுரிமை, மூடநம்பிக்கைகளை எதிர்த்து வினாத்தொடுக்கும் கலகப் பண்பாடு, பார்ப்பன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் இடஒதுக்கீடு ஆரியத்திற்கு எதிரான தமிழ் இன அடையாளங்கள் போன்ற பல அரங்குகளில் செயல் புரிவோர்க்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக, தலைவராகப் பெரியார் உள்ளார்.

// அதனால்தான், இன்று தி.மு.க., தி.க. அமைப்புகளுக்கு வெளியே பல அரங்குகளில் பெரியார் “விசுவரூப”மெடுத்துள்ளார். தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா போன்றவர்களும் புதிய, புதிய இளைஞர்களும் பெரியார் குறித்த ஆய்வுகளை விரிவாகச் செய்து நூல்கள் எழுதிக் குவிக்கின்றனர். நிலவுகின்ற சமூக அமைப்பை மாற்ற விரும்பும் இளைஞர்களின் இதயம் இயல்பாகவே பெரியாரை நேசிக்கிறது; உதடுகள் அவர் பெயரை உச்சரிக்கின்றன. வடநாட்டுத் தீவிரவாத இந்துத்துவா அரசியல் தமிழ்நாட்டில் காலூன்ற முயலுவதைப் பார்க்கும் போது எல்லாத் தரப்பு இளைஞர்களின் ஆத்திரமும் இரட்டிப்பாகிறது. பெரியார் பெயரை இன்னும் அழுத்தமாக உச்சரிக்கிறார்கள்.

// தில்லிப் பேரரசைத் தன் கையில் வைத்துள்ள பார்ப்பனியச் சக்திகளுக்குப் பெரியாரின் புதுமலர்ச்சி ஆத்திர மூட்டுகிறது. அவர்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான இயக்கங்களிலிருந்தும் தலித் இயக்கங்களிலிருந்தும் ஆள் பிடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராகவும் பெரியாரியல் சித்தாந்தத்திற்கெதிராகவும் அவர்கள் குறிப்பாகத் தலித்துகளைத் திரட்டிக் கொள்ள விரும்புகிறார்கள்.

// பார்ப்பனர்களால் மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்டோராலும் ஒடுக்கப்படும் உழைக்கும் மக்கள் தலித்துகள். சாதி ஒடுக்கு முறையில், மிகக் கீழ் அடுக்கில் கிடந்து துன்புறும் தலித் மக்களை எளிதாகத் தங்கள் நயவஞ்சக வலையில் சிக்க வைக்க முடியும் என்று பார்ப்பனிய சக்திகள் கணக்குப் போடுகின்றன.

// ஆனால் தலித் மக்கள் எழுச்சி பெற்று வரும் இக்காலத்தில், அம்மக்கள் பிற்படுத்தப்பட்டோரின் சாதி ஆதிக்கத்தை மட்டுமன்றி பார்ப்பனியச் சாதி ஆதிக்கத்தையும் சேர்த்தே எதிர்க்கின்றனர். இந்தப் பின்னணியில், ஒரு தெளிவுக்கு வர முடியாத தலித் பிரமுகர்கள் சிலரையும், தீர்மானித்துக் கொண்ட கூலி எழுத்தாளர்கள் சிலரையும் அவர்கள் வளைத்துப் போட்டுக் கொண்டு பெரியாருக்கு எதிராகப் பேச விடுகின்றனர்.

// பெரியாரை விமர்சிக்கக் கூடாது என்பதல்ல. பெரியாரை ஆக்கப்பூர்வமாக விமர்சிக்கலாம். பெரியாரின் சிந்தனைகளை இன்றையத் தேவைக்கேற்ப வளர்த்தெடுக்கும் நோக்கில் விமர்சிக்கலாம். ஆனால் இவர்கள் பெரியாரா, அம்பேத்கரா என்று ஒருவருக்கெதிராக ஒருவரை நிறுத்துகின்றனர்.

// பெரியாருக்கெதிராக அம்பேத்கர் என்று நிறுத்தும் விவாதம், பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் ஒன்று சேர்ந்து விடாமல் மோதிக் கொள்ள வேண்டும் என்ற நரித்தந்திரத்தின் வெளிப்பாடுதான். இதில் பார்ப்பனியச் சதி மட்டுமல்ல, இந்திய தேசிய வெறிச் சதியும் உள்ளது.

// அம்பேத்கர் சிந்தனைகளும் முழுக்க முழுக்கப் புரட்சிகரமானவை என்று சொல்ல முடியாது. காரணம், அவர் புரட்சிகர அரசு அமைப்பது பற்றி எதுவும் கூறவில்லை. “இந்திய தேசியம்” என்பது பார்ப்பனியத் தத்துவத்தின் அடித்தளத்தின் மேல்தான் நிற்கிறது. மொழிவாரி மாநிலப் பிரிவினைகளைக் கூட எதிர்த்த இந்தியத் தேசியராகத் தாம் அம்பேத்கர் இருந்தார். பார்ப்பனியத்திற்குச் சார்பாக எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவுக் குழுத் தலைவராக இருந்தார். (பின்னர் இது குறித்து அம்பேத்கர் தன்-தினறாய்வு செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது).

// இவற்றை வைத்து, அம்பேத்கரின் பார்ப்பனிய எதிர்ப்பைக் கோச்சைப்படுத்தலாமா? கூடாது. பார்ப்பனியத்தை, சாதிப் பிரிவுகளைச் சல்லடை போட்டுச் சலித்து ஆராய்ந்தவர் அம்பேத்கர். இந்துத்துவ அரசியலை வீழ்த்த, அவர் வடித்துக் கொடுத்த ஆயுதங்கள் கூர்மையானவை. கருத்துப் போராட்டத்தில் மட்டும் அல்ல, களப் போராட்டங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு – தலித் மக்களுக்கு உண்மையாகத் தலைமை தாங்கியவர். முதலில் எடுத்துக்காட்டிய சில குறைகளுக்காக அம்பேத்கரைப் புறக்கணிப்பது நம் கையிலிருக்கும் ஆயுதத்தை நாமே தூக்கி எறிந்து விடுவது போன்ற அசட்டுத்தனம். அதே போல், அவருடைய மகத்தான பங்களிப்புகளைக் கருத்தில் கொண்டு அவரிடம் நேர்ந்த பிழைகளை நியாயப்படுத்துவது, நமது கண்களை நாமே மூடிக் கொண்டு பயணம் போவது போன்றது. அம்பேத்கர் சிந்தனைகளைக் கையாள்வது குறித்துக் கூறும் அதே திறனாய்வு முறையைப் பெரியார் சிந்தனைகள்பாலும் கடைப்பிடிக்க வேண்டும்.

// மார்க்சியம் உள்ளிட்ட எந்தத் தத்துவத்தையும் திறனாய்வுக்கண் கொண்டுதான் அணுக வேண்டுமே தவிர, வேதத்திற்குக் காட்டும் விசுவாசம் போல் அணுகக் கூடாது.

// ஏற்கெனவே கட்டி எழுப்பப்பட்டிருந்த ஒரு சமூக இயக்கத்திற்குத் தலைமை தாங்க வந்தவர்கள் அல்லர் பெரியாரும் அம்பேத்கரும். சித்தாந்தத்தையும் இவர்களே உருவாக்கி அதற்கான அமைப்பையும் இவர்களே தோற்றுவித்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் – நாதியற்ற மக்களின் விடுதலையைத் தங்கள் இலட்சியமாக வரித்துக் கொண்ட இத்தலைவர்கள், தங்கள் வாழ்நாளுக்குள் இந்த மக்களுக்கு முடிந்த வரை சில உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்று முனைகிறார்கள்.

// பெரியாரும் அம்பேத்கரும் வெளிப்படையாக எதையும் பேசியவர்கள். “பறையர்கள்” மாநாடு நடத்திப் பாராட்டிய போது, “நீங்கள் உங்களில் இருந்து தலைவரை உருவாக்கிக் கொள்ளுங்கள்” என்றார். அம்பேத்கரும், “நான், ஷெட்யூல்டு மக்களுக்கான பிரதிநிதியே தவிர பிற்படுத்தப்பட்டோருக்கான பிரதிநிதி அல்ல” என்றார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அவர்களில் இருந்து தலைவர் உருவாக வேண்டும் என்றார்.

// இப்படி வெளிப்படையாகப் பேசிய தலைவர்கள் இருவரும் நேசமாக இருந்தார்கள். இரண்டுபேருமே வர்ண – சாதி ஒடுக்குமுறையை எதிர்த்த காரணத்தால்தான் அவர்களுக்கு இடையே நேசம் மலர்ந்தது.

// பெரியார், நடைமுறையில் தலித் மீதான ஒடுக்கு முறையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார். தாழ்த்தப்பட்ட மக்களைச் சுயமரியாதைக்காராகள் அரவணைத்தார்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே பிறந்த சு.ம.க்கள் ஆதிதிராவிடர் தெருக்களுக்குச் சென்று அவர்கள் இல்லங்களில் உணவருந்தினர். தங்கள் வீட்டு நிகழ்வுகளுக்கு அவர்களை அழைத்தனர். தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாருக்கும் இடையே கலப்புத் திருமணங்கள் செய்து வைத்தனர்.

// மகாத்மா காந்தி தமிழகம் வந்திருந்த போது அவரைப் பெரியார் சந்தித்தார். பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் வாதம் இருவருக்குமிடையே நடந்தது. “ராஜாஜி போன்ற நேர்மையான பார்ப்பனரை நீங்கள் நம்பக் கூடாதா” என்று காந்தி கேட்டார். அதற்குப் பெரியார் “அவர் நேர்மையானவர்தான், ஆனால் என் வகுப்பாருக்கான முடிவுகள் எடுக்கும் உரிமையை அவரிடம் எப்படித் தருவது?” என்றார். இதே பார்வைப்படி, “தாழ்த்தப்பட்டவர்கள் தங்களுக்கான தலைவரை உருவாக்கிக் கொள்ள வேண்டும்” என்றும் பெரியார் கூறினார்.

// இதில் எந்த வஞ்சகமும் பாரபட்சமும் பெரியாரிடம் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களையும் தெருவில் இறக்கிவிட்டு, சாதி ஆதிக்கத்திற்கு, குறிப்பாகப் பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு, எதிராகப் போராட வைத்தவர் பெரியார். பார்ப்பன ஆதிக்கத்தை முறியடிக்கும் போராட்டம், இயல்பாகவே பார்ப்பனரல்லாதோர் சாதி ஆதிக்கத்தையும் முறியடிப்பதில் போய் முடியும் என்று பெரியார் கருதினார். இதற்கு ஓர் எடுத்துக்காட்டையும் கூறினார். திரைப்படக் கொட்டகையில் டிக்கெட் எடுக்க நிற்கும் வரிசையில் முதலில் நிற்கும் ஒருவன் பின்னோக்கி ஒரு தள்ளு தள்ளினால் அவனுக்குப் பின் நிற்கும் ஒவ்வொருவனும் தனக்குப் பின்னால் உள்ளவனை ஒரு தள்ளு தள்ளுவது போல் என்றார். சாதி ஆதிக்கத்தில் முதல் இடத்தில் நிற்கும் பார்ப்பனர் ஆதிக்கத்தை முறியடித்தால் மற்றவரின் ஆதிக்கமும் முறியடிக்கப்படும் என்றார்.

// பெரியாரின் இப்பார்வையில் மாற்றம் வர வேண்டியுள்ளது. அதே போல், தலித்துகளுக்குத் தலைவர் தலித் வகுப்பிலிருந்துதான் உருவாக வேண்டும், பிற்படுத்தப்பட்டோர்க்கு அதே வகுப்பிலிருந்து தான் தலைவர்கள் உருவாக வேண்டும் என்ற பெரியார், அம்பேத்கர் பார்வைகளில் மாற்றம் தேவை. இந்தத் திறனாய்வு வேறு; இதற்காக அவர்களைக் கொச்சைப்படுத்துவது வேறு.

// பெரியார் தேர்தலில் போட்டியிடாமல், தேர்தல் கட்சிகளை ஆரித்துச் சில உரிமைகளைப் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பெற்றுத் தந்தார். இடஒதுக்கீட்டுப் பாதுகாப்பு, இலவசக் கல்வி, அரசு அலுவல் உயர் பதவிகளில் பார்ப்பனர் அல்லாதோர் வருதல், சுயமரியாதைத் திருமணச் சட்டம் எனப் பல அவ்வாறு இருக்கின்றன.

// அம்பேத்கர், அரசமைப்பு அவையின் வரைவுக்குழுவில் இருந்ததால்தான், அரசமைப்புச் சட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தில், அவ்வாறான இடஒதுக்கீட்டுப் பாதுகாப்பு பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இல்லை. இதை அவ்வப்போது வரும் நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலம் அறியலாம். மண்டல் குழு பரிந்துரை வழக்கு இன்னும் உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதன் மூலமும் அறியலாம்.

// ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ், ஜனநாயக இயக்கங்கள் தொடக்க நிலையில் இருந்த காலத்தில் வர்ண – சாதி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய பெரியாரும் அம்பேத்கரும் பின்பற்றிய அதே அணுகுமுறையை இன்றும் பின்பற்ற வேண்டியதில்லை.

// இன்று வர்ண – சாதி ஆதிக்கத்தை ஒழிக்க, பிற்படுத்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் ஒன்று சேரவேண்டும். அதற்கு முதல் தேவையாக, பிற்படுத்தப்பட்ட சாதியினர், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தும் சாதி ஒடுக்கு முறையைக் கைவிட்டு, அவர்களைச் சகோதரர்களாக அரவணைக்க வேண்டும்.

// பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஒடுக்கு முறை செய்யும் இடங்களில், தலித் மக்களுடன் சேர்ந்து பிற்படுத்தப்பட்டோரில் உள்ள ஜனநாயக சக்திகளும், பெரியாரியல்வாதிகளும் ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட வேண்டும்.

// எந்தத் தத்துவத்தையும் சில மேற்கோள்களாகச் சுருக்கி விடக் கூடாது. அந்தத் தத்துவ ஆசிரியரின் படிநிலை வளர்ச்சியைப் பார்த்து, அதன் முழுமையைப் புரிந்து கொள்ள வேண்டும். எந்தத் தத்துவத்தின் வளர்ச்சியும் அதன் மூல ஆசிரியரின் வாழ்நாளோடு முற்றுப்பெற்று விடக் கூடாது. அவ்வாறு முற்றுப்பெற்றால், அந்தத் தத்துவம் அடுத்தடுத்த தலைமுறைக்கு வழிகாட்டும் ஆற்றலை இழந்து விடும்.

// ஒரு தத்துவத்திற்கு விசுவாசமாக இருப்பது முக்கியமல்ல. ஒரு தத்துவத்தைக் கையாளும் ஆற்றல் பெறுவதுதான் முக்கியம். நாம் பின்பற்றும் எந்தத் தத்துவத்தையும் திறனாய்வுக்கு உட்படுத்தி, அதில் கழிக்க வேண்டியவற்றைக் கழிக்க வேண்டும். தோழர் வே ஆனைமுத்து அவர்கள் பெரியாரியலில் மொழி, தேசிய இனம் ஆகியவை பற்றி உள்ள வரையறுப்புகளைத் திறனாய்வு செய்து தக்கபடி மாற்றி அமைத்துள்ளார். வளர்த்துள்ளார்.

// இன்று பெரியாரியலைத் தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு முற்போக்கு அரங்குகளில் கையில் எடுத்துள்ளனர். இவர்களுள் தமிழ்த் தேசியப் புரட்சியாளர்கள் தாம் பெரியாரியலை முழுமையாகவும் செழுமைப்படுத்தியும் முன்னெடுக்க முடியும். பெரியாரியலைக் களத்தில் பயன்படுத்துவதே அதைப் பாதுகாப்பதற்கான – வளர்ப்பதற்கான சிறந்த போராட்டம்.//
[பெ. மணியரசன் கட்டுரை முற்றும்]
++++++++++++++++++++++++++++++
இந்தக் கட்டுரையில் இன்றைய சீமானையும் இன்றைய மணியரசனையும் மறுப்பதற்கான சுடர்மிகு அடிப்படைகளை அன்றைய மணியரசனே வழங்கிடக் காணலாம். நான் மாறிக் கொண்டேன் என்று சொல்ல சீமான், மணியரசன் இருவருக்குமே உரிமை உண்டு. ஆனால் இந்த மாற்றத்துக்கு அவர்கள் உரிய விளக்கம் கொடுத்தாக வேண்டும். சீமானை விடுங்கள், அவர் எப்போது என்ன பேசுவார் என்று மணியரசனாலேயே சொல்ல முடியாது. ஆனால் மணியரசன்? பெரியாரை இவ்வளவு அழகாக மதிப்பீடு செய்தவர் எப்படி திடீரென்று குட்டிக்கரணம் போட முடியும்? அவர் சீமானுக்கு முட்டுக் கொடுப்பதற்காகத் தனக்குத் தானே முரண்படுகின்றாரா? அல்லது தன்னை மறைத்துக் கொண்டு சீமானை ஆடவிட்டுப் பார்க்கிறாரா? அப்படியானால் அவரது நோக்கம்தான் என்ன?
தொடர்கிறேன்…

தோழர் தியாகு
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *