
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை பழிவாங்கும் பாஜக. முன் நின்று துணிந்து போராடும் திராவிட மாடல் முதல்வர்.
2011-ல் நடைபெற்ற கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்களவை உறுப்பினர் இடங்களை மீண்டும் ஒதுக்கீடு செய்யும் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation ) குறித்த விவாதங்கள் இந்தியா முழுவதும் எழுந்திருக்கின்றன. நீண்ட காலமாக தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசாமல் மௌனமாக இருந்த மாநிலங்கள் கூட தற்போது பேச தொடங்கியிருக்கிறது. இந்த எழுச்சிக்கு காரணம், தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள். தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை திணிப்பு போன்ற முக்கிய பிரச்சினைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களின் உரிமைகளுக்காவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் திராவிட மாடல் முதல்வர். தொகுதி மறுசீரமைப்பு என்றால் என்ன? அதன் வரலாறு, அது எவ்வாறு மேற்கொள்ளப்படும், அதனால் தென் மாநிலங்கள் அடையும் பாதிப்புகள் பற்றியும் இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 82 இல், ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மக்களவை இடங்கள், மக்கள்தொகை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு சரிசெய்யப்பட வேண்டும் எனக் கூறுகிறது.
அதே நேரத்தில், பிரிவு 81 இல், மக்களவையில் அதிகபட்சம் 550 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கலாம் என கூறப்படுகிறது – இதில் 530 பேர் மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், 20 பேர் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் இருப்பார்கள். மேலும், “மாநிலங்களுக்கான மக்களவை இடங்களின் எண்ணிக்கை மற்றும் அந்த மாநிலத்தின் மக்கள்தொகையுடன் தொடர்புடைய விகிதம், முடிந்தவரை அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்” என்றும் குறிப்பிடுகிறது. இதன் பொருள், நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் சமமான மக்கள்தொகை இருக்க வேண்டும் என்பது ஆகும்.
இந்த விதிகளில், குடியரசுத் தலைவர், ஒரு “சுயாதீன தொகுதி நிர்ணய ஆணையத்தை நியமிப்பார்”. இதில், உச்ச நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் மாநில தேர்தல் ஆணையர், உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இந்த ஆணையம் மக்கள்தொகை மாற்றங்களை ஆராய்ந்து தொகுதிகளை மறுசீரமைத்து புதிய தொகுதிகளை உருவாக்கவும் செய்கிறது. பொதுமக்களின் கருத்துகளை பெற்ற பிறகு, இறுதியான அறிக்கையை வெளியிடுகிறது. இவையே தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கான வழிமுறைகள்.
1951 இல், இந்தியாவின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, ஒவ்வொரு தசாப்தத்திலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் கோவிட் பெருந்தொற்றால் திட்டமிடப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதமானது. அதன் பிறகு, இதை முன்னெடுப்பதில் தொடர்ச்சியான தாமதம் ஏற்பட்டு வருகிறது.
தொகுதி நிர்ணய ஆணையம் இதுவரை நான்கு முறை அமைக்கப்பட்டது.
1952, 1963, 1973 மற்றும் 2002.
1952ல், மக்களவை இடங்களின் அதிகபட்ச எண்ணிக்கை 500 என நிர்ணயிக்கப்பட்டது. 1963ல், மக்கள் தொகை உயர்ந்ததை கருத்தில் கொண்டு மக்களவை இடங்கள் 522 ஆக உயர்த்தப்பட்டது. 1973ல், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 545 ஆக உயர்த்தப்பட்டது.
1976-இல், அவசரநிலை அமலில் இருந்த போது 42வது திருத்தச் சட்டம் கொண்டு மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு மக்களவை இடங்கள் 545 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. 2001-இல், 84வது திருத்தம் மூலமாக இந்த காலத்தை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டித்தது. இதன்படி, 2026-க்குப் பிறகு நடைபெறும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே புதிய தொகுதி நிர்ணயம் நடைபெறும் என்று உறுதி செய்யப்பட்டது.
2026-க்குப் பிறகு நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் தரவுகளின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடைபெறுவது அனைத்து மாநிலங்களுக்கும் சமமான தொகுதிகளை பிரித்துக் கொடுத்து நியாயமாக செயல்படுத்தப்படும் என்று தோன்றலாம், ஆனால் அது தான் இல்லை. இங்கு தென் மாநிலங்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
2011-க்குப் பிறகு மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தைக் கருத்தில் கொண்டால், வட இந்திய மாநிலங்கள் அதிக எம்.பி.களைப் பெற்று, அதிக அரசியல் செல்வாக்கைப் பெறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், தொகுதி மறுசீரமைப்பின் கீழ் இடங்கள் குறைதல் மற்றும் அதிகரிப்பு குறித்த எளிய பகுப்பாய்வுகளும், எண்ணியல் நியாயம் குறித்த வாதங்களும் முழுமையான பார்வையைத் தவறவிடுகின்றன.
தொகுதி மறுசீரமைப்பை இரண்டு வகைகளில் மேற்கொள்ளலாம். ஒன்று தற்போதுள்ள 543 மக்களவை இருக்கைகளின் எண்ணிக்கையை 848 ஆக அதிகரிப்பது. மற்றொன்று தற்போதுள்ள 543 மக்களவை இருக்கைகளின் எண்ணிக்கையை மாற்றாமல், மக்கள் தொகைக்கு ஏற்ப இருக்கைகளை மறுபகிர்வு செய்து கொடுப்பது. இந்த இரண்டு வகைகளிலும், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தெலுங்கானா போன்ற மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கையும், ஒட்டு மொத்த தொகுதி சதவீதமும் குறையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, தற்போது 42 தொகுதிகள் (7.73%) கொண்ட ஆந்திரா மற்றும் தெலங்கானா 543 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 34 (6.26%) தொகுதிகளாக குறையும். இதுவே 848 இடங்கள் கொண்ட நாடாளுமன்றம் எனில், 54 (6.37%) ஆக உயரும். என்ன தான் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், ஒட்டு மொத்த சதவீதம் என்பது கிட்ட தட்ட ஒன்றரை சதவீதம் குறைகிறது.
28 தொகுதிகள் (5.15%) கொண்ட கர்நாடகம் 543 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 26 (4.79%)
தொகுதிகளாக குறையும். இதுவே 848 இடங்கள் கொண்ட நாடாளுமன்றம் எனில், 41 (4.83%) ஆக உயரும். ஆனால் ஒட்டு மொத்த சதவீதம் என்பது ஆந்திராவை போல இங்கேயும் கிட்ட தட்ட ஒன்றரை சதவீதம் குறைகிறது.
20 தொகுதிகள் (3.68%) கொண்ட கேரளா 543 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 12 (2.21%)
தொகுதிகளாக குறையும். இதுவே 848 இடங்கள் கொண்ட நாடாளுமன்றம் எனில், 20 (2.36%) ஆக தொடரும். என்னதான் தொகுதிகளின் எண்ணிக்கயில் எந்த மாற்றமும் இல்லாவிட்டாலும் ஒட்டு மொத்த சதவீதம் என்பது 1.32 சதவீதம் குறைகிறது.
39 தொகுதிகளை (7.18%) கொண்ட தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால், 543 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 31 (5.71%) தொகுதிகளாக குறையும். இதுவே 848 இடங்கள் கொண்ட நாடாளுமன்றம் எனில், 49 (5.78%).
ஆக உயரும். ஒட்டு மொத்த சதவீதம் என்பது மற்ற தென் மாநிலங்களைப் போல இங்கேயும் கிட்ட தட்ட ஒன்றரை சதவீதம் குறைகிறது.
ஆக இந்த தொகுதி மறுசீரமைப்பு என்பது சிறப்பாக செயல்பட்டு மக்கள் தொகையை கட்டுப்பாட்டில் கொண்டு தென் மாநிலங்களை வெகுவாக பாதிக்கும். ஆனால் மக்கள்தொகை வளர்ச்சி அதிகமுள்ள உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களை பலப்படுத்தப்படும். உதாரணமாக தற்போது 80 தொகுதிகள் (14.73%) கொண்ட உத்தரப் பிரதேசம்
543 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 91 (16.76%)
தொகுதிகளாகவும், 848 இடங்கள் கொண்ட நாடாளுமன்றம் எனில், 143 (16.86%) ஆகவும் உயரும். தென் மாநிலங்களைப் போல இல்லாமல் இங்கு தொகுதிகளின் எண்ணிக்கையும் உயர்கிறது, அதே அளவில் ஒட்டு மொத்த சதவீதமும் கிட்ட தட்ட இரண்டு சதவீதம் உயர்கிறது.
பீகாரை எடுத்துக்கொண்டால் தற்போதுள்ள 40 (7.36%) தொகுதிகளிலிருந்து
543 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 50 (9.21%)
தொகுதிகளாகவும், 848 இடங்கள் கொண்ட நாடாளுமன்றம் எனில், 79 (9.31%) ஆகவும் உயரும். இங்கும் தொகுதிகளின் எண்ணிக்கையும் அதே அளவில் ஒட்டு மொத்த சதவீதமும் இரண்டு சதவீதம் உயர்கிறது.
இந்த மாற்றம், திறமையான ஆட்சி மற்றும் வளர்ச்சியைக் கொண்ட தென் மாநிலங்களின் அரசியல் புறக்கணிப்புக்கு வழிவகுக்கும்.
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், மேலே குறிப்பிட்டுள்ளது போல வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களுக்கு இடையேயான மக்களவை இடங்களின் எண்ணிக்கையில் கடுமையான ஏற்றத்தாழ்வு ஏற்படலாம். மக்கள்தொகை வளர்ச்சியை நிர்வகிக்க பல தசாப்தங்களாக முற்போக்கான கொள்கைகளைப் முன்னெடுத்து வரும் தென் மாநிலங்கள், கடுமையான அநீதியை சந்திக்க நேரிடும். மத்திய அரசின் மக்கள்தொகை கட்டுப்பாட்டுக் கொள்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வந்த வட மாநிலங்களுக்கு தொகுதி மறுசீரமைப்பு சாதகமாகவும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த பாடுபடும் தென் மாநிலங்களுக்கு பாதகமாகவும் இருக்கும்.
தேர்தல் அரசியலுக்காக, இந்தி பேசும் பகுதிகளில் பெரிய அளவில் வெற்றி பெறும் நம்பிக்கை கொண்ட பாஜக, தென் மாநிலங்களைப் புறக்கணிக்கும் செயலை தொகுதி மறுசீரமைப்பு மூலம் முன்னெடுத்துள்ளது. இதனால், தென் மாநிலங்கள் தங்கள் குரலை இழந்து, வடகிழக்கு மாநிலங்களைப் போல மாறும் ( நாடாளுமன்றத்தில் வடகிழக்கு மாநிலங்களைப் பிரதிநிதித்துவம் மிகக் குறைவு).
இந்தியா பெருமளவில் வட இந்தியாவை மையமாகக் கொண்டதாக மாறும், மேலும் தென்னிந்தியா நாடாளுமன்றத்தில் நிரந்தர சிறுபான்மையினராக இருக்கும். மக்கள்தொகையில் 18% மட்டுமே உள்ள தென் மாநிலங்கள், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35 சதவீதத்தையும், தேசிய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முற்போக்கான கொள்கைகளை முன்னெடுத்து பெரும் பங்களிப்பை வழங்குகின்றன. இதற்கு இம்மாநிலங்களுக்கு கிடைக்கப் போகும் பரிசு “பிரதிநிதித்துவக் குறைப்பு”.
மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது, பெண்களை பள்ளிக்கு அனுப்பியதற்காக அல்லது பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் சமூக இயக்கங்களைக் கொண்டிருந்ததற்காக தென் மாநிலங்களை தண்டிப்பதாகும். நாடாளுமன்றத் தொகுதிகளின் பகிர்வு தெற்கிற்கான பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்தால், அது தென் மாநிலங்களுக்கு அரசியல் செல்வாக்கு மற்றும் நிதிப் பகிர்வு அடிப்படையில் ஏற்கனவே இருப்பதை விட நிலைமையை மிக மோசமாக்கும்.
ஏற்கனவே, பாஜகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால், வடக்கின் அரசியல் தலைவர்கள் அனுபவிக்கும் அரசியல் சூழலை போல, தெற்கின் அரசியல் தலைவர்களுக்கு ஒன்றிய அரசின் அரசியல் சூழலில் போதுமான பிரதிநிதித்துவமும் முக்கியத்துவமும் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் மக்கள் தொகையை மையமாகக் கொண்டு தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்வது, தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் பாதிப்படையச் செய்யும். அரசியல் ஈர்ப்பு மையம் வடக்கு நோக்கி நகர்கிறது, அதே நேரத்தில் பொருளாதார ஈர்ப்பு மையம் தெற்கு நோக்கி நகர்கிறது என்பது ஒரு முரண்பாட்டை உருவாக்கியுள்ளது. நாட்டிற்கு அதிக பொருளாதார பங்களிப்பை அளித்தாலும், தெற்கு கலாச்சார ரீதியாக ஓரங்கட்டப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் இந்திய கூட்டாட்சி அமைப்பு மேலும் பிளவுபடும் அபாயத்தில் உள்ளது.
அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு திருத்தப்பட்ட மக்கள்தொகை எண்ணிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எல்லை நிர்ணயம் செய்வதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் கடுமையாக எதிர்க்க வேண்டும். தேசிய மக்கள்தொகை கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது, முற்போக்கான மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்களில் ஏற்படும் சரிவு அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்காது என்று நாடாளுமன்றம் அனைத்து மாநிலங்களுக்கும் உறுதியளித்தது. ஒன்றிய அரசும் நாடாளுமன்றமும் அளித்த வாக்குறுதியை ரத்து செய்ய முடியாது. அநீதியையும் துன்பத்தையும் மௌனமாக விழுங்குவதற்குப் பதிலாக, தென் மாநிலங்களின் தலைவர்களும் மக்களும் தமிழ் நாட்டு முதல்வரோடு இணைந்து வரவிருக்கும் பேராபத்தை உணர்ந்து, தங்கள் அரசியல் சார்புகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களைத் தாண்டி, ஒன்றிய அரசின் மீது தொடர்ச்சியான அழுத்தத்தை செலுத்துவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும், அடுத்த தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடத்தப்பட்டாலும் சரி, தெற்கு மாநிலங்களில் தொகுதி மறுசீரமைப்பை இன்னும் 25 ஆண்டுகளுக்கு அல்லது அனைத்து மாநிலங்களும் மக்கள்தொகை நிலைப்படுத்தல் அடையும் வரை முடக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உறுப்பு நாடுகளுக்கு இடையே இடங்களை ஒதுக்குவதற்கான கோட்பாட்டு ரீதியாக நியாயமான வழிமுறையின் அடிப்படையில் “கேம்பிரிட்ஜ் சமரசம்” போன்ற ஒரு கணித மாதிரியை உருவாக்க மக்கள்தொகை மற்றும் புள்ளிவிவர நிபுணர்களைக் கேட்கலாம். அந்த சூத்திரத்தை நமது தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கலாம். எதுவாக இருந்தாலும், தொகுதி மறுசீரமைப்பு காரணமாக தெற்கு எந்த அநீதியையும் அனுபவிக்கக்கூடாது.