அமித் ஷாவுக்கு பிறகு ஓம் பிர்லாவும் – அம்பேத்கர் படம் விடுபட்ட விவகாரம்; சு.வெ கண்டனம்
Politics

அமித் ஷாவுக்கு பிறகு ஓம் பிர்லாவும் – அம்பேத்கர் படம் விடுபட்ட விவகாரம்; சு.வெ கண்டனம்

Dec 21, 2024
  • இது வரலாற்றைத் திரிக்கும் திட்டமிட்ட செயலாகும். இந்தக் காலண்டர்களை திரும்பப்பெற வேண்டும். இந்தச் செயலுக்காக மக்களவைச் செயலகம் மன்னிப்பு கோர வேண்டும்” – சு. வெங்கடேசன்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்தக் காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பதிலாகக் கடவுளின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு (காங்கிரஸ்) சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” என்று நாடாளுமன்றத்தில் பேசியது கடந்த நான்கு நாள்களாக அரசியலில் பெரும் விவாதப்பொருளாக வெடித்துக்கொண்டிருக்கிறது. அமித் ஷா மன்னிப்பு கேட்டு, பதவி விளக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள சிறப்பு காலண்டரில் காந்தி, அம்பேத்கர் படம் தவிர்க்கப்பட்டதற்கு மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சு. வெங்கடேசன், “இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள சிறப்பு காலண்டரில் காந்தி மற்றும் அம்பேத்கரின் படமோ பெயரோ இல்லை. இது வரலாற்றைத் திரிக்கும் திட்டமிட்ட செயலாகும். இந்தக் காலண்டர்களைத் திரும்பப் பெற வேண்டும். இந்தச் செயலுக்காக மக்களவைச் செயலகம் மன்னிப்பு கோர வேண்டும்.” என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைக் குறிப்பிட்டு, “நேற்றைய தினம் மக்களவைச் செயலகத்திலிருந்து 2025-ம் ஆண்டுக்கான மாதாந்திர நாட்காட்டி உங்களின் கடிதத்துடன் எங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டைக் கொண்டாடுவதன் வெளிப்பாடாகவும், அரசியல் சட்டத்தின் வரலாற்றுப் பயணத்தை நினைவு கூறும் விதமாகவும் இந்த மாதாந்திர நாட்காட்டி உருவாக்கப்பட்டுள்ளதாக நீங்கள் எழுதியுள்ளீர்கள்.

ஆனால், நீங்கள் அனுப்பி வைத்துள்ள மாதாந்திர நாட்காட்டி பெரும் அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது. இந்திய அரசியல் சட்ட வரலாற்றுப் பயணத்தை நினைவு கூறும் இந்த நாட்காட்டியில் தேசத் தந்தை காந்தியாரின் படமோ, அரசியல் சட்ட வரைவுக் குழுவின் தலைவர் அண்ணல் அம்பேத்கரின் படமோ இல்லை. இந்த இருபெரும் ஆளுமைகளின் பங்களிப்பை மறைக்க ஒவ்வொரு நாளும் ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன்புறமிருந்த அண்ணல் காந்தியார், அண்ணல் அம்பேத்கர் இருவரின் சிலையையும் அகற்றி நாடாளுமன்ற கட்டிடத்தின் பின்புறம் கொண்டுபோய் வைத்துள்ளீர்கள்.

இப்பொழுது இந்திய அரசியல் சட்டத்தின் 75-வது ஆண்டைக் கொண்டாடுவதன் அடையாளமாகச் சிறப்பு மாதாந்திர நாட்காட்டியை வெளியிட்டு அதில் இரு பெரும் தலைவர்களின் படங்களோ, பெயர்களோ இல்லாமல் அச்சிட்டுள்ளீர்கள். இந்தக் காலண்டரில் அரசியல் சாசனத்தை வரைந்த ஓவியர்கள், கையெழுத்து பிரதியாளர்கள் படங்களும் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அவர்களின் பங்களிப்பு போற்றத்தக்கது, அங்கீகரிக்கப்பட வேண்டியது. ஆனால், அரசியல் சாசனத்தின் வரைவுக் குழு தலைவராக இருந்து பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே அதற்கு வடிவம் தந்த அண்ணல் அம்பேத்கரின் பெயர், படம் எப்படி விடுபட முடியும்?

இந்திய விடுதலைப் போராட்டத்தை ஓர் வெகுமக்கள் இயக்கமாக மாற்றிய தேசத் தந்தை காந்தியாரின் பெயரும் படமும் எப்படி விடுபட முடியும்? இது வரலாற்றைத் திரிக்கும் திட்டமிட்ட செயலாகும். நவீன இந்தியாவை உருவாக்குவதில் இவ்விரு பேராளுமைகள் நல்கிய அரும் பங்களிப்பை அவமதிக்கும் செயலாகும். ஏற்கனவே அண்ணல் அம்பேத்கர் பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட கருத்துக்கள் கோடான கோடி மக்களின் மனதைப் புண்படுத்தி உள்ளது. தற்போது இந்த காலண்டர் மேலும் மக்கள் உணர்வுகளை ரணமாக்கக் கூடியதாகும் என அஞ்சுகிறேன். பெரும் காயத்தை மக்கள் மனதில் இது உருவாக்கும்.

உங்களின் இந்தச் செயல் இந்திய அரசியல் சாசன வரலாற்றின் உருவாக்கத்தை மேன்மைப்படுத்துவதாக இல்லை. மாறாக உங்களின் எண்ணம் அதற்கு நேர் எதிராகச் செயல்பட்டிருக்கிறது. ஆகவே, இந்தக் காலண்டரை திரும்பப்பெற்று தேசத் தந்தை காந்தியார், அண்ணல் அம்பேத்கர் ஆகிய இரு ஆளுமைகளுக்கும் உரிய இடம் தருகிற புதிய காலண்டரை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *