தமிழக தேர்தல் களம் அதிரடி: அதிமுக கூட்டணியில் பாமக – எடப்பாடி பழனிசாமி-அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Politics Tamilnadu

தமிழக தேர்தல் களம் அதிரடி: அதிமுக கூட்டணியில் பாமக – எடப்பாடி பழனிசாமி-அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Jan 7, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் மிகப்பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிமுக – பாமக கூட்டணி இன்று (ஜனவரி 7) அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

க்ரீன்வேஸ் சாலையில் நடந்த முக்கிய சந்திப்பு

சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நேரில் சென்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக தரப்பில் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் பாமக தரப்பில் வழக்கறிஞர் பாலு, திலகபாமா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இரு தலைவர்களும், வரும் சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து களம் காண்பதை உறுதி செய்தனர்.

“மகிழ்ச்சியான தருணம்” – அன்புமணி ராமதாஸ்

கூட்டணி குறித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், “எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியில் இன்று இணைந்திருக்கிறோம். இது மிகவும் வலுவான கூட்டணி. நான் மேற்கொண்ட நடைப்பயணத்தின் போது, திமுக அரசு மீது மக்கள் மிகுந்த ஆத்திரத்தில் இருப்பதை உணர முடிந்தது. சமூக நீதிக்கு எதிராகவும், உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராகவும் செயல்படும் இந்த திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்,” எனத் தெரிவித்தார்.

தொகுதிப் பங்கீடு விரைவில்..

எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “பாமக எங்களுடைய கூட்டணியில் இணைந்திருக்கிறது. தொகுதி எண்ணிக்கை குறித்து ஆலோசித்து முடிவு செய்திருக்கிறோம். இது குறித்த விரிவான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்,” என்றார்.

முன்னதாக, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வந்திருந்தபோது பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்த மெகா கூட்டணி அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *