அன்பே சிவம் முதல் உச்ச நீதிமன்றம் வரை: தலைமை நீதிபதி கவாய் மீதான தாக்குதலும் சனாதனப் போரும்!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பூஷன் இராமகிருஷ்ண கவாய் (B.R. Gavai) மீது நீதிமன்ற வளாகத்திலேயே மூத்த வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயன்ற சம்பவம் இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியைப் பதித்துள்ளது. “சனாதன தர்மத்தை” அவமதித்ததாகக் கூறி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் முயற்சி, நீதித்துறையின் மாண்பையும், சமூகத்தில் நிலவும் மதவாதப் பிளவுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
‘விஷ்ணுவிடம் கேளுங்கள்’ – தலைமை நீதிபதியின் கூர்மையான கருத்து
இந்தச் சம்பவத்திற்கான ஆரம்பப் புள்ளி, கடந்த மாதம் மத்தியப் பிரதேசத்தின் புகழ்பெற்ற கஜுராஹோ கோயில் வளாகத்தில் உள்ள ஒரு விஷ்ணு சிலையைச் சீரமைக்கக் கோரி தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு முன் வந்த வழக்கில்தான் தொடங்கியது.

தலைமை நீதிபதி கவாய், கஜுராஹோ கோயில் இந்திய தொல்லியல் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் உள்ளது என்பதையும், தொல்லியல் துறையின் பணி பழமை மாறாமல் பாதுகாப்பதுதான் என்பதையும் தெளிவுபடுத்தினார். சீரமைப்பு என்ற பெயரில் பழமையான சிலைக்குப் புது மெருகு பூசுவது, புதிய சிலைகளை வைப்பது போன்றவை தொல்லியல் விதிகளுக்கு முரணானது என்பதை நீதிபதி உணர்ந்தார்.
இந்தச் சூழலில்தான், நீதிமன்ற நேரத்தை வீணடித்து வீணாக வாதாடிய மனுதாரரைப் பார்த்து, “நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், சிலை சீரமைப்புக் கோரிக்கையை கடவுளிடமே சென்று கேளுங்கள் (Please go and ask your Lord Vishnu). அவரே சரி செய்து கொள்வார்” என்று கூறி, வழக்கை தள்ளுபடி (Dismiss) செய்தார்.
அன்பே சிவம் திரைப்படத்தின் எதிரொலி?
நீதிபதி கவாயின் இந்தக் கருத்து, கமல்ஹாசனின் புகழ்பெற்ற திரைப்படமான ‘அன்பே சிவம்’ படத்தின் இறுதிக் காட்சியில் வரும் நாசர்-கமல் உரையாடலை நினைவூட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தான் மரணப்படுக்கையில் விழுந்தது ‘அழிக்கிற தெய்வம் சிவனால்’ தான் என்று நம்பிய நாசர், தனது மகளின் மணவாழ்வைக் கெடுக்க வேண்டாம் என்று கமலைக் கெஞ்சும்போது, கமல், “நீங்க வேணா உங்க சிவன்கிட்டப் போயி நான் எதுவும் யார்கிட்டயும் சொல்லாமப் பாத்துகிடச் சொல்லுங்க” என்று கிண்டலாகக் கூறுவார். இதுவே பயத்தில் நாசரை கமலைச் சரணடைய வைக்கும்.
நீதிபதி கவாயின் ‘விஷ்ணுவிடம் கேளுங்கள்’ என்ற நகைச்சுவை கலந்த சட்டப்பூர்வக் கருத்தும், தீவிர மத நம்பிக்கை கொண்டவர்களை சட்டத்தின் முன் நிற்க வைக்கும் ஒரு அழுத்தமான வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
காலணி வீச்சு: சனாதன உணர்வுகளின் வெளிப்பாடு
தலைமை நீதிபதி கவாயின் இந்தக் கூற்று சமூக வலைதளங்களில் பெரிதாகப் பரவி சர்ச்சையானது. சிலர் இதை மத உணர்வுகளை இழிவுபடுத்துவதாகச் சித்தரித்தனர். இந்தச் சூழலில்தான், இன்று நீதிமன்ற நடவடிக்கையின்போது, சுமார் 70 வயது மதிக்கத்தக்க டெல்லி பார் கவுன்சில் வழக்கறிஞர் ஒருவர், தலைமை நீதிபதியின் கருத்தைத் தாங்க முடியாமல், தன் காலணியைக் கழற்றி அவர் மீது வீச முயன்றுள்ளார்.
“சனாதனத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது” என்று அவர் கூச்சலிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் உயரிய அதிகார அமைப்பான உச்ச நீதிமன்றத்திலேயே நீதிபதியின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் முயற்சி, ‘தற்குறிச் சங்கிகளின்’ விதண்டாவாதம் நீதிமன்றத்தின் உச்ச வரையிலும் ஊடுருவியிருப்பதைக் காட்டுகிறது.
அடக்குமுறை மனநிலை: முதல்வரின் கண்டனம்
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான இந்த வெட்கக்கேடான தாக்குதல் நமது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இது சமூகத்தில் அடக்குமுறை மற்றும் படிநிலை (Hierarchical) மனநிலை எவ்வளவு ஆழமாக நீடிக்கிறது என்பதைக் காட்டுகிறது” என்று அவர் கூறியிருப்பது, இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள சாதிய/மதவாத அரசியலைக் குறிப்பதாகப் பார்க்கப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் மீது கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் மதம் அல்லது இனம் பார்த்து எந்த நீதியரசருக்கெதிராகவும் இப்படி நடந்துக் கொள்ள எவரும் துணியக் கூடாது என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்தத் தாக்குதல் முயற்சி இந்தியாவின் மானத்தை உலகரங்கில் கேள்விக்குறியாக்கியுள்ளது.
