பீகார் SIR: “4 நாள்தான் கெடு; 65 லட்சம் பேரின் லிஸ்ட்டையும்…” – தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம்!
National

பீகார் SIR: “4 நாள்தான் கெடு; 65 லட்சம் பேரின் லிஸ்ட்டையும்…” – தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம்!

Aug 14, 2025

பீகார் மாநிலத்தின் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேர் யார் யார் என்ற விவரங்களை அடுத்த நான்கு நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மனுதாரர்களின் வாதங்கள் பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தீவிர வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு (Special Intensive Revision – SIR) பணிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பாகவும், ஏ.டி.ஆர் உள்ளிட்ட அமைப்புகள் சார்பாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் மூன்றாவது நாளாக இன்று நடைபெற்றது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நிஜாமுதீன் பாஷா, சோயப் ஆலம் ஆகியோர், “ஒருவரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குகிறார்கள் என்றால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். ஆனால், அதைக்கூட தேர்தல் ஆணையம் தெரிவிக்க மறுக்கிறது. தன்னிச்சையாகத்தான் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. பீகார் மாநிலத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோர் சமுதாயத்தில் வெறும் 0.37 சதவிகிதம் பேருக்குதான் கணினி பயன்படுத்தும் வாய்ப்பிருக்கிறது என மாநிலத்தின் சாதிவாரி கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டிருக்கிறது. இப்படி அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் கூட நிறைய சிக்கல்கள் இருக்கும் நிலையில், ஒரே நாளில் பல்லாயிரம் ஆவணங்களைத் தேர்தல் ஆணையம் கையாள்வதாகக் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது?” என வாதங்களை முன்வைத்தனர்.

தேர்தல் ஆணையத்தின் விளக்கம் மற்றும் நீதிமன்றத்தின் கேள்வி அதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, “சுமார் 7.89 கோடி வாக்காளர் சரிபார்ப்பு படிவங்கள் பெறப்பட்டன. அதில் 22 லட்சம் பேர் இறந்து விட்டதன் காரணமாக அவர்களது பெயர் நீக்கம் உள்ளிட்ட 65 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன” என நீதிபதிகளிடம் கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த விளக்கத்திற்குப் பதிலளித்த நீதிபதிகள், “நீங்கள் 65 லட்சம் பேரை நீக்கியிருப்பதாகவும், அதில் 22 லட்சம் பேர் இறந்துவிட்டதாகவும் கூறுகிறீர்கள். ஆனால், இன்னொரு பக்கம் உயிருடன் இருப்பவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதை எதிர் தரப்பினர் ஆதாரத்துடன் கூறியிருக்கிறார்கள். லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றால் அதன் விவரங்களை நீங்கள் ஏன் வெளியிடாமல் இருக்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், “ஆதார் அட்டை என்பது குடியிருப்பு மற்றும் தனி அடையாளத்துக்கான ஆவணமாகக் கருதப்பட வேண்டும்” என்றும் உத்தரவுகளைப் பிறப்பித்தனர். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 12) சமூக செயற்பாட்டாளர் யோகேந்திர யாதவ், ‘இறந்துவிட்டதாக’ அறிவிக்கப்பட்ட இரண்டு வாக்காளர்களை நீதிமன்றத்தில் நேரடியாக முன்னிறுத்தி வாதங்களை முன்வைத்ததை நீதிபதிகள் மறைமுகமாகக் குறிப்பிட்டனர். இந்த வழக்கின் விசாரணை நாளை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *