
ஆணவக்கொலைகளும், ஈழக்கனவும் – பாகம் 1:
தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் சாதி ஆணவக்கொலைகளில் கொல்லப்பட்டவர்கள் பெரும் பாலானோர் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இளம்பெண்கள் ஆவர். பார்ப்பனர்கள் தாங்கள் யோகியமானவர்கள் என்று கரவம் பேச கதவுகள் திறக்கப்பட்டன.
விருத்தாச்சலம் கண்ணகி – முருகேசன் (2003), தொடங்கி, திருவாரூர், மாற்றுத் திறனாளி அமிர்த வள்ளி – பழனியப்பன் – கைக்குழந்தை (2014), தருமபுரி இளவரசன் (2013), சேலம், கோகுல்ராஜ் (2015), உசிலம்பட்டி விமலா தேவி (2014), உடுமலை சங்கர் (2016), கன்னியாகுமரி சிவா-சவுமியா (2013), ஒசூர், நந்தீஸ் – சுவாதி (2018), திருநெல்வேலி இசக்கிசங்கர் – சத்யபாமா (2018), தூத்துக்குடி பேச்சியம்மாள் – சோலைராஜ் (2019), விருத்தாச்சலம் திலகவதி (2019) கோவை கண்மணி – கனகராஜ் (2019) நாகை ஜனனி (2019), கரூர் ஹரிகரன்(2019), புதுக் கோட்டை சாவித்திரி (2020) திருவண்ணா மலை சுதாகர் (2020), கன்னியாகுமரி சுரேஷ் (2021), கும்பகோணம் பிரபாகரன் (2021), கள்ளக்குறிச்சி அரிகிருஷ்ணன், நிவேதா (2021)….. கவின்(2025) எனவொரு நீண்ட கொலைப்பட்டியல் இதற்கு எடுத்துக்காட்டாக நீள்கிறது.
இவர்களில் பெரும் பாலானோர் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் என்பது மிக முக்கியம். இக்கொலைகள் அனைத்தும் தமிழகத்தையே உலுக்கிய மிகக்கொடூரமான சாதி ஆணவக் கொலைகளாகும்.
சாதி ஆணவக்கொலைகள் நடப்பதற்கு முக்கியக் காரணிகளாக இருப்பது சாதி ஆதிக்கம், அகமண முறை, வர்க்கம், ஆணாதிக்க பிற்போக்குத்தனம், சாதியப் பஞ்சாயத்துகள், குடும்ப சொத்துடமை, முதலாளித்துவ வளர்ச்சி, நிலவுடமை கிராமப்புற சாதியக் கட்டமைப்புகள், வாக்கு வங்கி அரசியல் ஆதாயம், தலித் அல்லாதோர் கூட்டமைப்பு போன்ற காரணிகளே அடிப்படையாக இருக்கின்றன என்று கூறப்படுவது உண்மையே என்றாலும்,
இவையனைத்தும் வேரூன்ற வேறொரு முக்கிய காரணியாக ” ஈழ அரசியல்” மையமாக உள்ளது என்ற கசப்பு கருத்தை இந்த தொடர் வெளிக்கொணரும் !
90களுக்குப் பின்பான உலக மய, தாராளமய, தனியார்மய கொள்கைகளால் பெரியாரிய இயக்க அரசியல் தளர்ந்தது அல்லது தொய்வு அடைந்துள்ளது என்று நமக்கு நாமே ஆறுதல் சொல்லிகொண்டாலும், அதே காலகட்டத்தில் ” ஈழம்” குறித்த அரசியல் மிக ஜோராக இருந்தது என்பது நம் மனசாட்சிக்கு தெரியாதா என்ன ?
நமது ” தமிழ் நாட்டில்” பெரியார் ஆரம்பித்து வைத்த செயல்பாடுகள் பல செய்து முடிக்க வேண்டிய காலத்தில், மண்டல கமிஷன் போன்ற அசாத்திய மாற்றம், ராஜீவ் படுகொலை, திமுக ஆட்சி களைப்பு என்று பல நெருக்கடிகள் இருந்தும் தமிழ் நாட்டில் இருந்து ஏன் “ஈழம்” நோக்கி நம் தோழர்கள் நகர்ந்தனர் ? அதற்க்கு பின்பு இருக்கும் உளவியல் என்ன ? மானுட-சமூகவியல் காரணி என்ன என்பதை முழுமையாக புரிந்துகொண்டால் மட்டுமே சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கைகள் ஒழிப்பு பிரச்சார தொய்வின் காரணியை புரிந்துகொள்ள முடியும்…… ! அதனை முற்போக்கு சமதர்ம அரசியல், மரபுசார்ந்த தேசியவாதம் என்ற இரண்டு அரசியல் சூத்திரம் மூலம் விடை காணலாம் அடுத்த பதிவில் !
நெய்வேலி அசோக்
பொதுச்செயலாளர்
தோழர் களம்